முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினை - கேரளத்துடன் பேச்சுவார்த்தை கூடவே கூடாது! முதலமைச்சருக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள் |
|
|
|
வெள்ளிக்கிழமை, 02 டிசம்பர் 2011 19:26 |
முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: முல்லைப் பெரியாறு அணையின் வலிமை குறித்து ஆராய உச்சநீதிமன்றம் அமைத்த உயர்மட்டக்குழு அணையை நன்கு ஆராய்ந்தும், சகலவிதமான சோதனைகளையும் செய்து பார்த்து தனது அறிக்கையை டிசம்பர் 5ஆம் தேதி கூடும் கூட்டத்தில் இறுதி செய்து உச்சநீதிமன்றத்திற்கு அளிக்க இருக்கிறது.
அணை பலவீனமாக இருக்கிறது என்ற தன்னுடைய பொய்மை நிறைந்த குற்றச்சாட்டு அம்பலமாகிவிட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தில் கேரள அரசியல்வாதிகள் கூப்பாடு போட்டு வருகிறார்கள். மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை நடத்த தமிழகத்தை ஒப்புக்கொள்ள வைப்பதற்காகப் பிரதமரைச் சந்தித்து வற்புறுத்தி இருக்கிறார்கள். இருமாநிலங்களுக்கிடையே அதிகாரிகள் மட்டத்திலேயோ, முதலமைச்சர் மட்டத்திலேயோ பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டால் அதைக் காரணமாகக் காட்டி உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கையை நிறுத்தலாம் என கேரளம் நினைக்கிறது. கேரளத்தின் இந்த சூழ்ச்சிக்கு தமிழகம் இரையாகிவிடக்கூடாது. கடந்த 30 ஆண்டுகாலத்தில் பலமுறை பேச்சு நடத்தியும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டும், அணையின் நீர்மட்டத்தை உயர்த்த முடியாது என்ற கேரளத்தின் பிடிவாதமானப் போக்கு மாறவில்லை. எனவே பிரதமர் வற்புறுத்தினாலும், அதிகாரிகள் மட்டத்திலும், முதலமைச்சர்கள் மட்டத்திலும், எவ்விதப் பேச்சுவார்த்தைக்கும் இணங்கக்கூடாது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும்படி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை வேண்டிக்கொள்கிறேன். |