கூடங்குளம் : அரசின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது! கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் - பழ. நெடுமாறன் வேண்டுகோள் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2012 20:03 |
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதென தமிழக அரசு செய்துள்ள முடிவு அனைவருக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் திட்டமிட்டு செயற்கையாக மின் பற்றாக்குறையை உருவாக்கி கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட்டால்தான் இது நீங்கும் என்ற மாயத்தோற்றத்தை மத்திய அரசு திட்டமிட்டு ஏற்படுத்தியதின் விளைவுதான் இந்த முடிவு ஆகும். உலகெங்கும் பல நாடுகள் அணுமின் நிலையங்களை மூடி வருகையில் புதிதாக தமிழ்நாட்டில் திறப்பதென்பது தொலைநோக்கற்றதாகும். இந்த நிலையத்தில் விபத்து ஏற்பட்டால் தென் தமிழகம் முழுமையாக பெரும் அழிவுக்கு உள்ளாகும் என்ற அச்சத்தின் காரணமாக மக்கள் இதற்கு எதிராகப் போராடி வருகின்றனர். அந்த மக்களின் அச்சத்தைப் போக்காமல் இந்நிலையத்தைச் செயற்படுத்துவது என்பது சரியல்ல. உடனடியாக அணு உலை எதிர்ப்புக் குழுவைச் சேர்ந்தவர்களை அழைத்துப் பேசவேண்டும். ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும். அந்த மக்களின் பிரதிநிதிகளிடம் பேசி முடிவுக்கு வரவேண்டும் என தமிழக அரசை நான் வலியுறுத்துகிறேன். |