முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: முல்லைப்பெரியாறு அணை வலிமையாக இருக்கிறதா என்பதை ஆராய்வதற்காக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட உயர்நிலைக் குழு அணையின் நீர்மட்டத்தை அதிகபட்சம் 152அடி வரை உயர்த்தினாலும் அணை மிகுந்த பாதுகாப்பாகவே இருக்கும். 1979ஆம் ஆண்டுக்கு முந்திய நிலையில் அணையில் நீரைத் தேக்கலாம் என திட்டவட்டமாகவும் தெளிவாகவும் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் மற்றும் முன்னாள் நீதிபதிகள் கே.டி. தாமஸ், ஏ.ஆர். இலட்சுமணன், சி.டி. தாட்டே, டி..ேக மேத்தா ஆகியோர் அடங்கிய குழு நியமித்த வல்லுநர்குழு அணையை பலவிதங்களிலும் சோதனை செய்து பார்த்து அளித்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு உயர்நிலைக் குழுவினர் உச்சநீதிமன்றத்தில் தங்கள் அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளனர். உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளைக் கொண்ட குழு அளித்த அறிக்கையைக் கண்டித்து கேரள நீர்வளத்துறை அமைச்சர் பி.ஜே. ஜோசப் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தரம் தாழ்ந்தவையாகும். குறிப்பாக நீதிபதி தாமஸ் கேரளாவைச் சேர்ந்தவராக இருந்தாலும் தங்களுக்கு ஆதரவாகச் செயல்படவில்லை என்று கூறியிருப்பதற்கு உச்சநீதிமன்றம் அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். கடந்த 32 ஆண்டுகளில் பல நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டு அணையின் வலிமை சோதிக்கப்பட்டது. இறுதியாக உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவும் அணை வலிமையாக இருக்கிறது என்று கூறியபிறகாவது அதை ஏற்று செயல்பட கேரள அரசு முன்வரவேண்டும். ஆனால் அவர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை என்ற பெயரால் பிரச்சினையை இழுத்தடிக்க முயற்சி செய்கிறார்கள். இந்த மாயவலையில் சிக்கி ஏமாறக்கூடாது என தமிழக அரசை வேண்டிக்கொள்கிறேன். பெரியாறு அணைப் பிரச்சினையில் தமிழ்நாட்டிற்குத் தொடர்ந்து வஞ்சனை இழைத்துவரும் கேரளம் இப்போது கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து தங்களுக்கு 500 மெகாவாட் மின்சாரம் அளிக்க வேண்டும் என உரிமை கொண்டாடி இருக்கிறார்கள். அணுஉலை அபாயகரமானது எங்களுக்கு வேண்டவே வேண்டாம் என மறுத்த கேரளம் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட அணு உலையிலிருந்து மின்சாரத்தில் மட்டும் பங்கு கேட்பது என்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அணு உலை வெடித்து அபாயம் நேருமானால் அது தமிழக மக்களுக்கு ஆனால் மின்சாரம் மட்டும் தங்களுக்கு வேண்டும் என உச்ச கட்ட சுயநலத்தோடு கேரளம் நடந்துகொள்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன். கூடங்குளம் அணுஉலையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அனைத்தும் தமிழகத்திற்கே வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன். |