பெரியாறு அணைப் பாதுகாப்புக்கு தமிழக காவல்படை - முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்புக்கு பழ. நெடுமாறன் பாராட்டு PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 28 மே 2012 20:11
முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
முல்லைப்பெரியாறு அணையின் வலிமையைப் பரிசோதிக்க உச்சநீதிமன்றம் முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் அமைத்த ஆலோசனைக்குழு அணையின் எட்டு இடங்களில் மேலிருந்து கீழ்வரை துளையிட்டு சோதனை செய்து அணை வலிமையாக இருப்பதாக கூறிவிட்டது.
அந்தத் துளைகளை மூடும்படி ஆணையிடப்பட்டும் அவ்வாறு செய்யவிடாமல் தமிழக அதிகாரிகளை கேரள காவல்துறையினர் தடுத்து திருப்பியனுப்பியதைக் கண்டிக்கும் வகையில், பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் அணை மராமத்துப் பணிகளை செய்ய தமிழக அரசை அனுமதிக்க வேண்டும். மேலும் எதிர்காலத்தில் இதுபோன்று கேரள அரசு அடாவடியாக நடந்தகொள்வதை தடுக்கும் வகையில் அணையின் பாதுகாப்புக்கு மத்திய பாதுகாப்புப் படையை அனுப்ப வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் தமிழகக் காவல்படையை அனுப்ப நேரிடும், என எச்சரிக்கை விடுத்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவின் துணிவை வரவேற்றுப் பாராட்டுகிறேன்.
பெரியாறு அணைப் பிரச்சினையில் தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கத்தயாராகிவிட்டது என்பதை இந்த அறிவிப்பு காட்டுகிறது. பெரியாறு அணைப் பகுதியில் ஆரம்பம் முதல் அதன் பாதுகாப்பு தமிழக காவல்துறையிடம்தான் இருந்து வந்துள்ளது. இடைக்காலத்தில் இந்த அதிகாரத்தை கேரள காவல்துறைக்கு விட்டுக்கொடுத்தது மாபெரும் தவறாகிவிட்டது.
எனவே முதலமைச்சர் எச்சரித்துள்ளபடி தமிழக காவல்துறையை பெரியாறு அணைப் பகுதியில் உடனடியாக நிறுத்தவேண்டும். பெரியாறு அணையிலும் அருகிலுள்ள பேபி அணையிலும் பல்லாண்டுக் காலமாக கேரள அரசால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த அனைத்து மராமத்துப் பணிகளையும் உடனடியாக நிறைவேற்றுவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வரை வேண்டிக்கொள்கிறேன்.
மேலும் பெரியாறு அணைப் பகுதியில் தமிழகத்திற்கு சொந்தமானதும் தமிழகம் குத்தகை செலுத்திவருகிறதுமான நிலப்பரப்பில் மலையாளிகளால் திட்டமிட்டுச் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்றும் பணியினையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை நான் வலியுறுத்துகிறேன்.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.