பெரியாறு அணைப் பகுதிக்கு தமிழக காவல் படையை உடனே அனுப்புக! - பழ. நெடுமாறன் வேண்டுகோள் |
|
|
|
திங்கட்கிழமை, 23 ஜூலை 2012 16:18 |
முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: முல்லைப்பெரியாறு அணையைப் பராமரிக்க தமிழக அரசுக்கு அனுமதி கொடுத்து உச்சநீதிமன்றம் ஆணைப்பிறப்பித்திருப்பதை நான் வரவேற்கிறேன். ஆனால் அணை பராமரிப்பு பணிகளை மேற்பார்வையிட தமிழகம்-கேரளம்-மத்திய அரசு ஆகியவற்றின் பொறியாளர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்படவேண்டும் என அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டிருப்பது ஆணையின் நோக்கத்தையே சிதறடித்துவிடும்.
ஏற்கெனவே மத்திய அரசின் பொறியாளர் தலைமையில் பல குழுக்கள் அமைக்கப்பட்டு செய்யப்பட்ட முடிவுகளை கேரள அரசு ஏற்க மறுத்துவிட்டது. எனவே, அணைப் பராமரிப்பு பணிகளில் இந்தக் குழுவில் உள்ள தனது பிரதிநிதி மூலம் கேரள அரசு முட்டுக்கட்டை போடும் அபாயம் உள்ளது. பராமரிப்பு பணி தமிழக அரசைச் சார்ந்தது என்று சொன்னால் தமிழக பொறியாளர்கள்தான் முழுமையாக அதை செய்ய வேண்டும். எனவே பராமரிப்பு பணிகளை மேற்பார்வையிட குழு அமைக்கும் யோசனையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். கேரள போலீசின் பாதுகாப்பில் அணை இருக்கும் வரை தமிழக அதிகாரிகள் அங்கு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியாது. அணையின் பராமரிப்பு தமிழக அரசை சார்ந்தது என உச்சநீதிமன்றம் வழங்கிய ஆணையின்படி அணையின் பாதுகாப்புக்கு உடனடியாக தமிழக போலீசை அங்கு அனுப்ப உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் ஜெயலலிதாவை வேண்டிக்கொள்கிறேன். நமது போலீஸ் படை அங்கு இல்லை என்று சொன்னால் பராமரிப்பு பணிகளை நாம் நிச்சயம் நிறைவேற்றவே முடியாது. சமரச பேச்சுக்கு தயாராக இருப்பதாக கேரள அரசு கூறியதின் பேரில் மீண்டும் தமிழகம் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் அதுவரை வழக்கு விசாரணையை தள்ளி வைத்திருப்பதாக உச்சநீதிமன்றத்தின் அறிவிப்பு தமிழர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. 1979ஆம் ஆண்டில் தொடங்கி கடந்த 32ஆண்டு காலமாக கேரளத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறவில்லை. அணையின் நீர்மட்டத்தை 145அடிக்கு உயர்த்தலாம் என உச்சநீதிமன்றம் அளித்தத்த் தீர்ப்பையும் கேரளம் மதிக்கவில்லை. நீதியரசர் ஆனந்த தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையும் கேரளம் ஏற்க மறுத்துவிட்டது. இந்த நிலையில் அதனுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனற்றது. காலம் கடத்துவதற்காக கேரளம் கையாண்ட இந்த தந்திரத்திற்கு உச்சநீதிமன்றம் பலியானது கண்டு வருந்துகிறேன். கேரளத்துடன் பேச்சுவார்த்தையை இனி எக்காரணத்தைக் கொண்டும் நடத்தப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். |