கூடங்குளம் முற்றுகைப் போராட்டம்! காவல்துறையின் நடவடிக்கைக்கு பழ. நெடுமாறன் கடும் கண்டனம் |
|
|
|
திங்கட்கிழமை, 10 செப்டம்பர் 2012 19:11 |
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : கூடங்குளத்தில் ஓராண்டு காலத்திற்குமேலாக அந்த மக்கள் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்தி வந்தார்கள்.
எந்த ஒரு கட்டத்திலும் ஒரு சிறு அளவு வன்முறைக்குக்கூட இடந்தராமல் அவர்கள் கட்டுப்பாடோடும் அமைதியோடும் அறவழியில் அந்தப் போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். தங்களுடைய நியாயமான அச்சத்தைப் போக்குவதற்கு அதிகாரிகள் எதுவும் செய்யவில்லை என்பதனால் அவர்கள் முற்றுகைப் போராட்டத்தை நடத்தினார்கள். 5000 பேருக்கு மேல் பங்கெடுத்துக்கொண்ட இந்த முற்றுகைப் போராட்டமும் அமைதியாக நடந்தது. அமைதியாக போராடிய மக்கள் மீது இன்று மிகக்கொடுமையான முறையில் காவல்துறை தாக்குதல் நடத்தியிருப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். மக்களுக்கு அரசியல் சட்டம் அளித்துள்ள சனநாயக உரிமைகளுக்கு எதிரானதாகும் அதிகாரிகளின் இந்த நடவடிக்கை. அறவழியில் போராட்டம் நடத்துவதற்கு சட்டம் அங்கீகரித்துள்ளது. அப்படி இருந்தும் காவல்துறை மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுதிரள வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். |