காவிரி நதிநீர் வாரியம் அமைக்கப்பட வேண்டும்! மத்திய அரசுக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள்! |
|
|
|
சனிக்கிழமை, 29 செப்டம்பர் 2012 20:48 |
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : பிரதமர் தலைமையிலான காவிரி ஆணையம் பிறப்பித்த ஆணையை அமுல்படுத்தாத கருநாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததோடு. அந்த ஆணையத்தின் உத்தரவை ஏற்று தமிழகத்திற்கு
விநாடிக்கு 9 ஆயிரம் கன அடி நீரைத் திறந்துவிடவேண்டும் என்றும் அந்த நீரை கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரைக் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், அதற்கு எதிராக பந்த் போராட்டம் நடத்தப்போவதாக கன்னட அமைப்புகள் அறிவித்துள்ளன. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் காவிரி ஆணையக் கூட்டத்தை பிரதமர் கூட்டி அதில் விநாடிக்கு 9 ஆயிரம் கன அடி நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என ஆணைப் பிறப்பித்தார். அந்த ஆணையை ஏற்க மறுப்பதாக கர்நாடக முதலமைச்சர் பகிரங்கமாக அறிவித்து ஆணையக் கூட்டத்திலிருந்தும் வெளிநடப்பு செய்தார். பிரதமரின் ஆணையை மீறியதோடு மட்டுமல்லாமல் உச்சநீதிமன்றத்தையும் கருநாடக முதலமைச்சர் அவமதித்துள்ளார். தொடர்ந்து காவிரி நடுவர் மன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பினையும் இறுதித் தீர்ப்பினையும் கர்நாடகம் ஏற்க மறுத்துவிட்டது. தொடர்ந்து இந்திய அரசியல் சட்டத்தை மதியாதப் போக்கில் கருநாடகம் நடந்து வருகிறது. எனவே அதற்கு எதிராக உறுதியான நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என வற்புறுத்துகிறேன். 1956ஆம் ஆண்டு இந்திய அரசால் கொண்டு வரப்பட்ட நதிநீர் வாரியச் சட்டப்படி காவிரி மற்றும் அதனுடைய துணை நதிகள் ஆகிய எல்லாவற்றையும் உள்ளடக்கி நதிநீர் வாரியம் ஒன்றை அமைத்து அதன் பொறுப்பில் விட வேண்டும். இதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது. அவ்வாறு செய்தபிறகு காவிரி மற்றும் துணை நதிகளில் உள்ள அணைகள், வாய்க்கால்கள் போன்ற சகலமும் வாரியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிடும். அதில் குறுக்கிட எந்த மாநில அரசுக்கும் அதிகாரம் கிடையாது. 1956ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்தை இதுவரை மத்திய அரசு செயல்படுத்தவே இல்லை என்பது வருந்தத்தக்கதாகும். செயல்படாத ஒரு சட்டமாக அது இன்னமும் இருந்து வருகிறது. எனவே இந்தச் சட்டத்தை உடனடியாகப் பயன்படுத்தி காவிரி நதிநீர் வாரியம் அமைக்க முன்வருமாறு பிரதமர் மன்மோகன்சிங்கை வலியுறுத்துகிறேன். அது மட்டுமல்ல காவிரி நடுவர் மன்றம் 1991ஆம் ஆண்டில் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியபோது அதற்கெதிராக கன்னட வெறியர்கள் பந்த் நடத்தினார்கள். அந்தப் போராட்டத்தின் போது தமிழர்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டார்கள். நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். பல்லாயிரக்கணக்கானத் தமிழர்கள் கருநாடகத்திலிருந்து வெளியேறி தமிழகத்திற்கு அகதிகளாக ஓடிவந்தார்கள். அது போன்ற நிலை இப்போதும் வந்துவிடக்கூடாது எனவே கருநாடக மாநிலத்தில் தமிழர் வாழும் பகுதிகளுக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி அவர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என பிரதமரை வேண்டிக்கொள்கிறேன். காவிரிப் பிரச்சினையில் உறுதியான நிலையெடுத்து உச்சநீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பினை பெறுவதற்குக் காரணமாக அமைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அனைத்துக்கட்சியினரும் அவருக்கு உறுதுணையாக இருந்து ஒற்றுமையுடன் காவிரியில் நமது உரிமையை நிலைநாட்ட முன்வரவேண்டும் எனவும் வேண்டிக்கொள்கிறேன் |