இராணுவத்தில் தமிழ்ப் பெண்கள் கட்டாய சேர்ப்பு சிங்கள அரசின் செயலுக்கு பழ. நெடுமாறன் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 17 டிசம்பர் 2012 14:56
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
இலங்கை இராணுவத்தில் தமிழ்ப் பெண்களைச் சேர்த்து பயிற்சி அளிக்கும் திட்டத்தை சிங்கள அரசு செயல்படுத்தி வருகிறது.
பொதுவாக சிங்கள இராணுவத்தில் தமிழர்களைச் சேர்ப்பதில்லை. ஆனால் இப்போது முதல் முறையாக தமிழ்ப் பெண்களைச் சேர்த்து பயிற்சி அளிப்பது ஆழ்ந்த உள்நோக்கம் கொண்டதாகும்.
இந்தப் பயிற்சியில் சேர்ந்த பெண்களில் பெரும்பாலோர் எழுத்தர் வேலைக்கு விண்ணப்பித்தவர்கள். மாதம் ரூ.30,000/- ஊதியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் விண்ணப்பித்தவர்களை இராணுவப் பயிற்சிக்கு அனுப்பியபோது அவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். ஆனாலும் அதிலிருந்து வெளியேற அவர்களால் இயலவில்லை. பயிற்சி முகாம்களில் உள்ள அவர்களை அவர்களின் பெற்றோர்களோ அல்லது குடும்பத்தினரோ சந்திக்க அனுமதி மறுக்கப்படுகிறது.. ஏற்கெனவே சிங்கள இராணுவம் தமிழ்ப் பெண்களிடம் முறைகேடாக நடந்துகொள்கிறது என்றக் குற்றச்சாட்டு உள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான சிறீதரன் தமிழ்ப் பெண்களுக்கு அளிக்கப்படும் இந்தப் பயிற்சி குறித்து அய்யப்பாடு தெரிவித்துள்ளார். பயிற்சியில் சேர்க்கப்பட்ட 103 பெண்களில் அநேகமாக அனைவரும் அதிலிருந்து வெளியேற விரும்புவதாகவும் ஆனால் அவர்களை கட்டாயப்படுத்தி பயிற்சி பெற வைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மனித உரிமை மீறல்களுக்கும் பெண்களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபடும் குற்றச்சாட்டுக்கும் ஆளாகியுள்ள சிங்கள இராணுவம் தமிழ்ப்பெண்களை கட்டாயப்படுத்தி இராணுவத்தில் சேர்ப்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். இதைக் கண்டிக்கும் வகையில் சர்வதேச சமுதாயம் குரல் கொடுக்க வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன்.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.