தமிழக முதல்வருக்கு அவமதிப்பு பழ. நெடுமாறன் கண்டனம் |
|
|
|
வெள்ளிக்கிழமை, 28 டிசம்பர் 2012 13:58 |
தில்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு ஒட்டுமாத்த தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பாகும். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
மாநில முதலமைச்சர்கள் இந்தியப்பிரதமராமல் நியமிக்கப்பட்டவர்கள் அல்லர். அந்தந்த மாநில மக்களின் பேராதரவுடன் இந்தப் பதவிகளுக்கு வந்தவர்கள். மாநில மக்களின் பிரதிநிதிகள் என்பதைக்கூட பாராமல் அவர்களை அவமதிக்கும் வகையில் பிரதமர் நடந்துகொண்டது மன்னிக்க முடியாத பெரும் தவறாகும். பிரதமராக ஜவஹர்லால் இருந்த போது மாநில முதல்வர்களை சரிசமமாக நடத்தினார். அது மட்டுமல்ல இந்தியாவின் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் அந்தந்த மாநில மக்களின் பிரச்சினைகள் குறித்தும் மாநில முதல்வர்களுடன் கலந்தாலோசனை செய்ய வேண்டும் என்பதற்காகவே மாநில முதல்வர்களைக் கொண்ட தேசிய வளர்ச்சிக் குழுவை ஏற்படுத்தினார். என்ன நோக்கத்திற்காக அவர் ஏற்படுத்தினாரோ அந்த நோக்கத்தை அடியோடு சிதைக்கும் வகையிலும் மாநில முதல்வர்களை தனக்கு அடங்கி நடக்க வேண்டியவர்கள் என்ற கருத்தோட்டத்துடனும் பிரதமர் மன்மோகன்சிங் செயல்பட்டு இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் நடுவர் மன்றம் அளித்தத் தீர்ப்பை ஒருமாத காலத்திற்குள் அரசிதழில் வெளியிடவேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் ஆணையை இன்னும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை. மின்சாரப்பற்றாக்குறை மிகுந்துள்ள தமிழகத்திற்கு மின்சாரம் அளித்து உதவ வேண்டும் என்ற கோரிக்கையையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை. தொடர்ந்து தமிழகம் மத்திய அரசால் புறக்கணிக்கப்படுகிறது. இவைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் தமிழக முதல்வர் அவமதிக்கப்பட்டதை கண்டிக்கும் வகையிலும் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்வதோடு தொடர்ந்து அவையின் கூட்டங்களில் பங்கு எடுக்கக்கூடாது என வேண்டிக்கொள்கிறேன். |