கொழும்பில் தமிழர் கடைகள் எரிப்பு பழ. நெடுமாறன் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 29 மார்ச் 2013 14:55
கொழும்பில் தமிழர் கடைகள் எரிப்பு
பழ. நெடுமாறன் கண்டனம்
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
கொழும்பு நகரில் சிங்கள இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. சிங்கள வெறியர்கள் தமிழர் கடைகளைக் குறிவைத்துத் தாக்கிக் கொள்ளையடிப்பதோடு கடைகளையும் கொளுத்துகிறார்கள்.
ஆனால் இராணுவமோ காவல்துறையோ இவற்றைத் தடுக்காமல் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கின்றன. நகைக் கடைகள், துணிக் கடைகள், பாத்திரக் கடைகள் உள்பட அனைத்துத் தமிழர் கடைகளும் கொள்ளையடிப்பது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. முஸ்லிம்களின் கடைகளும் இதில் தப்பவில்லை.
1983ஆம் ஆண்டு கொழும்பில் இராணுவத்தின் பின்னணியுடன் தமிழர்களுக்கு எதிரானத் தாக்குதல் நடந்த போது 3000த்திற்கும் மேற்பட்டத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி இலங்கையில் நடப்பது இனப்படுகொலை என்றும் அதைப் பார்த்துக் கொண்டு இந்தியா சும்மாயிராது என்றும் எச்சரித்தார். அத்துடன் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த பி.வி. நரசிம்மராவ் அவர்களை உடனடியாக கொழும்புக்கு அனுப்பி இலங்கை அதிபராக இருந்த செயவர்த்தனாவுக்கு நேரில் இந்தியாவின் எச்சரிக்கையைத் தெரிவிக்கச் செய்தார். இதன் விளைவாக அந்தக் கலவரம் நிறுத்தப்பட்டது.
அதைப் போல இப்போதும் கொழும்பில் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களைப் பாதுகாக்கவும் அவர்களின் சொத்துக்கள் எரிக்கப்படுவதையும் கொள்ளையடிக்கப்படுவதையும் தடுத்து நிறுத்தவும் இந்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும். இல்லாவிட்டால் இந்திய அரசின் ஒப்புதலின் பேரிலேயே இது நடப்பதாக தமிழர்கள் கருத நேரிடும் என எச்சரிக்கிறேன்.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.