முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட்டது! நவம்பர் 8, 9, 10 நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடைபெறும்! |
|
|
|
புதன்கிழமை, 06 நவம்பர் 2013 22:36 |
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தினைத் திறப்பதற்கு உயர்நீதிமன்றம் ஆணை வழங்கிய பிறகும் காவல்துறையினரின் போக்கு மாறவில்லை. எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்ற முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டனர். எனவே நீதிமன்ற ஆணையின்படி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் உடனடியாகத் திறக்கப்பட்டது.
இலங்கையில் இருந்த மாவீரர்களின் நினைவிடங்களை இராஜபக்சே சுவடு தெரியாமல் அழித்து விட்டார். தமிழ்நாட்டிலாவது முள்ளிவாய்க்கால் மக்களின் நினைவுச் சின்னம் இருக்க வேண்டுமென மூன்றாண்டு கால கடும் கூட்டுழைப்பின் பெயரில் உருவாக்கப்பட்ட இந்த முற்றத்தினை தமிழ் மக்களிடம் ஒப்படைக்கிறேன். எதிர்காலத்தில் இதை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அனைத்துத் தமிழர்களுக்கும் உண்டு என்பதை நினைவுப் படுத்துகிறேன். அந்தப் பொறுப்பை அவர்கள் ஏற்று அதற்கு அரணாக நின்று திறம்பட செயலாற்றுவார்கள் என நம்புகிறேன். அவசரம் அவசரமாக திறந்து வைக்க வேண்டிய அவசியம் இருந்ததால் உள்ளுரில் உள்ள தலைவர்கள் முன்னிலையில் இது திறக்கப்பட்டது. எனினும், நவம்பர் 8, 9, 10 ஆகிய நாட்களில் திட்டமிட்டபடி அனைத்து நிகழ்ச்சிகளும் முத்துக்குமார் திடலில் பாலச்சந்திரன் அரங்கில் சிறப்பாக நடைபெறும் என்பதையும் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருக்கிற தலைவர்களும் தமிழறிஞர்களும் கலைஞர்களும் மற்றவர்களும் பங்கேற்றுச் சிறப்பிப்பார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழர் வரலாற்றில் திருப்புமுனை நிகழ்ச்சியான இதில் கலந்து கொள்ள வேண்டுமென தமிழர்களை வேண்டிக் கொள்கிறேன். |