தமிழ் நாட்டில் கடந்த 45 ஆண்டு காலத்திற்கு மேல் நடைபெற்ற திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் இலஞ்சம், ஊழல், இயற்கை வளங்கள் கொள்ளை, சனநாயக உரிமைகள் பறிப்பு போன்றவை தலைவிரித்தாடியதன் விளைவாக இரு கட்சிகளும் மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்துள்ளன. தமிழகத்தில் பணநாயகமும், பதவி நாயகமும், சந்தர்ப்பவாதமும், அதிகார போதையும் கைகோர்த்து சனநாயகத்தை வீழ்த்த முயலுகின்றன. துன்பம், தொண்டு, தியாகம் ஆகியவற்றை பொது வாழ்வின் குறிக்கோள்களாக கொண்ட நிலை மாறி பதவிவெறி, அதிகார மமதை, ஊழலில் திளைத்தல் என்பவை குறிக்கோள்களாக மாறிவிட்டன.
கொள்கையற்றப் போக்கும், சந்தர்ப்பவாதமும், பதவி வெறியும் தலைக்கேறிய நிலையில் பல தலைவர்கள் ஒரே நேரத்தில் பல்வேறு கட்சிகளுடன் கூட்டுச் சேர்வதற்குப் பேரம் பேசும் நிலையும், இது குறித்து மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்குமே என்ற கூச்சம் சிறிதும் இல்லாமல் தன்னலப்போக்கில் திளைத்திருப்பதையும் கண்கூடாகப் பார்க்கிறோம். மாற்று அரசியல் என்பது ஏமாற்று அரசியலாகி விடக்கூடாது. இத்தகையவர்களை அடையாளம் கண்டு மீண்டும் தலைதூக்கவிடாமல் செய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் மக்களுக்கு உண்டு. குறிப்பாக இளைஞர்கள் விழிப்புடன் இருந்து சமுதாயத்தில் புரையோடியிருக்கிற இத்தீமைகளை எதிர்த்துப் போராட முன்வரவேண்டும்.
சனநாயக நெறிமுறைகளைக் காக்கவும், பொது வாழ்வின் நற்பண்புகளைக் கடைப்பிடிக்கவும், மக்கள் தொண்டிற்காகத் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ளவும் உறுதிபூண்டு, தொண்டாற்றித் தியாகத் தழும்புகளை ஏற்ற, கறைபடியாத கரங்களுக்குச் சொந்தமான நேர்மையாளர்களை வெற்றிபெறச் செய்வது நமது கடமையாகும்
கல்வி, மருத்துவம் ஆகியவற்றை முற்றிலும் இலவசமாக்குதல், பயிற்சி மொழி, ஆட்சி மொழி, நீதிமன்ற மொழி, வழிபாட்டு மொழியாகத் தமிழை ஆக்குதல், காவிரி, பெரியாறு, பாலாறு போன்ற ஆற்று நீர் பிரச்சினைகளில் நமது உரிமைகளை நிலைநாட்டுதல்,தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணுதல், மதுவை ஒழித்தல், தமிழக இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், ஊழலற்ற, நேர்மையான, நீதியான ஆட்சியைத் தருதல், தமிழீழ விடுதலைக்குத் தொடர்ந்து ஆதரவு தருதல், இலங்கையில் நடைபெற்ற தமிழினப் படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகளையும் அவர்களுக்குத் துணை போனவர்களையும் சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்துதல் போன்ற முக்கியப் பிரச்சினைகளுக்குச் சட்டமன்றத்தில் குரல்கொடுக்கவும் அவற்றுக்காகத் தொடர்ந்து போராடும் உறுதியும், தமிழ்த் தேசிய உணர்வும் கொண்டவர்களும் மண்ணின் மைந்தர்களுமான வேட்பாளர்களுக்கு ஆதரவு அளித்து வெற்றிபெறச் செய்யும்படி தமிழர்களை வேண்டிக்கொள்கிறேன். |