ஆட்சி அதிகாரம் செலுத்தும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 16 அக்டோபர் 2017 15:15

பா.ஜ.க. ஆட்சியில் எந்த அதிகாரப் பொறுப்பிலும் இல்லாத ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகத், தலைமையமைச்சருக்கும் மேலான அதிகாரத்தை செலுத்தி வருகிறார்.

6-10-17 அன்று டெல்லியில் மத்திய பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களையும் பொதுத் துறையில் உள்ள நிறுவனங்களின் தலைவர்களையும் அழைத்து மோகன் பகத்  கலந்தாய்வு செய்தார். இக்கூட்டத்தில் இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம், இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கழகம், இந்திய தொழில்நுட்பக் கழகம் ஆகியவற்றின் இயக்குநர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஏற்கெனவே, கடந்த மாதத்தில் டில்லியில் உள்ள வெளிநாட்டுத் தூதர்களை அழைத்து மோகன் பகத் கலந்தாய்வு நடத்தினார். தலைமையமைச்சரோ அல்லது தொடர்புள்ள துறைகளைச் சார்ந்த அமைச்சர்களோ நடத்த வேண்டிய கூட்டங்களை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் நடத்துவதும் அதில்  அரசு சார்பான நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்பதும் சட்டத்திற்கும் மரபிற்கும் புறம்பானது மட்டுமல்ல, அப்பட்டமான சனநாயகத்திற்கு எதிரானப்போக்காகும்.

மெல்ல மெல்ல மத்திய அரசையும், மாநில அரசுகளையும் அரசுகளுக்கு உட்பட்ட நிறுவனங்களையும் தனது கட்டுக்குள் கொண்டுவர ஆர்.எஸ்.எஸ். இயக்கம் முயற்சி  செய்கிறது. தலைமையமைச்சராக இந்திராகாந்தி இருந்தபோது அரசுப் பதவி எதிலும் இல்லாத அவரது மகன் சஞ்சய் காந்தி அமைச்சர்களையும், உயரதிகாரிகளையும் அழைத்துப்பேசி  உத்தரவுகளைப் பிறப்பித்ததாக குற்றம் சாட்டி மிக வன்மையாக பா.ஜ.க. தலைவர்கள் கண்டித்தார்கள். சர்வாதிகாரப் போக்கு எனச் சாடினார்கள். ஆனால், இப்போது  ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அதே செயலை செய்யும்போது வாய் பொத்தி, கைகட்டி பா.ஜ.க. தலைமையும், தலைமையமைச்சர் மோடியும் சேவகம் புரிகிறார்கள். தங்கள் கையில்  உள்ள அதிகாரத்தை ஆர்.எஸ்.எஸ். தலைமையிடம் பணிந்து ஒப்படைத்ததின் மூலம் சனநாயகப் படுகொலைக்கு மோடியும், மத்திய அமைச்சர்களும் துணை புரிகிறார்கள்.

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.