தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தேர்தல் நிலைப்பாடு குறித்து விடுத்துள்ள அறிக்கை : |
|
|
|
திங்கட்கிழமை, 17 ஏப்ரல் 2006 12:47 |
தமிழர் தேசிய இயக்கம் தடை செய்யப்பட்டதைக் குறித்தும் அதன் முக்கிய நிருவாகிகளுக்கு வாய்ப்பூட்டுப் போடப்பட்டு எங்களின் சனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டது குறித்தும் எந்தக் கட்சியும் கண்டனக் குரல் எழுப்பவில்லை. தமிழ்த் தேசிய அமைப்புகளும் தமிழுணர்வாளர்களும் மட்டுமே இக்கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தனர்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு கொடிய பொடாச் சட்டம் விலக்கிக் கொள்ளப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால் பொடாச் சட்டத்திற்குப் பதிலாக சட்டப்புறம்பான நடவடிக்கைகள் தடுப்புத்திருத்தச் சட்டம் என்ற பெயரில் பொடாச் சட்டத்தின் பல பிரிவுகளை உள்ளடக்கிய புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கும் பொடாச் சட்டத்திற்குமிடையே அதிக வேறுபாடு இல்லை. முன் தேதியிட்டுப் பொடாச் சட்டம் விலக்கிக் கொள்ளப்படாததாலும் பொடா மறு ஆய்வுக் குழுவின் தீர்ப்பே இறுதியானது எனக் கூறப்படாததாலும் எங்கள் மீதும் மற்றும் பலர் மீதும் உள்ள பொடா வழக்குகள் இன்னமும் தொடருகின்றன. மேலும் சட்டமன்றத் தேர்தலில் நம்முடைய ஆதரவை எந்தக் கட்சியும் கேட்கவி்ல்லை. நாம் இயங்க முடியாது முடக்கப்பட்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில் நமது இயக்கம் தேர்தலில் நேரடியாகப் பங்கு கொண்டு பிரச்சாரம் செய்தல், வேலை செய்தல் போன்றவைகளுக்கான அவசியம் அறவே எழவில்லை. பயிற்சி மொழி, ஆட்சி மொழி, நீதிமன்ற மொழி, வழிபாட்டு மொழியாகத் தமிழை ஆக்குதல், காவிரி, பெரியாறு, பாலாறு போன்ற ஆறுகளில் நமக்குள்ள நியாயமான உரிமைகளை நிலைநாட்டுதல், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு தருதல், சர்வாதிகாரப் போக்கினை எதிர்த்து சனநாயக உரிமைகளுக்காகப் போராடுதல் போன்ற குறைந்தபட்ச அடிப்படைக் கோரிக்கைகளுக்காகக் குரல் கொடுக்க முன்வரும் வேட்பாளர்களை ஆதரித்து வாக்களித்து சனநாயகக் கடமையை நிறைவு செய்யுமாறு இயக்கத் தோழர்களையும் தமிழ் உணர்வாளர்களையும், வாக்காளப் பெருமக்களையும் வேண்டிக் கொள்கிறேன்.
|