மறைமலையடிகள் தொடக்கிய தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மாநாடு-தமிழர்களே திரண்டு வருக! PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 16 ஜூலை 2016 16:00

தமிழக வரலாற்றில் பல்வேறு காலக்கட்டங்களிலும் பலர் தோன்றித் தமிழுக்கும் தமிழர்களுக்கும் நேர்ந்த இடுக்கண்களிலிருந்து காத்து மீட்டுள்ளனர்.

சங்க காலத் தமிழர் சமுதாயத்தில் பல்வேறு சீர்கேடுகள் மலிந்திருந்தன. கூடா ஒழுக்கம், பிற உயிர்களைக் கொல்லுதல், புலால் உண்ணல், கள் அருந்துதல், சூது விளையாடுதல், பிறனில் விழைதல், வரைவின் மகளிர் போன்ற பண்பாட்டுக் கேடுகள் பரவித் தமிழ்ச் சமுதாயம் சீரழிந்த காலக் கட்டத்தில், தமிழர்களைச் சீர்திருத்த திருவள்ளுவர் தோன்றினார். கூடா ஒழுக்கம், கொல்லாமை, புலால் மறுத்தல், கள்ளுண்ணாமை, சூது, பிறனில் விழையாமை, வரைவின் மகளிர் போன்ற அதிகாரங்களை இயற்றித் தமிழர்களுக்கு அறிவுறுத்திச் சீர்திருந்தச் செய்தார். வள்ளுவர் யாத்த குறள் தமிழர்களை நன்னெறிப்படுத்தியது.

சங்க காலச் சமூகம் போர்களினால் பாதிக்கப்பட்ட சமூகமாகத் திகழ்ந்தது. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தங்களுக்குள் அடிக்கடி பொருதினர். போரில் வாகை சூடுவதைப் பெருமையாகவும், கடமையாகவும் கொண்டிருந்தனர். அதுமட்டுமல்ல, சைவ, வைணவ, சமண, பெளத்த சமயங்கள் தங்களுக்குள் பூசலிட்டுத் தமிழர்களை ஊடறுத்தன. சமய பிணக்குகளும் சழக்குகளும் தமிழர்களிடம் பரவியிருந்தன. மொழியாலும், பண்பாட்டாலும், பழக்க வழக்கங்களாலும் தமிழர்கள் ஒரே இனத்தவர் என்பதை மறந்து கிடந்த தமிழகத்தில் அதை நினைவூட்டித் தமிழர்களை இணைப்பதற்காக இளங்கோவடிகள் தோன்றிச் சிலப்பதிகாரக் காப்பியத்தைப் படைத்தார். சங்க காலத்தின் இறுதியில் எழுந்த இந்தக் காப்பியம் மூவேந்தர்களும் இணைந்து வாழ வேண்டிய இன்றியமையாமையையும் எச்சமயத்தவராக இருந்தாலும் பூசல் இல்லாமல் ஒற்றுமையுடன் வாழவேண்டியதையும் வலியுறுத்தியது.

பக்தி இலக்கியம்

கி.பி. 600இல் பல்லவர் ஆட்சியில் வட மொழியும் சமணமும் ஓங்கியிருந்தன. சமண, பெளத்த சமயங்களின் தாக்கத்தின் விளைவாகத் தமிழிசை, நடனம், ஓவியம், சிற்பம் போன்ற தமிழர்களுக்கே உரிய நுண் கலைகள் புறந்தள்ளப் பட்டன.

இந்தக் காலக் கட்டத்தில் திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் மற்றும் சைவ நாயன்மார்களும், வைணவ ஆழ்வார்களும் தோன்றிப் பக்தி இலக்கியங்களைப் படைத்தனர். திருமுறைகளும், ஆழ்வார் பாசுரங்களும் பக்தி இலக்கியங்கள் மட்டுமல்ல, சிறந்த இலக்கியக் கருவூலங்களுமாகும். தமிழிசை, தமிழ்ப்பண் போன்றவை இவற்றால் மறுமலர்ச்சி பெற்றன. தமிழும், இசையும், நடனமும், ஓவியமும், சிற்பமும் செழித்தோங்கின. தமிழ் புத்துயிர் பெற்றது.

உரை ஆசிரியர்கள்

தொல்காப்பியம், திருக்குறள், சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு மற்றும் சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி போன்ற ஐம்பெரும் காப்பியங்கள் தோன்றி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகி விட்டன. இந்நூல்களின் பொருளையும், சிறப்புகளையும் பிற்காலத் தலைமுறையைச் சேர்ந்த தமிழர்கள் முழுமையாக உணர்ந்துகொள்ள முடியாமல் தவித்த போது, உரையாசிரியர்கள் தோன்றினார்கள்.
இளம்பூரணார், சேனாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர், அடியார்க்கு நல்லார் போன்ற தமிழ்ப் புலமைமிக்க சான்றோர் தோன்றி இலக்கியங்களுக்குப் பேருரை கண்டார்கள். இலக்கியங்களை அழியாமலும் பாதுகாத்தனர். இதன்மூலம் பழந்தமிழ் இலக்கியங்களின் பெருமையும் சிறப்பும் தமிழரிடையே பரவின. சுருக்கமாகச் சொன்னால் உரையாசிரியர்கள் தோன்றாமல் போயிருந்தால், பழந்தமிழ் இலக்கியங்கள் பல அழிந்துபோயிருக்கும். எஞ்சியவற்றிற்கும் பிற்காலத் தலைமுறையைச்சேர்ந்த தமிழர்கள் சரியான பொருளைப் புரிந்துகொள்ளமுடியாமல் திணறியிருந்திருப்பார்கள்.

பிறமொழிக் கலப்பு

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொருவர் தோன்றித் தமிழைக் காத்தது போல மறைமலையடிகள் தோன்றி சமற்கிருதம் மற்றும் பிறமொழிக் கலப்பு என்னும் முதலை வாயில் சிக்கிய தமிழை மீட்டார்.

1876ஆம் ஆண்டு பிறந்த அவர் 1950ஆம் ஆண்டில் மறைந்தார். 74 ஆண்டுகள் வாழ்ந்தார். 20ஆம் நூற்றாண்டின் முதல் 50 ஆண்டுகள் தமிழுக்கும் தமிழருக்கும் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.

எளிய குடும்பத்தில் பிறந்த அவர் தன்முயற்சியால் உயர்ந்தார். தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகியவற்றைத் தக்கவரிடம் கற்றுத் தேர்ந்தார். மேற்கண்ட மும்மொழிகளிலும் பேரறிஞராகத் திகழ்ந்தார். நுண்மாண் நுழைபுல மிக்க ஆராய்ச்சியாளராகவும் திகழ்ந்து பல புதிய உண்மைகளைத் தமிழ் உலகிற்குத் தந்தார்.

சங்க நூல்களில் வடமொழிச் சொற்கள் மிகக்குறைவு, சங்க காலத்தை யொட்டித் தொடர்ந்த நூற்றாண்டுகளில் தமிழில் கலக்கப்பட்ட வடமொழிச் சொற்களின் தொகை நாளுக்கு நாள் மிகுந்துகொண்டே வந்து மணிப்பவழ நடையாக மாறி 14, 15, 16 ஆம் நூற்றாண்டுகளில் தமிழில் நூற்றுக்கு 70 சதவிகிதத்திற்கு மேல் வடசொற்கள் கலந்து தமிழ் மொழியின் எழிலுருவத்தையே சிதைத்துவிட்டன.

மறைமலையடிகளின் காலத்திற்கு முன் தமிழ்நாட்டில் சமஸ்கிருதம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது போன்ற பல மொழிகளைச் சேர்ந்த சொற்கள் தமிழில் கலந்து அதனுடைய தனித்தன்மையைச் சீர்குலைத்தன. வடசொல்லையும் தமிழ்ச்சொல்லையும் கலந்து எழுதும் மணிப்பவழ நடை கற்றறிந்த சிலரால் விரும்பிப் பின்பற்றப்பட்டது. இந்த நிலைமை நீடித்திருக்குமானால் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளைப் போலத் தமிழும் தனது பண்டைய உருமாறிச் சமற்கிருத மயமான மொழியாக இயங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

இச்சீர்கேட்டிலிருந்து தமிழைக் காப்பாற்ற மறைமலையடிகள் முனைந்தார். தூய தமிழில் எழுதவும் பேசவும் தொடங்கினார். பிறமொழிகளின் சொற்களைக் கலந்து தமிழில் எழுதுவதும் பேசுவதும் தமிழரின் தன்மானத்திற்கே இழுக்கு என்பதைச் சுட்டிக்காட்டினார். அவருடைய இடைவிடாத முயற்சியினால் தனித்தமிழ் இயக்கம் அருகுபோல் வேரூன்றி ஆலமரம் போல் தழைத்தது.

வடமொழியும் தமிழும் வேறுவேறு என்பதை விளக்கிக்காட்டினார் சிவஞான முனிவர். வடமொழியை அறவே அகற்றிவிட்டு தமிழ் தனித்தியங்க வல்லது என்பதை ஆராய்ந்து கூறினார் டாக்டர் கால்டுவெல். பல நூல்களைத் தூய தமிழில் எழுதி மேற்கண்ட அறிஞர்கள் கூறியதை நிறுவிக்காட்டினார் மறைமலையடிகள்.

ஆங்கில மொழிப் பேரறிஞரான டாக்டர் ஜான்சன் அவர்களைப் பற்றி ஏடிட்ண்ஞுடூஞூ ச்ண ஐணண்tடிtதtடிணிண எனக் கூறுவார்கள். அவரே ஒரு இயக்கமாகத் திகழ்ந்தார் என்பது இதற்குப் பொருளாகும். அதைப் போல மறைமலையடிகள் தனி ஒரு மனிதனாகத் திகழ்ந்து எந்த அமைப்பின் உதவியோ அல்லது நிறுவனத்தின் துணையோ இல்லாமல் தமிழைக் காக்க இடையறாது போரிட்டு வெற்றியும் கண்டார்.

தமிழ், தமிழ்மொழி, தமிழினம், தமிழ்நாடு குறித்த அவர் சொற்பொழிவுகளும் நூல்களும் நாடெங்கும் தமிழுணர்வு பெருக வழிவகுத்தன. 50 ஆண்டுக் காலத்திற்கு மேலாகத் தமிழுக்கும் தமிழருக்கும் சிறந்ததொரு வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.

தமிழகத்தில் தனித்தமிழ்க் கிளர்ச்சி, தமிழ் ஆட்சிமொழி, கோயில் வழிபாடுகளில் தமிழ் வேண்டுமென்ற கிளர்ச்சி, தமிழர்களின் குடும்ப நிகழ்ச்சிகளில் தமிழ்மறை ஓதுவித்தல், திருக்குறளைத் தமிழ்மறையாக ஏற்றுக்கொள்ளல், தமிழ் மன்னர்களைப் போற்றுதல், சங்க இலக்கியப் பயிற்சி, தமிழ்ப் பண்பாடுகளை வளர்த்தல், தமிழ் இலக்கியங்களை ஆராய்தல், தூய தமிழ் நடையில் எழுதுதல், தமிழ் வளர்க்கும் சங்கங்களை அமைத்துப் பணியாற்றல் போன்ற கிளர்ச்சிகள் இன்றைய தமிழகத்தில் தலையெடுத்து ஓங்கி நிற்பதற்கும் அவற்றில் பல வெற்றிபெறுவதற்கும் அடித்தளம் அமைத்த பெருமை மறைமலையடிகளையே சாரும்.

பல துறை வித்தகர்
நூலாசிரியர்
பதிப்பாசிரியர்
மொழியாசிரியர்
மொழிபெயர்ப்பாளர்
இதழாசிரியர்
சொற்பொழிவாளர்
மருத்துவர்
சமுதாயச் சீர்த்திருத்துநர்
மொழிக்காவலர்

போன்ற பல்வேறு பொறுப்புகளை ஏற்று இடையறாது செயல்பட்டார். தனது பேச்சு, எழுத்து ஆகியவற்றின் மூலம் ஆரிய நாகரிகத்தைவிட தமிழர் நாகரிகமே பழமையானது தொன்மையானது என்பதை நிலைநாட்டினார். தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்தப்பட வேண்டும் என்பதை வற்புறுத்தினார். தாய்மொழிக் கல்வி ஒன்றுதான் நம் குழந்தைகளின் அறிவைப் பெருக்கி வளர்ச்சியடையச் செய்யும் என்பதை எடுத்துக்காட்டினார். வள்ளலாரின் பாக்கள் மருட்பா என நிலைநாட்டச் சிலர் முயன்றபோது அதை எதிர்த்து அவை அருட்பாக்கள் என்பதை நிறுவினார்.

ஆராய்ச்சி நெறித் தந்தை

தமிழ் நூல் ஆய்வு முறைக்கும் செந்தமிழ் உரைநடைக்கும் அவரே வழிகாட்டியாக விளங்கினார்.
தமிழ் இலக்கியங்கள் தோன்றிய காலம், அவற்றின் பொருள் முதலியவற்றைக் குறித்து ஆராயும் முறை ஆங்கில நாட்டு முறையை அடியொற்றி வருவதாகும். காலம் பற்றியும் ஒப்புமை பற்றியும் ஆராயும் முறையை முதன் முதலாகத் தமிழ் இலக்கியத் துறையில் புகுத்தியவர் மறைமலையடிகளே ஆவார். மாணிக்கவாசகர் வரலாறும் கால ஆராய்ச்சியும் என்ற தலைப்பில் அடிகளார் படைத்த நூல் அறிஞர் பலர் மேலும் அத்துறையில் ஈடுபட்டு ஆய்வு நடத்த வழி வகுத்தது. தமிழ் இலக்கிய ஆராய்ச்சி நெறித் தந்தையாக அவர் விளங்கினார் என மறைந்த பேராசிரியர் அவ்வை சு. துரைசாமி பிள்ளை அவர்கள் பாராட்டியுள்ளார்.

செம்மொழி

29-8-1918ஆம் ஆண்டு குலசேகரப்பட்டினத்தில் நடைபெற்ற சைவ மாநாட்டில் தமிழ்மொழி ஓர் உயர்தனிச் செம்மொழியாகும் என முடிவுசெய்யப் பட்டது. அம்முடிவில் மறைமலையடிகள் தனது கைச்சாத்தை இட்டார்.
திருவள்ளுவர் ஆண்டு

19-5-1921இல் சென்னைப் பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற தமிழறிஞர்களைக் கொண்ட கூட்டத்தில் தலைமையேற்றுத் திருவள்ளுவர் ஆண்டு குறித்து திட்டவட்டமான முடிவெடுத்தார்.
இயேசுபிரான், முகமது நபி ஆகி யோருக்கு முந்தியவர் திருவள்ளுவர். எனவே கிறித்து பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முற்பட்டவர் திருவள்ளுவர். எனவே தமிழ் ஆண்டைக் கிறித்தவ ஆண்டிற்கு 31 ஆண்டுகள் முந்தியதாகக் கணக்கிட வேண்டும் என வரையறை செய்து தமிழர்களுக்கு தமிழாண்டை உருவாக்கிக் கொடுத்தவர் மறைமலையடிகளே ஆவார். அதைப்போலத் திருவள்ளுவர் திருநாளைத் தமிழர்கள் கொண்டாடுவதற்கும் திட்டம் வகுத்துத் தந்தவர் அடிகளாரே ஆவார்.

மொழிக்காவலர்

1937ஆம் ஆண்டில் சென்னைக் கடற்கரையில் இந்தித் திணிப்பு எதிர்ப்பை வலியுறுத்தி நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.

4-10-37இல் சென்னை கோகலே மண்டபத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டிற்கும் தலைமை தாங்கினார்.
3-6-38 அன்று செங்கல்பட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டுக்கும் தலைமை தாங்கினார்.
மொழியின் பெருமையையும் சிறப்பையும் பற்றிப் பேசினால் போதாது. மொழிக்கு ஏதம் (அபாயம்) நேரும்போது அதை எதிர்த்துப் போராடவும் முன்வந்து மொழிக் காவலராகத் திகழ்ந்தார்.

1938ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அவருடைய மூத்த மகன் மறை திருநாவுக்கரசு மற்றும் அவர் துணைவியார் ஞானம்மாள் கைக்குழந்தையுடன் கைது செய்யப்பட்டுச் சிறை சென்றனர்.
மற்றொரு மகனான மாணிக்கவாசகத்தின் மனைவி சரோஜினி மகனுடன் சிறை ஏகினார்.

மறைமலையடிகள் அவர்களின் மகள் நீலாம்பிகை இந்தி எதிர்ப்பு மாதர் மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். தனது குடும்பம் முழுவதையுமே அடிகள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈகம் செய்ய வைத்தார்.

தமிழ் வழிபாடு

அதைப் போலவே தமிழர் சமய நெறியில் தூய தமிழில் வழிபாடு, தேவார, திருவாசக, திருவாய்மொழி போன்றவற்றை ஓதுதல், நாயன்மார்களின் ஆழ்வார்களின் வரலாறுகளை அறிந்து போற்றுதல் போன்றவற்றை தொடக்கி வைத்தவரும் வழிகாட்டியவரும் மறைமலையடிகளே ஆவார்.

தமிழியக்கத் தலைவர்

20ஆம் நூற்றாண்டில் முதல் 50 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நடைபெற்ற மாநாடுகள், விழாக்கள் முதலியன யாவும் மறைமலையடிகளைத் தலைமையாகக் கொண்டே நடத்தப்பட்டன. தமிழ்நாட்டில் தமிழியக்கத்திற்குச் சிறந்த தலைவராக அவர் திகழ்ந்தார்.

தனியொரு மனிதராக விளங்கினாலும் தானே ஒரு இயக்கமாக மாறித் தமிழுக்கும் தமிழருக்கும் அவர் ஆற்றிய அருந்தொண்டிற்கு இணையான தொண்டினை இதுவரை யாரும் செய்ததில்லை.
அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த தமிழறிஞர்கள் அனைவரும் அவரைத் தலைமணியாகக் கொண்டாடினார்கள்.
அரசியல் தலைவர்களும் அவரிடம் மிகுந்த மதிப்புக்கொண்டிருந்தார்கள்.மடங்களின் தலைவர்களும் பிற துறவிகளும் பக்தி கலந்த மரியாதை செலுத்தினர்.

தமிழ்நாட்டிலும், ஈழத்திலும், இன்னும் தமிழர்கள் வாழும் நாடுகளிலும் அவர் புகழ் பரவியிருந்தது.
தமிழுக்காகவே பிறந்து, தமிழுக்காகவே வாழ்ந்து, தமிழுக்காகவே மறைந்தவர் மறைமலையடிகள் ஒருவரே என முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் கூறியது பொருள் பொதிந்த உண்மையாகும்.

- பழ. நெடுமாறன்

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.