தனித்தமிழ் இயக்க நூற்றாண்டுவிழா மற்றும் உலகத்தமிழர் பேரமைப்பு 9ஆம் மாநாடு தீர்மானங்கள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2016 12:40

தீர்மானங்கள்

1. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் ஆங்கிலம் கற்பிக்கும் திட்டம் நமது குழந்தைகளின் அறிவு வளர்ச்சியை அழிக்கும் திட்டமாகும். முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியே அளிக்கப்படவேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது. மேலும், தமிழ் மொழிக் கல்வி படிப்படியாகக் கல்லூரிக் கல்வி வரை விரிவாக்கப்படவேண்டும். இந்தியாவின் பிற மாநிலங்களில் தாய்மொழிக் கல்வித்திட்டம் செயற்படுத்தப் படுகிறது. அதற்கு  மாறாக, தமிழ்நாட்டில் செயல்படுவது நமது மாணவர்களின் எதிர்காலத்தை அழிப்பதில் போய் முடியும் என்பதை இம்மாநாடு சுட்டிக்காட்டுகிறது.

2. தமிழ்நாட்டில் அரசு நடத்தும் தொடக்கப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றில் தமிழே கல்வி மொழியாக விளங்குகிறது. ஆனால், தனியார் நடத்தும் ஆங்கிலவழிப் பள்ளிகளின் நெருக்குதலுக்கு ஆளாகி, அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. இதன் விளைவாகத் தமிழ் வழிக் கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சி நடைபெறுகிறது. மேலும், ஏழை, எளிய மாணவர்கள், ஒடுக்கப்பட்ட, பிற்பட்ட மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் கட்டணமில்லாமல் படிக்கும் வாய்ப்பு பறிபோகிறது. எதிர்காலத் தலைமுறையை அடியோடு அழிக்கும் இத்தீய முயற்சியை தடுத்து நிறுத்தும்படி தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது. 

3. தமிழர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கிலவழிக் கல்விப் பள்ளிகளில் சேர்ப்பதில்லை,தமிழ்வழிக் கல்விப் பள்ளிகளிலேயே சேர்ப்போம் என உறுதிபூணவேண்டும் என இம்மாநாடு வேண்டிக்கொள்கிறது.

4. தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர்களையே சூட்டவேண்டும். பிறமொழிப் பெயர்களைச் சூட்டுவது இல்லை என சூளுரைக்குமாறு இம்மாநாடு வேண்டிக்கொள்கிறது.

5. தமிழில் பிறமொழிச் சொற்களை கலக்காமல் எழுதவும், பேசவும் வேண்டும். இதழ்களிலும், நூல்களிலும், ஊடகங்களிலும் பிறமொழிக் கலப்பு அறவே கூடாது. இதைக் கண்காணிக்கவும் அவ்வாறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரம் படைத் தமிழறிஞர்களின் உயர் குழு ஒன்றை அமைக்குமாறு தமிழகஅரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

6. தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 20 விழுக்காடு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை 50 விழுக்காடாக உடனடியாக உயர்த்துவதோடு, மேலும், படிப்படியாக உயர்த்தி, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தமிழ் நாட்டரசின் அனைத்து வேலை வாய்ப்புகளும் தமிழ் வழியில் கற்றவர்களுக்கே தரப்படல் வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

7. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் துறை வழியாக மருத்துவப் படிப்பிற்கான நூல்கள் அனைத்தும் தமிழில் தயாரிக்கப்பட்ட நிலையில் அனைத்திந்திய மருத்துவக் குழுமம் இசைவு தர மறுத்துவிட்ட காரணத்தினால், தமிழ் வழி மருத்துவப் படிப்பு தடைபட்டுக் கிடக்கின்றது. இத்தடையை நீக்கி, உடனடியாக தமிழ்வழி மருத்துவப் படிப்பைத் தொடங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழகஅரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

8. மறைமலை அடிகளாரால் தொடக்கப்பட்ட தனித்தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டு விழாவினைத் தமிழக அரசு விழாவாக நடத்த வேண்டுமென இம்மாநாடு வேண்டிக்கொள்கிறது.

9. சென்னை உயர்நீதிமன்றம் என்ற பெயரைத் தமிழ்நாட்டு உயர்நீதி மன்றம் என்று மாற்றியமைக்க வேண்டும் என இந்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

10.உயர்நீதி மன்றங்களில் தலைமை நீதிபதியாக பிற மாநிலத்தவர் நியமிக்கப்படுவதும், உயர்நீதி மன்ற நீதிபதிகளில் மூன்றில் ஒரு பங்கினர் பிற மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும் எனக்கூறும் சட்டப்பிரிவும் உடனடியாகக் கைவிடப்பட்டால்தான், தமிழ்நாட்டு உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக தமிழர் ஒருவர் வரமுடியும் என்பதோடு, நீதிமன்றமொழியாகத் தமிழ் ஆகும் என்பதால், மேற்கண்ட சட்டப்பிரிவை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழகஅரசை இம்மாநாடு வேண்டிக்கொள்கிறது.

11.1964ஆம் ஆண்டு தில்லியில் உலகக் கீழ்த்திசை மொழிகள் ஆய்வு மாநாடு நடைபெற்றபோது, தனிநாயகம் அடிகள் மற்றும் முனைவர் வ.ஐ. சுப்பரமணியம் ஆகியோர் முயற்சியில் மூத்த தமிழறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் அவர்கள் தலைமையில் கூடிய உலகத் தமிழறிஞர்கள் உலகத் தமிழ்ஆராய்ச்சி மன்றம் அமைக்க முடிவு செய்தனர்.

அவ்வாறு அமைக்கப்பட்ட உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் முதல் மாநாடு 1966ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்றது. 1968இல் சென்னையிலும், 1970ஆம் ஆண்டு பாரிசிலும், 1974ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலும், 1981ஆம் ஆண்டு மதுரையிலும், 1987ஆம் ஆண்டு கோலாலம்பூரிலும், 1989ஆம் ஆண்டுமொரீசியசு நாட்டிலும், 1995ஆம் ஆண்டு தஞ்சையிலும் உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் நடைபெற்றன. அதற்குப் பிறகு இதுவரை கடந்த 21 ஆண்டுகளாக உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் நடைபெறவில்லை.

எனவே, உலகத் தமிழறிஞர்களை ஒன்று கூட்டி உலகத் தமிழாராய்ச்சி மன்றம் மீண்டும் செயல்படவும், ஆராய்ச்சி மாநாடுகள்தொடர்ந்து நடைபெறவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என தமிழக முதலமைச்சரை இம்மாநாடு வேண்டிக்கொள்கிறது.

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.