காஷ்மீர் பற்றிஎரிவது ஏன்? - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 18 ஆகஸ்ட் 2016 12:01

"உலகம் இங்கு முடிகிறது. சொர்க்கம் இங்கு தொடங்குகிறது. மகிழ்ச்சிப் பள்ளத்தாக்கு உங்களை வரவேற்கிறது''. என்ற பெயர்ப் பலகை ஜம்மு-காஷ்மீருக்குள் நுழையும் நெடுஞ்சாலையின் முகப்பில் காட்சியளிக்கிறது.
ஆனால் அந்த சொர்க்கம் இப்போது நரகமாகக் காட்சியளிக்கிறது.

கடந்த 16 ஆண்டுகளில் காஷ்மீரில் ஆயுதப்படைகளால் ஒரு இலட்சம் பேருக்கு மேல் சுட்டுக்கொல்லப் பட்டிருக்கிறார்கள். ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்றோரைப் பறிகொடுத்து அனாதைகளாக்கப் பட்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

தங்களுடைய பிள்ளைகளை ஆயுதப்படையினர் பிடித்துக்கொண்டு போனார்கள் என்றும் இதுவரை அவர்களைப் பற்றிய எந்தச் செய்தியும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்றும் மனமுடைந்து கதறி அழும் தாய்மார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறது.

15 காஷ்மீரிகளுக்கு ஒரு இராணுவ வீரர் என்ற விகிதத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதிலும் இராணுவம் குவிக்கப்பட்டிருக்கிறது. எந்த வீட்டிற்குள்ளும் புகுந்து யாரை வேண்டுமானாலும் விசாரணை என்ற பெயரால் தூக்கிச் செல்லவும் சுட்டுத் தள்ளவும், இதனை யாரும் தட்டிக்கேட்க முடியாத வகையிலும் யாருக்கும் பதில் சொல்ல தேவையில்லாத முறையி லும் வரம்பற்ற அதிகாரத்தை ஆயுதப் படைகளுக்கு கொடிய சிறப்புச் சட்டம் வழங்கியிருக்கிறது.

1947ஆம் ஆண்டில் பாகிஸ்தான் மலைச்சாதியினரின் படை யெடுப்பை தடுக்க காஷ்மீருக்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் கடந்த 70 ஆண்டு காலமாக இன்னமும் அங்கு முகாமடித்துத் தங்கியிருக்கிறது.  இந்நிலைக்குக் காரணமென்ன? என்பதை ஆராய்வதற்கு முன் நாம் சற்று பின்னோக்கிப் பார்க்க வேண்டும். 

1846ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி 75 இலட்சம் ரூபாய்களுக்கு ஜம்மு-காஷ்மீர் சமஸ்தானத்தை குலாப்சிங் என்பவருக்கு விற்பனை செய்தது. அவரின் மகனான ஹரிசிங் 1920இல் காஷ்மீர் மன்னராக முடிசூட்டிக் கொண்டார். மன்னராட்சியில் இழைக்கப்பட்ட கொடுமை களுக்கு எதிராக ஷேக் அப்துல்லா காஷ்மீர் முஸ்லிம் மாநாடு என்ற கட்சியைத் தொடக்கினார். 1931ஆம் ஆண்டு சூலை 13ஆம் நாள் ÿநகரில் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது மன்னரின் படை 22 பேர்களை சுட்டு வீழ்த்திற்று. மன்னராட்சிக்கு எதிரான போராட்டம் அன்று முதல் தொடங்கியது.

1938ஆம் ஆண்டில் ஜவகர்லால் நேருவின் ஆலோசனையை ஏற்று ஷேக் அப்துல்லா தனது கட்சியின் பெயரை காஷ்மீர் தேசிய மாநாடு என்று மாற்றினார். நயா காஷ்மீர் என்ற பெயரில் இக்கட்சியின் சோசலிசக் கொள்கைத் திட்டம் அறிவிக்கப்பட்டது. மதச்சார்பற்ற அமைப்பாக இக்கட்சி இயங்கும் என அறிவிக்கப்பட்டது. மன்னராட்சிக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கினார் எனக் குற்றம் சாட்டப்பட்டு 1945 மே 25ஆம் தேதி ஷேக் அப்துல்லா கைது செய்யப்பட்டு மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டார். அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காஷ்மீரத்திற்குள் நுழைய முயன்ற ஜவகர்லால் நேரு தடுத்து நிறுத்தப்பட்டார். அதையொட்டி இந்தியா முழுவதிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

ஜம்மு-காஷ்மீர் சமஸ்தானத்தில் 100க்கு 80 பேர் முஸ்லிம்கள், மன்னரோ இந்து. ஆங்கிலேய ஆட்சி முடிவடைந்து இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகள் உருவானபோது காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைத்துக்கொள்ள ஜின்னா மிகவும் ஆர்வம் காட்டினார். காஷ்மீர் தலைவர்களை அழைத்துப் பேசி பல சலுகைகள் தருவதாகவும் கூறினார். ஆனால், காஷ்மீர் தேசிய மாநாட்டின் தலைவரான ஷேக் அப்துல்லா அதை ஏற்கவில்லை. இந்தியாவுடன் இணைவதையே விரும்பினார். எனவே பாகிஸ்தான் மலைவாசிகள் தூண்டிவிடப்பட்டு இராணுவத்துணையுடன் காஷ்மீர் மீது படையெடுத்தனர். அதுவரை ஊசலாடிக்கொண்டிருந்த காஷ்மீர் மன்னர் தனது சமஸ்தானத்தை இந்தியக் குடியரசில் இணைப்பதாக அறிவித்தார். காஷ்மீரைக் காப்பாற்ற இந்திய இராணுவம் உடனடியாக அனுப்பப்பட்டது. ÿநகர் வரை வந்துவிட்ட பகைவர்களை இந்திய இராணுவம் விரட்டியடித்தது. இப்படைக்கு தலைமை தாங்கிய பிரிகேடியர் உஸ்மான் உயிர்த்தியாகம் செய்து ஈட்டிய வெற்றி இதுவாகும். இந்தியப் படைக்குத் துணையாகக் களத்தில் தேசிய மாநாட்டுத் தொண்டர்களும் போரிட்டார்கள்.

1947ஆம் ஆண்டு டிசம்பரில் இந்திய அரசு பாகிஸ்தான் படையெடுப்புக் குறித்து ஐ.நா. பாதுகாப்பு குழுவின் முன் புகார் செய்தது. 1948ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதியன்று பாதுகாப்புக் குழு அமைதி ஆணையம் ஒன்றை அமைத்து போர் நிறுத்த எல்லைக்கோட்டையும் வகுத்தது. பின்னர் காஷ்மீர் மக்களின் கருத்தறிய பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்த வேண்டும் என்ற யோசனையை பாதுகாப்புக் குழு தெரிவித்தது. ஆனால் அதை ஏற்க இந்திய அரசு மறுத்துவிட்டது. 1948ஆம் ஆண்டிலிருந்தே 1957ஆம் ஆண்டு வரை ஐ.நா. பாதுகாப்புக் குழு காஷ்மீரில் பொது வாக்கெடுப்பை வலியுறுத்தி பல தீர் மானங்களை நிறைவேற்றியது. ஆனால், அவற்றை இந்திய அரசு ஏற்கவில்லை.

காஷ்மீர் பிரதமர் ஷேக் அப்துல்லாவும் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவும் பேச்சு வார்த்தை நடத்தி யதின் விளைவாக இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திற்கும் அளிக்கப்படாத சிறப்பு உரிமைகள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் அளிக்கப்பட்டன. அம்மாநிலத்திற்கென்று தனியான அரசியல் சட்டம் வகுத்துக்கொள்ள அரசியல் யாப்பு அவை ஒன்று அமைக்கப்பட்டு 1956ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் நாள் காஷ்மீருக்கான தனி அரசியல் சட்டம் இயற்றப்பட்டது. காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டுமே அளிக்கப்பட்ட சிறப்பு உரிமைகளை முக்கியமானவற்றை கீழே காணலாம்.

1950ஆம் ஆண்டில் காஷ்மீர் அரசைக் கலந்தாலோசித்து இந்தியக் குடியரசுத் தலைவர் பிறப்பித்த ஆணையின்படி பாதுகாப்பு, வெளிநாட்டுறவு, செய்தித் தொடர்பு ஆகிய மூன்று பொருள்கள் பற்றி மட்டுமே இந்திய நாடாளுமன்றம் சட்டங்களை இயற்றலாம்.

காஷ்மீர் மாநிலத்தின் நிரந்தர குடிமக்களுக்கு அசையாச் சொத்துகள் வாங்குவது, வேலை வாய்ப்பு, குடியிருப்பு போன்றவற்றில் சிறப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவின் பிற மாநிலங்களின் வாழும் நிரந்தர குடிமக்களுக்கு இத்தகைய சிறப்புரிமைகள் எதுவும் கிடையாது. பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் காஷ்மீரத்தில் அசையாச் சொத்துகள் எதுவும் வாங்க முடியாது.

காஷ்மீர் சட்டமன்றத்தின் அனுமதியில்லாமல் அம்மாநிலத்தில் அவசர கால நிலைமையை இந்திய குடியரசுத் தலைவர் அறிவிக்க முடியாது.

காஷ்மீர் சட்டமன்றத்தின் அனுமதியில்லாமல் அம்மாநிலத்தின் பெயரை மாற்றவோ, எல்லைகளைத் திருத்தியமைக்கவோ மத்திய அரசிற்கு அதிகாரம் இல்லை.

காஷ்மீர் சட்டமன்றமே அம்மாநில ஆளுநரைத் தேர்ந்தெடுக்கும்.

இவ்வாறு எல்லாமே நட்புறவுடன் சென்றுகொண்டிருந்த நிலையில் காஷ்மீர் பிரதமர் ஷேக் அப்துல்லா சுதந்திர நாடாக காஷ்மீரை அறிவிக்கத் திட்டமிட்டிருக்கிறார் என்ற சந்தேகம் பிரதமர் நேருவிற்கு ஏற்பட்டது. இதன் விளைவாக 1953ஆம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டு 12 ஆண்டு காலம் சிறை வைக்கப்பட்டார். அவருக்குப் பிறகு இராணுவத்தின் துணையுடன் முறைகேடான தேர்தல்கள் நடத்தப்பட்டு பொம்மை முதலமைச்சர்கள் நாற்காலியில் அமர்த்தி வைக்கப்பட்டார்கள். காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்புரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டன.

1964ஆம் ஆண்டு சிறையில் இருந்து ஷேக் அப்துல்லா விடுவிக்கப்பட்டு மீண்டும் காஷ்மீர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். ஆனால், நேருவின் மறைவிற்குப் பிறகு பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி பொறுப்பேற்றபோது ஷேக் அப்துல்லா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1967ஆம் ஆண்டு ஷேக் அப்துல்லாவை விடுதலை செய்ய வேண்டுமென ஜெயப்பிரகாஷ் நாராயணன் வேண்டியபோது பிரதமர் இந்திரா அக்கோரிக்கையை ஏற்கவில்லை. ஆனாலும், ஷேக் அப்துல்லாவின் முதுமையைக் கருதி அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால், அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி காஷ்மீர் மக்களின் உள்ளங்களை புண்படுத்திவிட்டது. அதற்குப் பிறகு அவருடைய மகன் பரூக் அப்துல்லா உட்பட பலர் காஷ்மீர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோதும் நிலைமை சீராகாததோடு மட்டுமல்ல மேலும் மேலும் சீரழிந்துகொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் என்ன? முஸ்லிம் நாடான பாகிஸ்தானுடன் இணைய மறுத்து காஷ்மீர் முஸ்லிம்கள் இந்தியாவுடனேயே இணைவது என மதசார்பற்ற நிலையில் முடிவெடுத்தனர். தங்களை நம்பி இணைந்த காஷ்மீர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை இந்தியா அப்பட்டமாக மீறியது மட்டுமல்ல, இராணுவ ஒடுக்குமுறையை அம்மக்கள் மீது ஏவி விட்டது ஏன்?

காஷ்மீரில் நடப்பது என்ன என்ற உண்மையை இந்திய உள்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் சிறிதளவுகூட உணராமல் பாகிஸ்தானின் தலையீட்டின் விளைவாகவே காஷ்மீரில் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது எனப் பொருள்படும் வகையில் "மூன்றாம் நாட்டின் தலையீட்டை நாங்கள் விரும்பவில்லை'' என கூறியிருக்கிறார்.
கிழக்கு வங்கத்தில் பாகிஸ்தான் படை நடத்திய இனப்படுகொலைகள், பாலியல் வன்முறை, மனித உரிமை மீறல் ஆகியவற்றைக் குறித்து இன்றைய பா.ஜ.க.வின் முன்னோடிக் கட்சியான ஜனசங்கத்தின் தலைவராக இருந்த வாஜ்பாய் அவர்கள் என்ன கூறினார் என்பதை இராஜ்நாத் சிங் கவனப்படுத்திக்கொள்வது நல்லது.
1971ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி டில்லியில் ஜனசங்கம் நடத்திய மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தில் பேசிய வாஜ்பாய் "கிழக்கு வங்கத்தில் நடைபெறும் படுகொலையை உடனே நிறுத்தும்படி இந்தியா, பாகிஸ்தானை எச்சரிக்க வேண்டும். பல இலட்சக்கணக்கான அகதிகள் இந்தியாவிற்கு ஓடிவந்துள்ளனர். எனவே சுதந்திரமான வங்காளம் உருவாவதற்கு இந்தியா துணை நிற்க வேண்டும் அதுவே அகதிகள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்'' என வாஜ்பாய் முழங்கினார். கிழக்கு பாகிஸ்தான் பிரச்சினையில் தலையிடுவது மூன்றாவது நபரின் தலையீடாக அவர் கருதவில்லை. இனப்படுகொலையும், மனித உரிமை மீறலையும் தடுக்க வேண்டும் என அவர் கருதினார்.

இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை இலங்கையில் படுகொலை செய்த சிங்கள இராணுவத்தின் மீது சர்வதேச நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை சிங்கள அரசு ஏற்க மறுப்பதற்கும், இந்திய அரசின் காஷ்மீர் நிலைப்பாட்டிற்கும் எத்தகைய வேறுபாடும் இல்லை.

காஷ்மீர் பிரச்சினையில் இந்திய அரசும், கிழக்கு வங்கப் பிரச்சினையில் பாகிஸ்தான் அரசும், ஈழத் தமிழர் பிரச்சினையில் இலங்கை அரசும் தங்கள் இராணுவத் தளபதிகளின் நெருக்குதல்களை மீறி செயல்படத் துணிவில்லாமல் பணிந்துவிட்டன.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிழக்கு வங்க அரசுக்கு அன்றைய பாகிஸ்தான் அரசு அதிகாரம் அளிக்க மறுத்தது. காஷ்மீர் அரசுக்கு, இந்திய அரசும், இலங்கையின் வடக்கு மாகாண அரசிற்கு சிங்கள அரசும் அதிகாரங்களை அளிக்க மறுக்கின்றன.

காஷ்மீர் அரசிடமிருந்து பறித்த அதிகாரங்களை மறுபடியும் கொடுத்தால் காஷ்மீர் பிரிந்துபோய்விடும் அல்லது பாகிஸ்தானுடன் இணைந்துவிடும் என தில்லி தவறாக கருதுகிறது.

அன்று உருது மொழி திணிக்கப்பட்டபோது வங்க முஸ்லிம்கள் கொதித்தெழுந்து போராடி வெற்றி பெற்றதும். இன்றும் பாகிஸ்தானில் உள்ள பக்டூன் முஸ்லிம்கள் பக்டுஸ்தானிஸ்தான் கேட்டு போராடுவதையும் , காஷ்மீர் மக்கள் அறியாதவர்கள் அல்லர். எனவே பாகிஸ்தானுடன் அவர்கள் ஒருபோதும் சேரமாட்டார்கள்.

பாகிஸ்தானுடன் இணைய மறுத்து இந்தியாவுடன் தாமாக விரும்பி இணைந்த காஷ்மீர் மக்களை பாகிஸ்தான் கைக்கூலிகள் என குற்றம் சாட்டுவதால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும். காஷ்மீரில் உள்ள ஆயுதப்படைகளை திரும்பப் பெறுவதும், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட படை வீரர்கள்மீது நீதிவிசாரணை நடத்த முன்வருவதும் காஷ்மீரில் நேர்மையான முறையில் தேர்தல்கள் நடத்தி அங்கு உண்மையான மக்கள் அரசு அமைக்க உதவுவதும், காஷ்மீரிடமிருந்து பறிக்கப்பட்ட அதிகாரங் களை திரும்பக்கொடுப்பதும் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர படைகளை மேலும் மேலும் குவிப்பதும் அப்பாவி மக்கள் மீது ஒடுக்குமுறையை ஏவிவிடுவதும் பிரச்சனையைத் தீர்க்காது.

நன்றி : தினமணி 30-07-2016

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.