தஞ்சையில் நடைபெற்ற தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மற்றும் உலகத் தமிழர் பேரமைப்பின் 9-ஆம் மாநாட்டில் 17--07--2016 அன்று நிகழ்ந்த "பிற மொழி மயக்கம்' எனும் தலைப்பிலான அமர்வில் பூங்குழலி ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்
மொழி என்பது தனித்து இயங்க வல்லது அல்ல. ஒரு மொழியை உயிர்ப்புடன் வைத்திருக்க அதைப் பேசும் ஒரு மக்கள் கூட்டம் வேண்டும். அவ்வாறு ஒரு மொழியைப் பேசும் மக்கள் கூட்டத்திற்கு அம்மொழி இனத்தவர் என்று பெயர். அப்படியான இனம் இல்லாத மொழி இறந்த மொழியாகக் கருதப்படுகிறது. கிரேக்கம், சமற்கிருதம் போன்ற உலகின் பல பண்டைய மொழிகள் இவ்வாறு இறந்த மொழியாகவே உள்ளன. ஆக ஒரு மொழி வாழ ஓர் இனம் தேவை.
அதே போன்று மொழியை அழித்து விட்டு இனம் என்ற அடையாளத்தை தக்க வைக்க முடியாது. தங்கள் மொழியை இழந்தவர்கள் ஓர் இனமாக அறியப்படுவதில்லை.
எனவே மொழியும் இனமும் ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை என இணைந்து நிற்பவை. இங்கு இனம் என்று சொல்லும் போது அது உயிருள்ள ஒரு மக்கள் கூட்டத்தைக் குறிக்கிறது.
ஒரு இனத்தை அழிப்பது என்பது அந்த மக்கள் கூட்டத்தைக் கொன்று மட்டுமே சாதிக்க வேண்டிய ஒன்று அல்ல. அந்த இனத்தின் அடையாளத்தை அழிப்பதே இனத்தை அழிப்பதற்கு இணையானது.
1948-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அய். நா. வின் இனப்படுகொலைப் பிரகடனத்தின் பிரிவு 2 இனப்படுகொலை என்பதை இவ்வாறு விவரிக்கிறது.
"ஒரு தேசிய, இன, சமய அல்லது இனக்குழுவைத் திட்டமிட்டு பரந்த அளவில் முழுமையாக அழித்தொழிப்பது அல்லது அழித்தொழிக்க முற்படுவது என்ற நோக்கத்துடன் – இந்த நோக்கம் என்ற சொல்லே மிக முக்கியமானது – செய்யப்படும் கீழ்க்காணும் செயல்கள்:
அக்குழுவைச் சேர்ந்தவர்களைக் கொல்வது-
அக்குழுவைச் சேர்ந்தவர்களுக்கு உடல் அல்லது உள்ளத்தில் கடுமையான காயத்தை ஏற்படுத்துவது- அக்குழுவைச் சேர்ந்தவர்கள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழியும் வகையில் திட்டமிட்ட வாழ்நிலையை அவர்கள் மீது திணிப்பது-
அக்குழுவிற்குள் குழந்தைகள் பிறப்பதை கட்டாயமாகத் தடுப்பது- அக்குழுவைச் சேர்ந்த குழந்தைகளை கட்டாயமாக வேறொரு குழுவிற்கு மாற்றுவது' - என்பதாக வரையறை செய்கின்றது.
இதில் நாம் கவனிக்க வேண்டியது ஓர் இனத்தை அழிக்கும் வகையில் திட்டமிட்ட வாழ்நிலையை அவர்கள் மீது திணிப்பது என்பதைத்தான்.
இன்று வரை ஈழத்தில் தொடரும் இனப்படுகொலை குறித்து நாம் பேசி வருகிறோம். 2009 மே மாதத்துடன் ஆயுதப் போர் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனாலும் இன்று வரை தமிழர்கள் மீதான உளவியல் போர் தொடர்கிறது. தமிழர்களின் அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன என்று நம் கண் முன் காண்கிறோம்.
ஆனால், ஏறத்தாழ பல நூற்றாண்டுகளாக இதே போன்றதொரு இனப்படுகொலை இலங்கையில் அல்ல, இங்கே வாழும் தமிழர்கள் மீது நடத்தப்பட்டு வந்ததை, இன்றும் அது தொடர்வதை நாம் உணரவில்லை என்பதுதான் வேதனையானது.
எப்படி இன்று இலங்கையில் தமிழ் ஊர்ப் பெயர்கள் எல்லாம் சிங்களப் பெயர்களாக மாற்றம் பெறுகின்றனவோ அப்படித்தான் திருமறைக்காடு வேதாரண்யம் ஆகியது. குடந்தை கும்பகோணம் ஆகியது. மயிலாடுதுறை மாயூரம் ஆகியது. இது ஒரு வெளிப்படையான சான்று மட்டுமே.
வரலாற்று நோக்கில் இந்தியா என்று அழைக்கப்படும் இந்த நிலப்பகுதியெங்கும் ஒரு காலத்தில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். சிந்து சமவெளி நாகரிகம் என்பது தமிழர் நாகரிகமாக இருந்தது. இன்று தமிழ்நாடு என்று சுருங்கிய ஓர் இடத்தில் மட்டுமே தமிழர் என்ற அடையாளத்துடன் வாழ்கின்றனர்.
இந்திய நிலப்பகுதியில் உள்ள பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருமே தமிழர்கள் – திராவிடர்கள் என வரலாற்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. வெளியில் இருந்து வந்த ஆரியம் – சமற்கிருதம் இந்த மக்களிடையே ஊடுருவி அவர்களை பல வேறு இனங்களாக கூறு போட்டது.
இந்தப் பின்னணியில்தான் நாம் ஆரியர் – திராவிடர் என்ற சொல்லாடல்களைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆரியர் இந்த மண்ணில் தொல்குடி மக்களான திராவிடர்கள் மீது நடத்திய இனப்படுகொலை பல வடிவங்களை எடுத்தது. தொல் திராவிடர்கள் என்பவர்கள் தொல் தமிழர்களே. அதனால்தான் இன்றும் ஆரியர்களுக்கு, சமற்கிருதத்தை தாங்கிப் பிடிப்பவர்களுக்கு, தமிழும் தமிழர்களும் பெரும் அச்சுறுத்தலாக தெரிகின்றனர். பிற இந்திய மொழிகளை விடவும் தமிழை இல்லாதொழிக்க அவர்கள் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆரியத்துடன் கலந்து இம்மண்ணின் மக்கள் பல் வேறு மொழி இனங்களாக பிரிந்து போய் விட்ட பிறகும் தமிழ் மொழியை விடாமல் பற்றி ஒரு மக்கள் கூட்டம் தெற்குப் பகுதியில் வாழ்ந்து வருகிறது. இவர்களையும் அழிக்க ஆரியம் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்தது.
தமிழர் வழிபாட்டை தன் வசமாக்கியது. முருகனை சுப்பிரமணியன் ஆக்கியது. வள்ளியுடன் தெய்வானையையும் அவனுக்கு மணம் செய்து வைத்தது. மாலவனை, திருமாலை, விஷ்ணுவாக்கியது. ஊர் தோறும் இருந்த பெண் காவல் தெய்வங்களை காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி என ஆக்கியது. வழிபாட்டு முறைகளில் தமிழை அறவே நீக்கி சமற்கிருதத்தை தெய்வ பாஷை ஆக்கியது. அந்த தெய்வ பாஷையில் தெய்வத்திடம் பேச தகுதியானவர்கள் என பார்ப்பனர்களை நிறுவியது.
நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி என தமிழ்ப் பெயர் தாங்கிய மன்னர்களின் வழித் தோன்றல்களை விஜயாலயன், இராஜராஜ சோழன் என பெயர் சூட்ட வைத்தது. மன்னர் எவ்வழி மக்கள் அவ்வழி எனும்படி மக்களும் சமற்கிருதப் பெயர்களுக்கு மாறினர்.
தமிழர் இசையை பறித்து தெலுங்கு கீர்த்தனைகளை திணித்தது. நடனத்தை பரதநாட்டியம் என ஆரிய மயப்படுத்தியது.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஜாதி எனும் கொடிய நஞ்சினால் இச்சமூகத்தை சுக்கல் சுக்கலாக உடைத்தது. ழியால் ஒன்றாக இருந்தவர்களை மொழியை மறந்து ஜாதியால் பிரிந்து நிற்க வைத்தது. அதனிலும் கொடியதாக, அந்த ஜாதியை படிநிலை அமைப்பாக்கி அதன் உச்சத்தில் ஆரியம் தன்னை நிறுத்திக் கொண்டு, தமிழர் அனைவரும் தனக்கு கீழானவர்களே என அறிவித்தது. அதை தமிழர்களையும் ஏற்று பின்பற்ற வைத்தது.
ஆக தமிழர்கள் தங்கள் வழிபாட்டில், பெயரில், இசையில், நடனத்தில், சமூக வாழ்வில் என அனைத்திலும் ஆரிய மயமாகிப் போயினர். இறுதி அடியாக மொழியையும் அழித்து விட்டால் இனி தமிழர் என்ற அடையாளம் முற்றிலும் அற்றுப் போய்விடும் என்ற நிலையில், சமற்கிருத சொற்களை மிகுதியாக கலந்து எழுதுவதே மேன்மையானது என்ற சிந்தனைப் போக்கை உருவாக்கி, மணிப்பவழ நடையை பரவலாக்கியது. இந்த நிலையில்தான் மறைமலையடிகள் விழித்து துடித்தெழுந்து அந்த பேரழிவிலிருந்து தமிழ் மொழியைக் காத்தார். அதன் மூலம் தமிழ் இனம் தன் அடையாளத்தை முற்றிலும் இழந்து நிற்கும் பேரபாயத்திலிருந்தும் காத்தார்.
சதுப்பு நிலத்தில் மூழ்கிக் கொண்டிருந்த தமிழ் இனத்தின் தலையைப் பிடித்து இழுத்து மூச்சு மட்டுமேனும் விடும்படி செய்தார். ஆனால் ஆரியம் – சமற்கிருதம் எனும் சதுப்பு நிலத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் தமிழ் இனம் முற்றிலுமாக தப்பிவிடவில்லை. இன்று வரையிலும் அது சிக்கிக் கொண்டுதான் உள்ளது. மறைமலை அடிகள் தமிழ் மொழியை சமற்கிருதத்தின் பிடியிலிருந்து மீட்டார். அவரைத் தொடர்ந்து வந்த பெரியார் தமிழர் இனத்தினை சமற்கிருதத்தின் – ஆரியத்தின் பிடியிலிருந்து மீட்க தன் வாழ்நாளெல்லாம் போராடினார். அந்தப் போராட்டம் இன்றளவிலும் தமிழர் சமூகத்தின் தேவையாகவே உள்ளது. பிறமொழிக் கலப்பற்ற தமிழ் மொழியைப் பேசவும் எழுதவும் செய் கின்ற பல தமிழர்களும் தங்கள் சமூக வாழ்விலும், தனிப்பட்ட வாழ்விலும் தங்களையும் அறியாமல் ஆரியத்தின் பிடியில் சிக்கி நிற்கின்றோம்.
ஆரிய வேதமான மனு சாஸ்திரமே இன்று தமிழரின் சமூக வாழ்வை வழிநடத்துவதாக உள்ளது. மனு தர்மம் என்ற சொல்லை மனு நீதி என்று தமிழில் அழைத்து விட்டு பின்பற்றினாலும் அது ஆரிய வேதமே. தொல் தமிழர்கள் தாய் வழிச் சமூகமாக நின்றவர்கள். தமிழ்ச் சமூகத்தில் பல அவ்வைகள் வாழ்ந்தனர் என்று அறிகிறோம். அப்படியான கற்றறிந்த தமிழ்ப் பெண்களைக் கொண்ட அறிவார்ந்த சமூகமாக அன்றைய தமிழ்ச் சமூகம் நின்றது. மனு நீதியோ பெண்கள் வீட்டு வேலைக்கு மட்டுமே தகுதியானவர்கள் என்று கூறுகிறது. அதை ஏற்கும் தமிழர்கள் ஆரியத்தின் பிடியில் நிற்பதாகத் தானே பொருள்?
தமிழ் இலக்கியங்கள் காதலைக் கொண்டாடிக் களித்தன. திருக்குறள் உள்ளிட்ட அனைத்து சங்க இலக்கியங்களும் காதலின் மேன்மையை கொண்டாடாமல் விட்டதில்லை. அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்ற கம்ப இராமாயண வரிகளை நாம் அனைவருமே அறிந்திருப்போம். அதாவது வில்லை உடைக்கும் போட்டிக்கு செல்லும் முன்பே சீதையும் இராமனும் ஒருவரை ஒருவர் கண்டு காதல் வசப்பட்டனர் என்கிறது கம்ப இராமாயணம். இத்தகைய சந்திப்பு வட இந்திய இராமாயணத்தில் கிடையாது. காதலுக்கு தமிழர் கொடுத்த முக்கியத்துவத்தை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம். மனு நீதியோ காதல் தவறென்றது. காதலின் விளைவான ஜாதி கலப்பு மணங்களை குற்றம் என்றது. இன்றைய தமிழர்கள் காதல் மணங்களை எதிர்ப்பது, அதிலும் ஆரியம் நமக்கு அளித்த நஞ்சான ஜாதியின் அடிப்படையில் எதிர்ப்பதும் நாம் இன்னும் ஆரியத்தின் பிடியில் இருப்பதைத்தானே காட்டுகிறது?
தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்தப் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. அதில் ஓரளவு வெற்றியும் கிடைத்தது. எந்த அளவில் என்றால், ்இங்கு தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்' எனும் அளவிற்கு. வாய் விட்டு கேட்டால் அன்றி தமிழ் அர்ச்சனை நடப்பதில்லை. அதை ஏற்று கோயில்களில் வழிபட்டு வரும் நாம் ஆரியத்தை ஏற்றுக் கொண்டதாகத் தானே பொருள்?
அதிலும் பார்ப்பனர்கள் மட்டுமே கருவறைக்குள் நுழைய முடியும் என்ற மனு வின் நீதியை நடைமுறைப்படுத்தும் கோயில்களில், அந்த பார்ப்பனர்களை "சாமி' என்று அழைத்து அவர்களிடம் கையேந்தி திருநீற்றைப் பெற்று வரும் நாம், ஆரியத்திற்கு நாம் அடிமை என்பதை வெளிப்படையாக ஒத்துக் கொள்வதாகத்தானே பொருள்?
தமிழ்ப் பெயர் சூட்டுவது என்பதை தமிழ் இயக்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. 1950-கள் 60-களில் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும், சமற்கிருதப் பெயர்களை மாற்றி தமிழ்ப் பெயர்கள் சூட்டிக் கொள்வதை ஓர் இயக்கமாக பரவலாகக் கொண்டு சென்றன. அதன் விளைவாக பல இளைஞர்கள் தங்களது சமற்கிருதப் பெயர்களை நீக்கி தமிழ்ப் பெயர்களை சூட்டிக் கொண்டனர்.
இன்று 60-70 வயதிற்கு மேற்பட்டவர்களில் இயற்பெயராக தமிழ்ப் பெயர் கொண்டுள்ளோரைப் பார்த்தால் அவர்கள் தனித் தமிழியக்கக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் அல்லது திராவிட இயக்கக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.
அதன் பின்னர் சிறிது சிறிதாக அது மறைந்தது. பின்னர் 2002-ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் தமிழ்ப் பெயர் மாற்றுவதை மிகப் பெரும் இயக்கமாக தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கு எல்லாம் எடுத்துச் சென்றது.
ஆனால் இன்று என்ன நிலை? இன்று எந்த கல்விநிலையத்திற்கும் சென்று மாணவர்களின் பெயர்ப் பட்டியலைப் பார்த்தால் வாய்க்குள் நுழையாத சமற்கிருதப் பெயர்களே நிறைந்திருப்பதைக் காணலாம். குழந்தை பிறந்தவுடன் அது ஆரோக்கியமாக உள்ளதா என்ற கேள்விக்கு முன் அது எத்தனை மணிக்குப் பிறந்தது என்று கேட்டு, உடனே நிமித்தக்காரர்களிடம் ஓடிச் சென்று, ஜாதகம் குறிப்பதும், பிறந்த நட்சத்திரம் அல்லது எண் கணித அடிப்படையில் பெயர் சூட்ட விழைவதுமே இதற்கு காரணம். நேற்று தமிழமல்லன் அய்யா அவர்கள் குறிப்பிட்டபடி, இந்த ஜோசியக்காரர்கள் குறித்துக் கொடுக்கும் எழுத்துக்களில் தமிழ்ப் பெயர்களே வைக்க முடியாது. இந்த ஜோசியமும் ஜாதகமும் ஆரியத்தின் கூறுகள் இல்லையா?
மத விழாக்களை எடுத்துக் கொண்டால், ஒன்றாவது தமிழர் விழாவாக உள்ளதா? அதிலும் தீபாவளியை தமிழர்கள் கொண்டாடுவது என்பது எத்தனை வேதனையான ஒன்று. புரிதலுக்காகச் சொல்கிறேன். 2009-ஆம் ஆண்டு மே 18-ஆம் நாள் ஈழத்தில் தமிழர்களுக்கு பேரழிவு நடந்த நாள். சிங்களர்களுக்கு பெரும் வெற்றி நாள். இலங்கைத் தீவில் கடந்த 7 ஆண்டுகளாக தமிழர்கள் அதை துக்க தினமாகவும் சிங்களர் வெற்றி தினமாகவும் கொண்டாடி வருகின்றனர். காலப் போக்கில், நடந்த வரலாற்றை அறியாத வருங்காலத் தமிழர்கள், சிங்களர்களுடன் இணைந்து அந்நாளை வெற்றி விழாவாகக் கொண்டாடினால் அது எத்தகைய வேதனையான செய்தியோ அத்தனை வேதனையானது நரகாசுரன் என்ற தமிழ் மன்னனைக் கொன்ற நாளை ஆரியர்களோடு இணைந்து நாம் வெற்றி விழாவாக, தீபாவளியாகக் கொண்டாடுவது.
இப்படி நம் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நாம் ஆரியத்தின் பிடியில் நின்று கொண்டு மொழியை மட்டும் ஆரியத்தின் பிடியிலிருந்து மீட்டு என்ன பயன்?
அய்யா பெரியார் அவர்கள் மானமும் அறிவும் கொண்ட மக்களாக தமிழர்கள் மாற வேண்டும் என பாடுபட்டார். மானமுள்ள மக்கள் எந்தவொரு ஆதிக்கத்திற்கும் அடிபணிய மாட்டார்கள். சமற்கிருதத்தின் பிடியிலிருந்து தமிழ் மொழியை மீட்டதோடு, ஆரிய வாழ்வின் - ஆரியப் பண்பாட்டின் பிடியிலிருந்து தமிழ் இனத்தையும் நாம் மீட்டிருந்தால், மீண்டும் இன்று ஆங்கிலத்தின் பிடியில் சிக்கும் நிலை நேர்ந்திருக்காது.சமற்கிருதத்தின் இடத்தில் ஆங்கிலம் அமர்வதை அனுமதித்திருக்க மாட்டோம்.எனவே மொழி மீட்போடு நின்று விடாமல் தமிழ் இனத்தையும் ஆரியத்தின் பிடியிலிருந்து மீட்டு தன்மானம் மிக்க தமிழர்களாக வாழ நாம் முனைந்து செயல்படுவோம்! |