<ஈழத் தமிழினப் படுகொலை (பதிப்பாசிரியர் - நடுநல்நாடன்) மறதி என்ற நோயுடன் நம் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கையில், பதிப்பாசிரியர் நடுநல்நாடன் அவர்கள் 2011ஆம் ஆண்டு அன்னை முத்தமிழ்ப் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்ட புத்தகம்தான் இந்த "ஈழத் தமிழினப் படுகொலை' என்னும் நூல். இது ஈழத்தில் நடந்த தமிழ் இன அழிப்புப் பற்றி, ஆதாரங்களுடன் பல பதிவுகள் செய்த ஐ.நா. நிபுணர்களின் குழு அறிக்கையின் முக்கியப் பகுதிகளைக் கொண்டதாகவும், அவர்கள் கொடுத்திருந்த முடிவுகள், பரிந்துரைகள் பற்றிய பதிவுகளை தொகுத்துக் கொடுத்தும், மிஞ்சி இருக்கும் தமிழ் மக்களையாவது காப்பாற்ற முடியுமா? என்ற ஏக்கத்தையும், கலக்கத்தையும் நம்மிடம் காட்டியுள்ளார்.
நடந்துவிட்ட நிகழ்ச்சிகள், முடிந்துவிட்ட துயரங்கள், குழிதோண்டி புதைக்கப்பட்ட கொடுமைகள் என்று நாம் இருந்து விடமுடியாது, இருந்து விடக்கூடாது என்பதற்காகவும், இலங்கை அரசு ஆடிய பேயாட்டத்தை, மனித உரிமை மீறல்களை, இன அழிப்பை உலகத் தமிழர்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டவும் ஐ.நா. நிபுணர்கள் குழுவின் அறிக்கைகளை நாம் எல்லோரும் படித்துத் தெரிந்து கொண்டு நமது தமிழக அரசின் துணையோடு நல்லதொரு தீர்வினை ஈழத் தமிழர்களுக்கு அளிக்க வேண்டும் என்பதும் இவரது நூலின் தொகுப்பு நமக்கு தெரியப்படுத்துகிறது.
போரின் போதும், அதற்குப் பின்பும் தமிழ் ஈழமக்கள் உடலாலும், மனதாலும் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்னர் என்பதை சொல்லி மாளாது. ஆண்கள், பெண்கள், பெரியவர்கள், சிறியவர்கள், குழந்தைகள் என்று பாரபட்சம் பார்க்காமல் போர் விதிகளை மீறி தமிழ் இனத்தை வேரோடு அழித்த செயல்களை, பல ஆதாரங்களுடன் ஐ.நா. நிபுணர்கள் குழு வெளியிட்டு பல உண்மை விவரங்களை, செய்திகளை, ஆவணங்களை பகிரங்கமாக பதிவு செய்துள்ளது பற்றி இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. உண்மை நிலையினை உணர, நம் சகோதர உறவுகைளக் காப்பாற்ற அவர்களை மீள் குடியமர்த்த இந்த புத்தகம் உலகத் தமிழர்களுக்கு துணை நிற்கும். - தமித்த லட்சுமி
படை வீட்டில் பழனி (பழனி - மகிழ்நன்)
முருகனின் தீவிர பக்தரும், தமிழ் மொழியில் மிகுந்த ஈடுபாடும் கொண்ட வருமான ஐயா, கிருபானந்த வாரியார் அவர்களின் "வாழ்த்துரை'யோடு இநதப் புத்தகம் வெளியாகி உள்ளது. இதிலிருந்தே இந்த நூலின் பெருமையை உணர்ந்து கொள்ள முடிகிறது. குறிஞ்சித் தெய்வமாக, மலையப்பனாக விளங்கும் முருகக் கடவுளைப் பற்றியும், அவரின் மூன்றாம் படைவீடான பழனியம்பதியைப் பற்றியும் நிறைய செய்திகளை, பிறமொழிக் கலப்பில்லாமல் அழகு தமிழில் அச்சிட்டுக் கொடுத்திருக்கிறார். நூலாசிரியர்.
ஆறுபடைவீட்டில் பழனி 3-ம் படைவீடாக அமைவதால் முருகாற்றுப் படை கூறும் "ஆவினன்குடி' குறித்து ஆய்வு செய்ததில் அருள்மிகு பெரியநாயகி அம்மன் கோயில்தான் முருகாற்றுப்படை கூறும் முருகன் கோயில் என்ற உண்மை தெரிந்து கொள்ள முடிந்ததாக வாசகர்களுக்குத் தெளிவுபடுத்துகிறார். புராணச் செய்திகளையும், வரலாற்று உண்மைகளையும் எட்டு அரிய கட்டுரைகளாக பிரித்து அவை ஒவ்வொன்றிலும் தல வரலாற்றோடு இணைத்து செய்திகளையும் அடக்கி, ஆய்வு நூல் போல் பழனியைப் பற்றிய அத்தனை அழகான கட்டுரைகளை வாசகர்களுக்காகப் பகிர்ந்துள்ளார்.
வேல் வணக்கம்-வீரவணக்கமாகவும், ஒளிவணக்கம் அறிவு விளக்கமாகவும், இவைகளின் உள்ளடக்கமே முருக வணக்கமாகவும் விளங்குகிறது என்று கூறி இயற்கை வழிபாடே முருக வழிபாடு, இயற்கை அழகே முருகு என்று சிறப்புற பல உதாரணங்களுடன், ஆதாரங்களுடன் தமிழ்க் கடவுளான முருகனை நம் கண் முன்னே நிறுத்தும் ஆசிரியருக்கு நம் பாராட்டுக்கள்!
- தமித்த லட்சுமி |