மனுநீதிச் சோழன் திகைக்கிறான்! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 31 ஆகஸ்ட் 2016 15:29

நீதித் தராசின் இரு தட்டுகளாக நேர் நின்று நடுநிலை தவறாமலும் நேர்மையாகவும் மக்களுக்கு நீதி வழங்க வேண்டிய நீதிபதிகளும், நீதியைக் காண அவர்களுக்கு உதவ வேண்டிய வழக்கறிஞர்களும் ஒருவருடன் ஒருவர் மோதிக் கொண்டு கடந்த 60க்கும் மேற்பட்ட நாட்களாக தமிழ்நாட்டில் எந்த நீதிமன்றமும் செயற்பட முடியாத வருந்தத்தக்கப் போக்கு உருவாகியுள்ளது.

நீதிமன்றங்களில் முறைகேடாக செயல்படும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக 1925ஆம் ஆண்டு இந்திய பார் கவுன்சில் சட்டம் ஆங்கிலேயர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. இதன்படி உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கறிஞர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், நாட்டு விடுதலைக்காகப் போராடிய வழக்கறிஞர்களுக்கு எதிராக ஆங்கிலேய நீதிபதிகள் இந்தச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்திய நிகழ்ச்சிகள் நடந்தன.

எனவே பார் கவுன்சிலுக்கு சுதந்திரமாகச் செயல்படும் அதிகாரத்தை வழங்கும் வகையில் 1961ஆம் ஆண்டு வழக்கறிஞர்களின் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி முறை தவறி நடக்கும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பார் கவுன்சிலுக்கு வழங்கப்பட்டது.

ஆனால், அண்மையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் மற்றும் சில நீதிபதிகளும் இணைந்து தங்களுக்குள்ள அதிகாரத்தை வழக்கறிஞர்கள் சட்டத்தில் புதிய விதிகளை சேர்த்து அதை அரசிதழில் வெளியிட்டனர்.

இதன்படி நீதிமன்ற வளாகத்திற்குள் ஒரு வழக்கறிஞர் குடிபோதையில் இருந்தாலோ, நீதிபதிகள் மீது பொய்யானக் குற்றச்சாட்டை சுமத்தினாலோ, நீதிபதியைச் சூழ்ந்துநின்று முழக்கமிட்டாலோ, நீதிமன்ற வளாகத்தில் ஊர்வலமாகச் சென்றாலோ, நீதிமன்ற அரங்கில் கோரிக்கைத் தட்டிகளைப் பிடித்து நின்றாலோ அவர்கள் மீது அந்தந்த நீதிபதியே நடவடிக்கை எடுக்கலாம். வழக்காடும் உரிமையை இரத்து செய்யலாம்

என்பதுதான் வழக்கறிஞர் சட்டத்திற்குக் கொண்டுவரப்பட்ட புதிய விதிகளாகும்.
நீதிமன்ற வளாகத்தில் மேற்கண்டவாறு தவறுகளில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை யாரும் எதிர்க்க மாட்டார்கள். ஆனால் பார் கவுன்சிலுக்கு உள்ள அதிகாரத்தை நீதிபதிகளே கையில் எடுத்துக் கொள்வது பழிவாங்கும் நடவடிக்கையாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது எனக்கூறிப் போராடும் வழக்கறிஞர்கள் அதே வேளையில் தங்களிடையே நடமாடும் கருப்பு ஆடுகளை அடையாளம் கண்டு பார் கவுன்சில் மூலம் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.

""நீதிமன்றத்திற்குள் எத்தனையோ பட்டியலிடமுடியாத அசிங்கங்கள் அரங்கேறுகின்றன'' என நீதிநாயகம் சந்துரு அவர்கள் கவலை தெரிவித்திருப்பதையும் வழக்கறிஞர்கள் தங்கள் கவனத்தில் கொண்டு சிந்திக்க வேண்டும். இத்தகைய அசிங்கங்கள் நீதிமன்றத்தின் பெருமையையே குலைத்துவிடும்.
சமுதாயத்தில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஆகியோருக்கு உயர்மதிப்பு உள்ளது. மக்கள் அவர்களைச் சான்றோர்களாகக் கருதி மரியாதைக் கொடுக்கிறார்கள். மக்கள் அளிக்கும் இந்த மரியாதைக்கு உகந்தவர்களாக நீதித்துறையில் அங்கம் வகிக்கும் அனைவரும் நடந்துகொள்ள வேண்டும்.

நீதிமன்றத்தில் வரம்புமீறும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம் போன்ற வழிமுறைகள் உள்ளன. இவற்றை புறந்தள்ளிவிட்டு வழக்கறிஞர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை நீதிபதிகள் மேற்கொள்வது வழக்கறிஞர்களின் தொழில் செய்யும் அடிப்படை உரிமையை பறித்துவிடும். மேலும் தவறு செய்யும் நீதிபதியைக் காப்பாற்றும் நோக்கம் கொண்டதாகவும். இவ்விதிமுறைகள் அமைந்துவிடக்கூடும்.

உயர்நீதிமன்ற நீதிபதி முதல் மாவட்ட நீதிபதி வரை வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்பட்டிருப்பதால், தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு காரணமாகக்கூட வழக்கறிஞர்கள் பழிவாங்கும் நடவடிக்கைக்கு ஆளாகலாம்.

தவறு செய்யும் வழக்கறிஞர் மீது பார் கவுன்சில் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது எதிர்த்தரப்பின் குற்றச்சாட்டாகும். வழக்கறிஞர்கள் தேர்தல் மூலம் பார்கவுன்சில் தலைவரையும் நிர்வாகிகளையும் தேர்ந்தெடுக்கிறார்கள். பார்கவுன்சில் முறையாகச் செயல்படவில்லை என்றுகூறி அதன் கையில் உள்ள அதிகாரத்தை நீதிபதிகளே மேற்கொள்வது சனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானதாகும்.

இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்றத்தை முற்றுகையிட்டு பல்லாயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் வரலாறு காணாதப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

இதுவரை பாராமுகமாக இருந்த அகில இந்திய பார் கவுன்சில் தமிழக வழக்கறிஞர்கள் 168 பேரை இடைநீக்கம் செய்துள்ளது. இதன் விளைவாக தற்போது உண்ணா நோன்புப் போராட்டத்தையும் வழக்கறிஞர்கள் மேற்கொண்டுள்ளனர். மேலும் மேலும் பிரச்சினை சிக்கலுக்குரியதாக ஆக்கப்பட்டு வருகிறது.
2009ஆம் ஆண்டு சனவரி 29ஆம் நாளில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் காவல்படையினர் புகுந்து நீதிபதிகள் உள்பட ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்களை மிகக்கடுமையாகத் தாக்கிய நிகழ்ச்சியை யாரும் மறந்துவிட முடியாது. தலைமை நீதிபதி அழைக்காமல் யாருடைய ஆணையின்பேரில் காவல் படையினர் இவ்வாறு நடந்துகொண்டனர் என்பது இதுவரை யாருக்கும் புரியாத மர்மமாக இருந்து வருகிறது. இது குறித்து உச்சநீதிமன்றம் தலையிட்டு சம்பந்தப்பட்ட காவல் படை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆணைப்பிறப்பித்தும் இதுவரை யாரும் தண்டிக்கப்பட வில்லை. இக்கொடிய நிகழ்ச்சி குறித்து யாரும் கவலைப்படவில்லை.

ஆனால், வழக்கறிஞர்களின் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள புதிய விதிகளை எதிர்த்துப் போராடும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கைகள் பாய்கின்றன.

உயர்நீதிமன்ற வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள மனுநீதிச் சோழனின் சிலை தனக்கு முன்பாக வழக்கறிஞர்கள் ஓடஓட விரட்டியடிக்கப்பட்டு காவல்படையால் தாக்கப்பட்டதையும், இப்போது நீதிபதிகள் கொண்டுவந்த புதிய விதிமுறைகளை எதிர்த்து வழக்கறிஞர்கள் போராடுவதையும், பல்லாயிரக்கணக்கான மக்கள் நித்தமும் தாங்கள் தொடுத்துள்ள வழக்குகளுக்காக நீதிமன்றம் வந்து ஏமாற்றத்துடன் திரும்பிப் போவதையும் பார்த்துத் திகைக்கிறது.

நீதிபதிகள் நீதிவழங்கும் கடமையை மேற்கொண்டிருப்பவர்கள். சட்டங்களின் துணைகொண்டு அவர்கள் நீதியைக் காண்பதற்கு உதவும் கடமையை மேற்கொண்டிருப்பவர்கள் வழக்கறிஞர்கள். இருவரும் தங்கள் கடமைகளில் இருந்து விலகி நிற்பதால் பாதிக்கப்படுவது பொது மக்களே என்பதை யாரும் எண்ணிப்பார்த்ததாகத் தெரியவில்லை.

தலைமை நீதிபதி கவுரவம் பார்க்காமல் வழக்கறிஞர்களின் பிரதிநிதிகளை அழைத்துப்பேசி தீர்வுகாண முயன்றிருக்க வேண்டும். அவரும் அதைச் செய்யவில்லை.

வழக்கறிஞர்களும், போராட்டப் பாதையைத் தவிர்த்து பேசித் தீர்க்க முன்வந்திருக்க வேண்டும். அவர்களும் அதற்குத் தயாராக இல்லை.

தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் இதில் தலையிட்டிருக்க வேண்டும் அல்லது தனது சார்பில் சட்ட அமைச்சரை அனுப்பி தலைமை நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்து உடனிருந்து பிரச்சினையைச் சுமூகமாகத் தீர்க்க முயற்சி செய்திருக்க வேண்டும். அதுவும் நடைபெறவில்லை.
இரு தரப்பினரிடையே நிலவும் தன்முனைப்பு காரணமாக பாதிக்கப்பட்டிருப்பது பொது மக்களே கடந்த 60 நாட்களுக்கு மேலாகத் தமிழகத்தில் எந்த நீதிமன்றமும் இயங்க முடியவில்லை என்பது ஒட்டுமொத்தத்தில் தமிழகத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளது.

தங்களுக்குப் பலவகையாலும் துணையாக இருந்து செயற்படுபவர் களைத் தழுவி பேணிக்கொள்ளாமல் கடிந்து உரைப்பது வறியவர் ஒருவர் தாம் உண்பதற்கு வைத்திருந்த மண் ஓட்டை தாமே போட்டு உடைப்பதற்கு ஒப்பானது என பழமொழி என்னும் இலக்கியம் கூறுகிறது.

தாமாற்ற கில்லாதார் தாஞ்சாரப் பட்டாரைத்
தீமாற்றத் தாலே பகைப்படுத்திட்டு - ஏமாப்ப
முன்னோட்டுக் கொண்டு முரணஞ்சிப் போவாரே
உண்ஒட் டகலுடைப் பார். - பழமொழி : 163

நன்றி : தினமணி 11-8-2016

 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.