தமிழர் தேசிய முன்னணி கட்சித் தேர்தல் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 31 ஆகஸ்ட் 2016 15:32

அன்பார்ந்த தோழர்களே!

நமது தமிழர் தேசிய முன்னணியின் உறுப்பினர் சேர்க்கை 31-08-2016 அன்றோடு நிறைவடைகிறது என்பதை அனைவரும் அறிவோம். செப்டம்பர் திங்களில் கீழ்க்காணும் நாள்களில் ஏற்கெனவே அறிவித்தபடி தேர்தல் நடத்தப்பெற வேண்டும். தேர்தல் பொறுப்பாளர்கள் அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் முறையாக அறிவிப்புச் செய்து குறைவேதுமின்றி தேர்தலை நடத்த வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பட்டியலைத் தலைமை அலுவலகத்துக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். தேர்தல் நடக்கும் இடம், முகவரியினை முன்கூட்டியே தலைமைத் தேர்தல் அலுவலருக்கும், அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலருக்கும் தெரிவிக்க வேண்டும்

அ. செப்டம்பர் 5 முதல் 10 வரை சிற்றூர் கிளைகள் மற்றும் நகரங்களில் உள்ள வட்டக் கிளைகள் ஆகியவற்றின் நிருவாகிகள் மற்றும் ஒன்றிய, நகரக் கிளைப் பேராளர்கள் தேர்தல் நடத்தப்படும்.

ஆ. மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்கள், நகரங்கள், பேரூராட்சிகள் ஆகியவற்றின் நிர்வாகிகள், மாவட்டப் பேராளர்கள் ஆகியோரின் தேர்தல் செப்டம்பர் 15 முதல் 20 வரை நடத்தப்படும்.

இ. ஒவ்வொரு ஒன்றியத்திலும் 15க்கும் குறையாத சிற்றூர்களிலும், நகரங்கள் மற்றும் பேரூராட்சிகளில் ஐந்துக்கும் குறையாத வட்டங்களிலும் நமது சட்டத்திட்டத்தின்படி போதுமான அளவு உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டிருந்தாலொழிய ஒன்றிய, நகர, பேரூராட்சிக் கிளைகளுக்கான தேர்தல் நடத்தக்கூடாது. அவ்வாறு கிளைகள் அமைக்கப்படாத இடங்களில் உள்ள ஒன்றியங்கள், நகரங்கள், பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு அமைப்பாளர்களை மாவட்டத் தலைவர் நியமித்து உறுப்பினர்கள் சேர்த்தல் சிற்றூர், வட்டங்கள் ஆகியவற்றின் கிளைகளை அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளவேண்டும்.

ஈ. மாவட்டத் தலைமைக்கும் தேசியப் பேரவையின் பேராளர்களுக்குமான தேர்தல்கள் செப்டம்பர் 25 முதல் 30ஆம் நாள் வரை நடத்தப்படும்.

உ. மாநிலத் தலைவர், பொருளாளர், தலைமைச் செயற்குழு, தணிக்கைக் குழு, சொத்துப் பாதுகாப்புக் குழு ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தல் 16-10-2016 அன்று நடத்தப்படும்.

பா. இறையெழிலன்
மாநிலத் தேர்தல் அலுவலர்

 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.