இந்திய அரசின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான வெங்கையா (நாயுடு) "காவிரிப் பிரச்சினையில் சட்ட முறையிலான தீர்வு காண வேண்டும்'' என கூறியுள்ளார்.
காவிரிப் பிரச்சினையில் கர்நாடக அரசும், இந்திய அரசும் தொடர்ந்து சட்டப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்காமல் சட்டத்தை எவ்வாறெல்லாம் துச்சமாக மதித்துத் தூக்கியெறிந்து தமிழகத்தை வஞ்சித்தன, தொடர்ந்து வஞ்சித்து வருகின்றன என்பதை கீழ்க்கண்ட உண்மைகள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.
1924ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட காவிரி உடன்பாடு 1974இல் புதுப்பிக்கப்பட வேண்டி இருப்பதால் அது குறித்து 1968ஆம் ஆண்டு மத்திய பாசன அமைச்சர் கே.எல். இராவ் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் ஆகிய மூன்று மாநில முதலமைச்சர்களை அழைத்துப் பலமுறை பேசியும் பயனில்லாமல் போகவே 1970ஆம் ஆண்டில் "இப்பேச்சுக்கள் பயனளிக்கும் என்ற நம்பிக்கையை தான் இழந்துவிட்டதாக'' வெளிப்படையாகக் கூறினார்.
"1956ஆம் ஆண்டு பன்மாநில ஆற்று நீர் பிரச்சினைகள் சட்டத்தின் 4 (1) ஆவது பிரிவின் கீழ் பேச்சு வார்த்தைகள் பயனளிக்காது என்ற முடிவிற்கு மத்திய அரசு வருமானால் உடனடியாக நடுவர் மன்றம் ஒன்றை அமைப்பதாக அரசிதழின் மூலம் அறிவிக்க வேண்டும்' எனத் திட்டவட்டமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அவ்வாறு நடுவர் மன்றத்தை அமைக்க இந்திய அரசு முன்வரவில்லை. இது சட்டமீறல் ஒன்று ஆகும்.
இதன் விளைவாக ஏமாவதி, கபினி, ஏரங்கி ஆகிய காவிரி கிளை நதிகளில் அணைகளைக் கட்டும் திட்டத்தைக் கர்நாடகம் தொடக்கிவிட்டது. இதைச் சட்டப்படி தடுத்து நிறுத்த இந்திய அரசு தவறியது சட்ட மீறல் இரண்டு ஆகும்.
எனவே வேறுவழியில்லாத நிலையில் 1971ஆம் ஆண்டில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கினைத் தொடுத்தது. வழக்கு முடியும்வரை புதிய அணைகளை கட்டுவதைக் கர்நாடகம் நிறுத்தி வைக்க ஆணையிடுமாறு தமிழ்நாடு வேண்டிக்கொண்டது. சட்டப்படி இனி பேச்சுக்களால் பயனில்லை என்ற முடிவிற்கு மத்திய அரசு வந்தால்தான் நடுவர் மன்றக் குழுவை அமைக்க முடியும் என்றும் தான் அத்தகைய முடிவிற்கு இன்னும் வரவில்லை என்றும் இந்திய அரசு பதில் வாக்குமூலம் தாக்கல் செய்ததன் மூலம் கர்நாடகம் புதிய அணைகளைக் கட்டுவதற்கு மறைமுகமாக துணைநின்றது. இது இந்திய அரசின் சட்ட மீறல் மூன்று ஆகும்.
1972ஆம் ஆண்டு தமிழகம் காவிரிப் பிரச்சினை குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கைத் திரும்பப் பெற்றால் பேச்சுக்கள் நடத்தி தீர்வு காண உதவுவதாக தலைமையமைச்சர் இந்திரா அளித்த வாக்குறுதியை நம்பி தமிழகம் "மீண்டும் தாக்கல் செய்யும் உரிமையுடனும் நீதிமன்றத்தின் ஒப்புதலுடனும்'' வழக்கைத் திரும்பப் பெற்றது.
1973ஆம் ஆண்டு மே மாதம் தில்லியில் மூன்று மாநில முதலமைச்சர்களின் பேச்சு மீண்டும் தொடங்கியது. காவிரி பற்றிய புள்ளிவிவரங்களைத் தருவதற்குக் குழு ஒன்றை இந்திய அரசு நியமித்தது. பேச்சுக்கள் முடியும் வரை எந்த மாநிலமும் புதிய கட்டுமானங்களை ஏற்படுத்தக்கூடாது என முடிவு செய்து மூன்று மாநில முதலமைச்சர்களும் மத்திய பாசன அமைச்சரும் இதில் கையெழுத்திட்டார்கள். மேலும் அதே ஆண்டின் இறுதியில் இக்குழுவின் அறிக்கையை மூன்று மாநில முதலமைச்சர்களும் ஆராய்ந்து புள்ளிவிவரங்கள் சரியானவை என்பதை ஒப்புக்கொண்டார்கள். இதைத் தொடர்ந்து இருமுறை பேச்சுவார்த்தைகள் நடந்தன. 1974ஆம் ஆண்டு நவம்பர் இறுதியில் தில்லியில் கூடிய கூட்டத்தில் "காவிரி பள்ளத்தாக்கு அதிகார அமைப்பு'' ஏற்படுத்தும் திட்டத்தை மூன்று மாநில முதலமைச்சர்களும் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், அவ்வாறு காவிரிப் பள்ளத்தாக்கு அதிகார அமைப்பை ஏற்படுத்த இந்திய அரசு முன்வரவில்லை. இது நான்காவது சட்ட மீறலாகும்.
1976-77ஆம் ஆண்டு இந்திய அரசு அமைத்த தொழில் வல்லுநர்குழு தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு எவ்வளவு தண்ணீர் வேண்டுமென்பதைத் துல்லியமாகக் கணக்கிட்டு கூறியது. இதன் அடிப்படையில் 1976ஆம் ஆண்டு ஆகச்டில் ஒரு நகல் உடன்பாட்டினை இந்திய அரசு உருவாக்கியது. இதன்படி தமிழகம் காவிரியில் 489 டி.எம்.சி. பெற்றுக்கொண்டிருந்ததில் 100 டி.எம்.சி. குறைத்து 389 டி.எம்.சி. பெற வேண்டும் என்றும் கர்நாடகம் பெற்றுக்கொண்டிருந்த 177 டி.எம்.சி. நீருடன் கூடுதலாக 62 டி.எம்.சி. நீர் சேர்த்து 239 டி.எம்.சி. நீர் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கேரளம் பெற்றுக்கொண்டிருந்த 6.71 நீரைப் பெற்றுக்கொள்ளலாம் என இந்த உடன்பாடு கூறியது. இதை முதலில் ஒப்புக்கொண்ட கர்நாடகம் அதை ஏற்க மறுத்துவிட்டது.
மேலும் பேச்சு வார்த்தைகள் நடந்துகொண்டிருந்த காலக்கட்டத்தில் கபினி ஆற்றில் 19 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணை ஒன்றையும்,.ஏமாவதி ஆற்றில் 34 டி.எம்.சி. கொள்ளவு கொண்ட மற்றொரு அணையையும் ஏரங்கி ஆற்றில் 6 டி.எம்.சி. கொள்ளவைக் கொண்ட அணையையும் கர்நாடகம் கட்டி முடித்துவிட்டது.
இவ்வாறு சட்டத்திற்குப் புறம்பாக புதிய அணைகளைக் கட்டி நீரைத் தேக்கிக்கொண்ட கர்நாடகத்தின் மீது இந்திய அரசியல் சட்டம் 256ஆவது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய அரசு அவ்வாறு செய்யவில்லை. இது சட்ட மீறல் ஐந்தாகும்.
உச்சநீதிமன்ற ஆணையின்படி 1990ஆம் ஆண்டு சூன் இரண்டாம் தேதி காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. 1991ஆம் ஆண்டு நடுவர் மன்றம் இடைக்கால தீர்வு ஒன்றை அளித்தது. ஆனால், கர்நாடக சட்டமன்றம் மற்றும் மேலவை ஆகியவை கூடி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்வை ஏற்க மறுத்துத் தீர்மானத்தை நிறைவேற்றின. அது மட்டுமல்ல "கர்நாடக காவிரிப் பாசன பாதுகாப்பு சட்டம்'' என்ற பெயரில் அவசரச் சட்டம் ஒன்றினை கர்நாடக அரசு பிறப்பித்தது. இதன்படி காவிரியிலும் அதனுடைய துணை நதிகளிலும் உள்ள பழைய அணைகளையும் புதிதாகக் கட்டப்பட்டு வரும் அணைகளையும் இனிமேல் கட்டப்படும் அணைகளையும் புதிய பாசன வசதிகளையும் பாதுகாப்பதே இச்சட்டத்தின் நோக்கம் என கர்நாடக அரசு அறிவித்தது.
இந்திய குடியரசுத் தலைவர் இச்சட்டத்தினை உச்சநீதிமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்து ஆணை பிறப்பித்தார். 1991ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி கர்நாடக அரசின் அவசரச் சட்டம் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையினை அரசிதழில் வெளியிட வேண்டுமென மத்திய அரசை தமிழகம் வற்புறுத்தியது. ஆனால், மத்திய அரசு அவ்வாறு செய்யவில்லை. எனவே தமிழகம் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது.இடைக்காலத் தீர்ப்பு வழங்கும் அதிகாரம் நடுவர் மன்றத்திற்கு உண்டு என்றும் அத்தீர்ப்பினை உடனடியாக அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும் ஆணையிட்டப் பிறகும் இந்திய அரசு அதைத் தாமதப்படுத்தியது. இது இந்திய அரசின் ஆறாவது சட்ட மீறலாகும்.
2007ஆம் ஆண்டில் நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பளித்தது. அதை அரசிதழில் வெளியிடாமல் இந்திய அரசு காலம் கடத்தியது.
பன்மாநில ஆற்றுப் பிரச்சினைகள் சட்டத்தில் 2002ஆம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தம் 6-9-2002ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. இத்திருத்தச் சட்டம் "6(2) பிரிவின்படி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பு மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டவுடன் நடைமுறைக்கு வந்துவிடும். உச்சநீதிமன்றத்தின் ஆணையைப் போன்று இதுவும் மதிக்கப்படவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை நடுவர் மன்றம் கூறியபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது சட்ட மீறல் ஏழு ஆகும்.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழகம் தொடுத்த வழக்கின் விளைவாக 2012ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தலையிட்டு ஆணை பிறப்பித்த பிறகே அரசிதழில் அத்தீர்ப்பு வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
10-6-2014 அன்று தலைமையமைச்சர் மோடியை கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்கள், அனைத்துக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் அடங்கிய குழு சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என வற்புறுத்தினார்கள். கர்நாடகத்திலிருந்து நாடாளுமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட வெங்கையா (நாயுடு) அவர்களும் இக்குழுவில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அரசியல் சட்டத்தின் மீது ஆணையிட்டு பதவியை ஏற்ற வெங்கையா (நாயுடு) அச்சட்டத்திற்கு எதிராக நடக்கும்படி தலைமை யமைச்சரை வற்புறுத்தியதும், இத்தூதுக்குழுவின் வேண்டுகோளுக் கிணங்க இதுவரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தலைமையமைச்சர் மோடி முன்வராததும் அப்பட்டமான 8ஆவது சட்ட மீறலாகும்.
கடந்த 48 ஆண்டுக் காலத்திற்கு மேலாக காவிரி நடுவர் மன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பையோ, இறுதித் தீர்ப்பையோ, உச்சநீதிமன்றத்தின் பல்வேறு ஆணைகளையோ கர்நாடக அரசு மதிக்கப் பிடிவாதமாக மறுக்கிறது. தனக்குப்போக மீதமிருக்கும் தண்ணீரையே தமிழகத்திற்கு வழங்க முடியும் எனக் கர்நாடகம் கூறுகிறது. வறட்சிக் காலத்தில் தண்ணீரை எப்படி பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்ற இயற்கை நியதிகளையும் கர்நாடகம் மதிக்கத் தயாராக இல்லை.
காவிரிப் பிரச்சினையில் கர்நாடகத்தில் அரசியல் சட்டம் செயலற்றுவிட்டது. எனவே உடனடியாக அரசியல் சட்டப் பிரிவுகள் 365 மற்றும் 356 ஆகியவற்றின் கீழ் கர்நாடக அரசின் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முன்வருமா?
தமிழகத்தின் வேளாண்மைக்கும் குடிநீருக்கும் நியாயமாக உரிய காவிரி நீரை அளிக்க பிடிவாதமாக மறுத்து தமிழகத்தின் 11 மாவட்டங்களைச் சேர்ந்த உழவர்களையும், மக்களையும், புதுவை மாநிலத்தைச் சேர்ந்த காரைக்கால் பகுதி உழவர்களையும், மக்களையும் வாழ்வா? சாவா? என்ற நிலைக்கு ஆளாக்கியிருக்கும் கர்நாடகத்தின் அழிச்சாட்டியத்தைப் பார்த்துக்கொண்டு இந்தியாவின் பிற மாநில மக்கள் சும்மா இருக்கப் போகிறார்களா?
கர்நாடகத்தில் உள்ள அகில இந்திய கட்சிகளின் மாநிலக் கிளைகள் ஒன்றுபட்டு நின்று இந்திய அரசியல் சட்டம், உச்சநீதிமன்ற ஆணை, நடுவர் மன்றத் தீர்ப்பு ஆகியவற்றை மதிக்க மறுப்பதை அக்கட்சிகளின் அகில இந்தியத் தலைமைகள் கண்டித்து அவற்றின்மீது நடவடிக்கை எடுக்க முன்வருமா?
மேலே கண்ட மூன்று கேள்விகளுக்கும் உரிய விடைகளை எதிர்பார்த்துத் தமிழக மக்கள் முடிவெடுக்கக் காத்திருக்கிறார்கள்.
நன்றி : தினமணி 24-8-16 |