காவிரி-தமிழகத்திற்குக் கேடு விளைவிக்கும் இந்தியத் தலைவர்கள் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 17 செப்டம்பர் 2016 12:54

காவிரிப் பிரச்சினையில் தமிழக உழவர்களும் கட்சிகளும் இணைந்து நடுவர் மன்றமும் உச்சநீதிமன்றமும் அளித்தத் தீர்ப்புகளை நிறைவேற்றுமாறு இந்திய அரசை வற்புறுத்திப் போராட்டம் நடத்தினர். தமிழக அரசும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.

உச்சநீதிமன்றம் தலையிட்டு "வாழு, வாழ விடு'' என்ற அடிப்படையிலும் நடுவர் மன்றம் அளித்தத் தீர்ப்பின் அடிப்படையிலும் தமிழகத்திற்கு உரிய நீரை வழங்குமாறும் முதல் கட்டமாக 13 டி.எம்.சி. நீரை வழங்க வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி பார்த்தால் கர்நாடகம் சட்டப்படி தமிழகத்திற்குரிய நீரை இதுவரை வழங்கவில்லை என்பது அம்பலமாகியிருக்கிறது. கர்நாடகத்தின் இந்தப் போக்கு சட்டப்படி நியமிக்கப்பட்ட நடுவர் மன்றத்தையும், உச்ச நீதிமன்றத்தையும் மதிக்காத போக்கு என்பதும், இத்தீர்ப்பின் மூலம் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. சுருங்கக்கூறின் இந்திய அரசியல் சட்டத்தையோ, அச்சட்டப்படி அமைக்கப்பட்ட அமைப்புகளையோ சிறிதளவுகூட மதிக்காமல் தான்தோன்றித்தனமாக கர்நாடகம் நடந்துகொள்வதை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.

தற்போது கர்நாடக உழவர்களும், கட்சிகளும் இணைந்து பல நாட்களாக தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் கர்நாடக அரசே முன் நின்று 09-09-2016 கடையடைப்பு போராட்டத்தை நடத்தியது. மேலும் தமிழகத்திலிருந்து சென்ற வாகனங்கள் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டன. இந்தப் போராட்டங்கள் யாருக்கு எதிராக?

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தா? அரசியல் சட்டத்தை எதிர்த்தா? என்ற கேள்விகளுக்கு விடைகள் இல்லை.

தமிழகத்திற்கு தண்ணீர் அளிக்கக்கூடாது என்பதை நோக்கமாக வைத்து இப்போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால், இப்போராட்டங்கள் நடத்துவோர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கர்நாடக அரசு வேடிக்கை பார்க்கிறது. இதன் மூலம் மறைமுகமாக இப்போராட்டங்களைத் தூண்டிவிட்டுள்ளது.

கர்நாடகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இப்போராட்டத்திற்கு மறைமுக ஆதரவு அளித்து வருகின்றன. உச்சநீதிமன்றத்தை எதிர்த்துப் போராடுவது தவறு என்று ஒரு கட்சி கூட கண்டிக்க முன்வரவில்லை. பாமர கன்னட மக்களிடம் "காவிரி நமக்கு மட்டுமே சொந்தம்'' என்ற வெறியையூட்டி வாக்கு வேட்டையாடிய கட்சிகள் இப்போது திணறுகின்றன. பூதத்தைக் கிளப்பிவிட்டவர்கள் அலறுகின்றனர்.

கர்நாடகத்தில் நடைபெறும் வன்முறைக் கிளர்ச்சிகளின் விளைவாக அங்கு வாழும் தமிழர்கள் எந்த நேரத்தில் எது விளையுமோ? என்ன நடக்குமோ? என்ற அச்சத்துடன் வாழ்கிறார்கள்.

சகோதரத் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுமானால் அது தமிழகத்திலும் எதிரொலிக்கும் என்ற பதற்றம் தமிழகத்தில் பரவிவருகிறது.

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கிணங்க காவிரி மேலாண்மை வாரியமும், கண்காணிப்புக் குழுவும் அமைக்காததன் விளைவாகத்தான் இரு மாநிலங்களிலும் வேண்டாத நிலைமைகள் உருவாகியிருக்கின்றன என்பதை இந்திய அரசு உணர்ந்ததாகத் தெரியவில்லை.

மன்மோகன் சிங் அவர்கள் தலைமையில் காங்கிரசு ஆட்சி மத்தியில் இருந்த போதும், இப்போது மோடி அவர்கள் தலைமையில் பா.ச.க. ஆட்சி நடைபெறும் போதும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி செயல்பட முன்வரவில்லை.

கர்நாடகத்தில் சட்டமன்றத் தேர்தலில் ஆதாயம் தேடிக்கொள்ளும் ஒரே நோக்கத்துடன் இரண்டு கட்சிகளும் தமிழகத்திற்கு வஞ்சனை செய்யும் கர்நாடகத்தைக் கண்டிக்கத் தயங்குகின்றன.

இதன் விளைவாக, வேண்டாத கலவரங்கள் கர்நாடகத்தில் மூண்டெழுந்துள்ளன. காங்கிரஸ், பா.ச.க. கட்சித் தலைமைகள் தலையிட்டு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்க வேண்டும் என கர்நாடக மக்களுக்கு அறிவுரை கூற இதுவரை முன்வரவில்லை. தங்கள் கட்சியின் நலன்களையே அவர்கள் முன்னிறுத்திக் காவிரிப் பிரச்சினையைப் பார்க்கிறார்கள். மற்ற அகில இந்திய கட்சிகளின் தலைவர்களும் வாய்மூடி அமைதி காக்கிறார்கள். இவர்களின் இந்தப் போக்கு தமிழர்கள்-கன்னடர்கள் மோதலை ஏற்படுத்திவிடும் என்பதைப்பற்றி இவர்கள் கவலைப்படவில்லை.

நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிய தொலைநோக்கோ அல்லது கவலையோ, கொஞ்சமும் இல்லாமல் செயல்படும் தலைமைகள் அகில இந்திய கட்சிகளில் உள்ளன. குறுகியும், சிறுத்தும்போன இத்தலைவர்களின் சிந்தனையற்ற போக்கின் விளைவாக பாமர மக்கள் ஒருவருக்கெதிராக மற்றொருவர் மோதிக்கொள்ளும் நிலை உருவாகியிருக்கிறது. இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டியவர்கள் அகில இந்திய கட்சிகளின் தலைவர்களே.

 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.