|
தமிழீழத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துகொண்டிருந்தபோது துணிந்து அங்குச் சென்று இரண்டாண்டுகள் தங்கியிருந்து விடுதலைப் புலிகளுக்கும் பிறருக்கும் தமிழைக் கற்பித்தவர்தாம் பேராசிரியர் அறிவரசன்.
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் துணைவியார் மதிவதனி, இவரிடம் தமிழ் கற்ற மாணவியாவார்.
தமிழீழத்தின் தலைநகரமாகத் திகழ்ந்த கிளிநொச்சியில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்ப் பயிற்சிக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றுவதற்காகத்தான் நண்பர் அறிவரசன் அங்குச் சென்றார்.
1980-களில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த பல தோழர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரப்புரை, நிதிசேகரித்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டிருந்தனர். நெல்லை மாவட்டத்தில் அவ்வாறு ஈடுபட்டிருந்தவர்களுக்குப் பேராசிரியர் அறிவரசன்-ஞானத்தாய் இணையரின் இல்லம்தான் புகலிடமாகும். அவர்களைத் தமது பிள்ளைகளுக்கு நிகராக ஏற்று விருந்தோம்பி உபசரித்த பெருமை இந்த இணையருக்கு உண்டு. அந்த முறையில் இவர்கள் இருவரும் எனக்கு நெருக்கமானார்கள். உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், மா.க. ஈழவேந்தன், பேபி. சுப்பிரமணியம் (இளங்குமரன்) போன்ற ஈழத் தலைவர்கள் பலரும் கடையத்தில் பேராசிரியர் அறிவரசன் இல்லத்தில் தங்கியிருந்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவரும் பிரபாகரன் அவர்களின் முழு நம்பிக்கையைப் பெற்றவரும், நிதிப் பொறுப்பாளருமான தமிழேந்தி, சிறந்த தமிழ் ஆர்வலராகத் திகழ்ந்து, பிற சொல் கலப்பின்றித் தமிழைப் பேசவும் எழுதவும் வேண்டுமென மற்றவர்களுக்குச் சொல்வது மட்டுமன்று; தமது வாழ்க்கையில் முழுமையாகக் கடைப்பிடித்தவர். அடிக்கடி என்னுடன் தொடர்புகொண்டு பல வட சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச்சொல் எது எனக் கேட்பார். நானும் அவரைக் கிண்டல் செய்வேன். "தமிழீழ விடுதலைக்காகப் போராடி வருகிறீர்கள் என நினைத்தேன். ஆனால் நீங்கள் தனித் தமிழ்த் தொண்டில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது'' என்று நான் கூறும் போது "அண்ணா, மண் விடுதலை மட்டுமன்றி மொழி விடுதலையும் வேண்டும்தானே'' என்று கூறிவிட்டுச் சிரிப்பார்.
அவர் ஒருமுறை கிளிநொச்சியில் உள்ள தமிழ்க் கல்லூரிக்குத் தமிழ்ப் பேராசிரியர் ஒருவரும் ஆங்கிலப் பேராசிரியர் ஒருவரும் வேண்டும் எனத் தெரிவித்தார். அதற்கிணங்கத் தமிழைக் கற்பிக்கப் பேராசிரியர் அறிவரசன் அவர்களையும், ஆங்கிலம் கற்பிக்க என்னுடன் படித்த நண்பர் பேராசிரியர் அ. அய்யாச்சாமி அவர்களையும் அணுகி அவர்களின் சம்மதத்தைப் பெற்றுத் தமிழேந்திக்குத் தெரிவித்தேன்.
வேறு பலரை நான் அணுகியபோது அவர்கள் அங்குச் செல்வதற்குத் தயங்கினார்கள். ஆனால் துணிந்து அங்குச் செல்ல இவர்கள் இருவர் மட்டுமே முன்வந்தனர். அதற்கிணங்க அவர்கள் அங்குச் சென்றனர். நண்பர் அய்யாச்சாமி அவ்ர்கள் குடும்பப் பிரச்சினை காரணமாகச் சில மாதங்களுக்கு மேல் அங்கே தொண்டாற்ற இயலவில்லை. ஆனால், பேராசிரியர் அறிவரசன் அவர்கள் இரண்டாண்டுகள் முழுமையாக அங்குத் தங்கித் தமது கடமையைச் செய்தார்.
தமிழீழத்தில் குறிப்பாகக் கிளிநொச்சியின் மீது அன்றாடம் நடத்தப்பட்ட வான் குண்டு வீச்சுக்கள், படைத் தாக்குதல் ஆகியவற்றால் அவருக்கு ஏதேனும் ஆகிவிடக்கூடாதே என்ற பதற்றம் என்னைத் தொற்றிக்கொண்டது. ஆனால், பேராசிரியர் அறிவரசன் அவர்களோ அவரது துணைவியாரோ மற்றும் குடும்பத்தினரோ சிறிதும் பதற்றம் அடையவில்லை என்பது உண்மையாகும்.
விடுதலைப் புலிகளுக்குத் தமிழ் கற்பிக்கும் பணியைச் செய்ததோடு புலிகளின் வானொலி, இதழ்கள் ஆகியவற்றின் மூலமாகவும் தமிழ்மொழி, இலக்கியம், இசை, நடனம் ஆகியவற்றின் சிறப்புகளைப் பேராசிரியர் அறிவரசன் இடைவிடாமல் பரப்பி மக்களைக் கவர்ந்தார்.
2006ஆம் ஆண்டு அவர் அங்குச் சென்றதிலிருந்து திரும்பித் தமிழகம் வந்ததுவரை தாம் கண்டு கேட்டவை அனைத்தையும் இந்நூலில் பேராசிரியர் அறிவரசன் பதிவு செய்திருக்கும் பாங்கு நமது உள்ளங்களைக் கொள்ளை கொள்வதாகும்.
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் மற்றும் விடுதலைப் புலிகளின் தளபதிகள், அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் உள்பட அனைவருடனும் நெருங்கிப் பழகி அவர்களின் அன்பினைப் பெற்றவராகத் திகழ்ந்தார். இப்போதும் அங்கிருந்து தப்பி வந்தவர்கள் பேராசிரியரைப் பார்க்கும் போது மனம் கசிவதையும், குரல் தழுதழுப்பதையும் கண்டு நான் வியந்திருக்கிறேன். அந்த அளவுக்கு அனைவர் உள்ளங்களிலும் நீங்காத இடத்தை நமது பேராசிரியர் பெற்றிருக்கிறார்.
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான காலக்கட்டத்தில் பேராசிரியர் அறிவரசன் அங்கு வாழ்ந்திருக்கிறார். தமிழீழத் தனியரசு எப்படிச் செயல்பட்டது என்பதையும், விடுதலைப் புலிப்படை எப்படி மக்களுக்குக் காவலரணாகத் திகழ்ந்தது என்பதையும் மக்கள் சுதந்திரக் காற்றை எவ்வாறு சுவாசித்தார்கள் என்பதையும் இந்த நூல் விரிவாகவும், சிறப்பாகவும் பதிவு செய்துள்ளது.
ஒவ்வொரு தமிழர் கையிலும் இந்நூல் இருக்க வேண்டும். இதில் உள்ள செய்திகளை அவர்கள் படித்தறிய வேண்டும். அப்போதுதான் தமிழீழத்தைப் பற்றியும் விடுதலைப் புலிகளைப் பற்றியும் அவர்கள் முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.
துணிவாகத் தமிழீழம் சென்றது மட்டுமன்றி. "என் கடன் பணி செய்து கிடப்பதே'' என்று நாவுக்கரசரின் வாக்கினை மனத்தில் தாங்கித் தமிழ்த் தொண்டாற்றும் பெருமைக்குரியவர் என்பது மட்டுமன்று; உலகத் தமிழர்களின் கனவு நாடான தமிழீழத்தை நனவில் கண்டு மகிழ்ந்து தான் கண்டதையும் - கேட்டதையும் அழகுறப் பதிவு செய்திருக்கும் பாங்கினை மனமாறப் பாராட்டுகிறேன்.
போர் மேகங்கள் சூழ்ந்திருந்த காலக்கட்டத்தில் தமிழீழத்தில் விடுதலைப் புலிகளும், மக்களும் அச்சமின்றி எப்படி இயங்கினார்கள்? தமிழ் வளர்ச்சி, தமிழீழ மேம்பாடு போன்ற ஆக்கப்பூர்வமான செயல்களில் எவ்வாறு ஈடுபட்டிருந்தார்கள் என்பதையெல்லாம் படம் பிடித்துக் காட்டுவது போல இந்த நூல் விளக்குகிறது.
தமிழ்கூறும் நல்லுலகம் இந்நூலை வரவேற்றுப் பாராட்டும் என நம்புகிறேன்.
- பழ.நெடுமாறன் |