"வள்ளலார் மூட்டிய புரட்சி'' நூல் வெளியீட்டு விழா - இளங்குமரனார் ஆற்றிய உரை PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 04 அக்டோபர் 2016 16:58

28-09-2016 மதுரை, வடக்கு மாசி வீதி, மணியம்மை மழலையர் பள்ளியில், புரட்சிக் கவிஞர் மன்றச் சார்பில் வரதராசன் தலைமையில் நடைபெற்ற விழாவில் "வள்ளலார் மூட்டிய புரட்சி'' நூலை வெளியிட்டு இளங்குமரனார் ஆற்றிய உரையின் சுருக்கம்.

பழந்தமிழ் வேந்தரும் கொடையும் படையும் சிறப்பாகக் கொண்டிருந்தனர்.

வேளிர் எழுவரொடு தலைக் கொடைக் குமணனுமாக எண்மர் வரையா வண்மையராய்த் திகழ்ந்தனர்.

ஒரு சான்று.
"முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு தன்னோடு
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்.''
- இது பாரிவள்ளல்.
இன்னொரு சான்று :
"நாடு இழந்ததனினும் நனியின் னாதது
பாடுபெறு புலவன் பரிசில் இன்றி
மீள்வதென வாள்தந்தனனே''
- இது வள்ளல் குமணன்

பின்னே உடையப்பர், வரபதியாட் கொண்டான், சீதக்காதி, இரகுநாத சேதுபதி, பச்சையப்பர், அழகப்பர் என வள்ளல்கள் திகழ்ந்தனர்.

இவருள் எவரையும் வள்ளலார் என்று குறியாமல் "வள்ளலார்' இராமலிங்கரே எனத் திகழ்ந்தவர் இவ்வொருவரே. ஒருவர் என்றால் ஒப்பற்றவர்!

வள்ளலார் மூட்டிய புரட்சி என்றால், மூட்டிய முன்னவர், மூட்டிய வகை, மூட்டிய பொருள் என்பவை முன்னரே இருந்திருக்க வேண்டும்!

மூட்டிய அளவு முழுதுறு மாற்றம் தருவதாய் இருந்தாலே புரட்சியாம்!
புரட்சி, தெளிப்பு மருந்து அன்று!
புரட்சி, பூச்சு மருந்தும் அன்று!
புரட்சி, பேச்சு மருந்தும் அன்று!
செயல் செயல் செயலே!
அறுவை மருத்துவம் அன்னது அது! ஆனால், ஆக்க மருத்துவம்!
செல்லிய கிடந்தோனைச் செயற்கரிய செய்யச் செல்ல வைப்பது அது!

புரட்சியாளன் புகழுக்கு உரியவன் என எடுத்த எடுப்பில் ஆகிவிடமாட்டான்!
பழிப்புக்கு - வசைக்கு - இடுக்கணுக்கு ஆட்பட்டே ஏற்கப்படுவான்!
அவன் வசையும் இசையும் பொருளாக எண்ணான்.
பிறப்பு இறப்பு என்பவை "பிறப்பிறப்பு' என்பதைத் தெளிவாக அறிவான்!
இடையே நிற்கும் சிறப்புப் பற்றியும் எண்ணான்!
அவனுக்கே வேண்டுவது ஒப்புரவு நலன் ஒன்றே!

ஏனெனில், மண், விண், தீ, நீர், காற்று என்னும் இயற்கை இயங்கியல் அறிந்த தெளிவன் அவன்!

ஓடும் செம்பொனும் ஒப்ப நோக்குவான்!
வீடும் வேண்டா விறலனாக விளங்குவான்!
பிறப்பு உண்டானால், தொண்டுக்காக
வேண்டும் - மீள மீள வேண்டும் என்பான்!
அவனே இயற்கை இயங்கியல் உணர்ந்த புரட்சியின் நிலை!

வள்ளலார் ஒப்புரவுத் தெளிவர். ஒப்புரவு இலக்கணத்தை நூற்பாவென - பனித்துளி காட்டும் பனிமலையென,

"ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒரு நிலையர் ஆக வேண்டும் என விழைந்தவர்! அதனால் சாதி, சமயம், வண்ணம், மேல், கீழ் என எவ்வொன்றும் கொள்ளாச் சமனிலைச் சீர்மையா!

பிறப்பொடு வந்த பசிப்பிணி நீக்குதலாம் வேள்வி அகப்பை மூட்டிய முதல்வர்!

மாந்த நேயமே அன்றி ஆன்ம நேய நூலாம் வள்ளுவவழியில் புலை கொலை தவிர்க்க முழுநுறு வாழ்வை ஒப்படைத்தவர்!

பெண்ணின் பெருமை பேசியவர்!
இளையரும் முதியரும் மகளிரும் கற்க வழிகண்டவர்!

தமக்கு வழிகாட்டிய ஓதாக் கல்வி, சாவாக் கலை, சன்மார்க்கம், வாலறிவ வழிபாடாம் ஒளிவழிபாடு, அகம் தண்ணிலாராம் அந் தண்மை வாழ்வு, நிலையில் திரியா மலையாம் நிலைப்பாடு, அகந்தூய்மைச் சான்றாம் புறந்தூய்மை உடைக்கோலம், ஒருமையுள் ஐந்தடக்கிய ஆமைபோல் மூடிய தலையும் கட்டிய கையும் அதிரா நடையும், எதிர்பார்க்கும் எதிர்ப்புரையா ஏற்றம்-இன்னவையெல்லாம் விரிய விரியச் சான்றுடன் விளக்கும் சால்புநூல் வள்ளலார் மூட்டிய புரட்சி' என்னும் இந்நூல் - இன்னூல்!''

அருட்பா மருட்பாப் போராட்டு,
அருள் வழிபாட்டு முறை மீட்டெடுப்புப் பற்றிய
முறை மன்றத் தீர்ப்பு!

இற்றையரும் பிற்றையரும் அறிந்து, விழிப்புற வேண்டிய கட்டாயம் உடையதாம்!
மறைமலையடிகளார் சொன்னதுபோல்,

"தமிழைக் கெடுத்த பாவிகள் தமிழரேயன்றிப் பிறர் அல்லர்''

என்பதை மெய்யாக உணர்ந்தால், கெடுப்பார்க்குக் கூட்டுச் சேராமலும், கெடுப்பார்க்கும் மேம்படக் கெடுக்காமலும், தமிழர் விழிப்புற்று ஒருமையுடன் நின்று தம் நாடு மொழி இனம் காக்க முடியும் என்பதை உணரச் செய்யும் இந்நூல், இந் நாள் கட்டாயத் தேவையாம்!

"வாழிய நின்றசீர் நெடுமாறர்''
என வாழ்த்தி அமைகின்றேன்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.