பொறுத்தோம்! காவிரி ஆள்வோம்! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 04 அக்டோபர் 2016 17:12

காவிரி மேலாண்மை வாரியத்தை நான்கு வாரத்திற்குள் அமைக்க வேண்டும் என மத்திய அரசிற்கு உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பாகும். 

2007ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என நடுவர் மன்றம் தீர்ப்பளித்தது. 9 ஆண்டு காலமாக அதைச் செயல்படுத்த மத்திய அரசு முன்வராத காரணத்தினால் தமிழக விவசாயிகள் சொல்லொணாத இழப்பிற்கும் துன்பங்களுக்கும் ஆளானார்கள். அவர்கள் மட்டுமல்ல, கர்நாடகத்தில் வாழும் அப்பாவித் தமிழர்களும் பல கொடுமைகளுக்கும் இழப்புகளுக்கும் ஆளானார்கள். எனவே இந்தத் தீர்ப்பை மதித்து உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவர பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

உச்சநீதிமன்றத்தில் இடைவிடாமல் போராடி நல்ல தீர்ப்பைப் பெற்றுத் தந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு தமிழக மக்களின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதைப்போல காவிரிப் பிரச்சினைக்காகத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்திய அனைத்து உழவர்களின் சங்கங்களுக்கும், அனைத்துக் கட்சியினருக்கும் எனது பாராட்டுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சட்டப்படியான இந்தத் தீர்ப்பைப் பெறுவதற்கு தமிழகம் 48 ஆண்டு காலமாகக் காத்திருக்க வேண்டியிருந்தது. இதன் காரணமாக 10 மாவட்டங்களைச் சேர்ந்த காவிரிப் பாசன உழவர்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பிற்கு ஆளானார்கள். பலர் தற்கொலை செய்து கொண்டார்கள். பரம்பரை பரம்பரையாக செய்து வந்த வேளாண்மைத் தொழிலிலிருந்து பல இலட்சம் பேர் பிழைப்புக்காக வெளியேறிய அவலம் நிகழ்ந்தது.

நடுவர் மன்றம் அமைக்கவும், அது அளித்த இடைக்காலத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடவும், இத்தீர்ப்பை முடக்கி வைக்க கர்நாடகம் பிறப்பித்த அவசரச் சட்டம் செல்லாது என்பதற்காகவும், நடுவர் மன்றம் அமைத்த இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என்பதற்காகவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதற்காகவும் உச்சநீதிமன்றத்தின் கதவைப் பலமுறை தமிழகம் தட்டவேண்டிய நிலை ஏற்பட்டது.

1956ஆம் ஆண்டில் தொடங்கி மொழி வாரியாக மாநிலங்கள் அமைக்கப்பட்ட காலக் கட்டத்தில் தலைமையமைச்சராக இருந்த நேரு அவர்கள் எதிர்காலத்தில் பன் மாநில நதிநீர்ப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்பதை உணர்ந்து இரண்டு சட்டங்களைக் கொண்டு வந்தார்.

பன் மாநில நதிநீர் தாவாச் சட்டம், நதிநீர் வாரியச் சட்டம் ஆகியவை இந்திய அரசியல் சட்டம் 262ஆவது பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டன. ஆனால், நதிநீர் வாரியச் சட்டம் கொண்டுவரப்பட்ட 1956ஆம் ஆண்டிலிருந்து இதுவரை பயன்படுத்தப்படவில்லை. இப்போது முதன் முறையாக காவிரி நதிநீர் வாரியத்தை அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் நாள் காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பிற்கிணங்க மூன்று மாதக் காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்திய அரசு அரசியல் காரணங்களுக்காக அவ்வாறு செய்ய முன்வரவில்லை. மாறாக, காவிரி மேற்பார்வைக் குழு என்ற பெயரில் எவ்வித அதிகாரமும் இல்லாத ஒரு குழுவை இந்திய அரசு அமைத்தது. எதிர்பார்த்தபடியே இக்குழுவின் பரிந்துரைகளை ஏற்பதற்குக் கர்நாடகம் தொடர்ந்து மறுத்து விட்டது.

முறை கேடான செயல்

கபினி, ஏரங்கி, ஏமாவதி, யாகச்சி, சுவர்ணவதி ஆகிய காவிரி துணை ஆறுகளில் ஐந்து நீர்த்தேக்கங்களை மத்திய அரசு மற்றும் திட்டக்குழு ஆகியவற்றின் ஒப்புதலின்றி கர்நாடகம் கட்டி 70 டி.எம்.சி. நீரைத் தேக்கி வைத்துள்ளது.

நடுவர் மன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பில் கட்டுப்படுத்தியுள்ளபடி 11.20 இலட்சம் ஏக்கரிலிருந்து 21.71 இலட்சம் ஏக்கருக்குத் தனது பாசன வசதியை கர்நாடகம் பெருக்கிக் கொண்டுள்ளது. கர்நாடகத்திற்கு உரிமையானது 270 டி.எம்.சி. மட்டுமே. அதை 362 டி.எம்.சி.யாகப் பெருக்கிக் கொண்டுள்ளது.

ஆற்றில் கட்டப்பட்டுள்ள அணைகளில் இருந்து நீரேற்றும் இறைப்பிகளைப் பயன்படுத்தி வேறு ஆற்றுப்படுகைகளுக்கு நீரைத் திருப்பிவிடக்கூடாது. ஆனால், கர்நாடகம், ஏமாவதி, நூகு தொட்டகரே அணைகளில் இருந்து இவ்வாறு நீரை இறைத்து மேடான வேறு இடங்களுக்குக் கொண்டுச் செல்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக மைசூர் பாசனப் பகுதியில் காவிரி ஓடி வரும் வழியில் உள்ள 25 ஆயிரம் ஏரிகளுக்குத் தேவையான நீரை நிரப்பிக்கொண்ட பிறகே மீதமுள்ள நீரை கிருஷ்ணராஜசாகர் அணைக்கு அனுப்புகிறது. இதன் விளைவாகத் தமிழகத்திற்கு வரவேண்டிய நீர் பெருமளவு குறைந்துவிட்டது.

தற்போது உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவையும் மத்திய அரசு அமைத்தே தீரவேண்டும்.

வாரியத்தின் கடமைகள்

நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பின்படி ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தண்ணீர் தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகியவற்றிற்கு அளிக்கப்பட வேண்டுமோ அவற்றை அளித்துத் தீரவேண்டிய கடப்பாடு மேலாண்மை வாரியத்திற்கும் ஒழுங்காற்றுக் குழுவிற்கும் உண்டு.

கர்நாடகம், தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் காவிரி மற்றும் அதன் துணை நதிகளில் கட்டப்பட்டிருக்கும் அணைகளுக்கு வரும் நீர், வெளியேற்றப்படும் நீர், இருப்பு நீர் ஆகியவற்றை நாள்தோறும் கண்காணிக்க வேண்டும்.

மேற்கண்ட மாநிலங்களுக்குரிய நீரை மாதந்தோறும் திறந்துவிட வேண்டும்.
அவ்வாறு திறந்துவிடப்படும் நீரின் அளவைக் குறித்த பட்டியலை 12 மணி நேரத்திற்கு ஒருமுறை வெளியிட வேண்டும்.

ஒவ்வொரு அணையிலும் வாரியத்தின் பிரதிநிதிகள் இருந்து ஒழுங்காற்றுக் குழுவின் ஆணைப்படி நீர் திறந்துவிடப்படுகிறதா என்பதைக் கண்காணித்து வாரியத்தின் செயலாளருக்குத் தெரிவிக்க வேண்டும்.
தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியான பில்லிகுண்டு பகுதியில் செல்லும் நீரின் அளவை கணக்கிட்டு வாரியத்திற்குத் தெரிவிக்க வேண்டும்.

ஒவ்வொரு அணைப்பகுதியிலும் உள்ள நீரின் அளவு குறித்த மாதாந்திர அறிக்கையை வாரியத்திற்குத் தெரிவிக்க வேண்டும்.

இந்திய வானிலைத் துறையினால் அமைக்கப் பட்டிருக்கும் மழை அளவுக் கண்காணிப்பு நிலையங்களின் மூலம் சேகரிக்கப்படும் விவரங்கள் வாரந்தோறும் வாரியத்திற்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.

தென்மேற்கு மற்றும் தென்கிழக்குப் பருவ மழைக் காலங்களில் அதாவது சூன் முதல் அக்டோபர் வரை 10 நாட்களுக்கு ஒருமுறை ஒழுங்காற்றுக் குழு கூடி பெய்துள்ள மழையின் அளவைக் கண்காணிக்க வேண்டும்.
பருவ மழை நன்கு பெய்திருக்கும் காலத்தில் நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பிற்கு இணங்க மாநிலங்களுக்கு உரிய நீரைப் பங்கிட்டு அளிக்க வேண்டும். பருவ மழை பொய்த்த காலத்தில் மத்திய நீர் ஆணையம் மற்றும் மத்திய-மாநில அரசுகளின் அமைப்புகள் ஆகியவற்றின் துணை கொண்டு வறட்சியின் அளவைக் கணக்கிட்டு அதற்கேற்றவாறு நீரைப் பங்கிட்டு அளிக்க வேண்டிய பொறுப்பு வாரியத்திற்கு உண்டு.

காவிரி மேலாண்மை வாரியத்தின் வழிகாட்டுதலுக்கு இணங்க மேற்கண்ட மாநிலங்களில் உள்ள அணைகள் இயக்கப்பட வேண்டும். வேளாண்மை, மின் உற்பத்தி, குடிநீர், தொழிற்சாலைகளின் தேவைகள் ஆகியவற்றிற்காண நீரும், வாரியத்தின் ஆணைக்கிணங்க பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

வாரியம் எடுக்கும் முடிவுகளுக்கோ அல்லது நடுவர் மன்றத்தின் ஆணைக்கோ எதிராக எந்த மாநில அரசு செயல்பட்டாலும் உடனடியாக மத்திய அரசின் கவனத்திற்கு அதை வாரியம் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்டவாறு காவிரி மேலாண்மை வாரியமும், ஒழுங்காற்றுக் குழுவும் சிறப்பாகச் செயல்படுவதற்கான விரிவான விதிமுறைகள் ஏற்கெனவே நதிநீர் வாரியச் சட்டத்தில் கூறப்பட்டிருக்கின்றன. அதற்கிணங்க வாரியமும் சம்பந்தப்பட்ட மாநிலங்களும் நடந்துகொள்ள வேண்டும்.

உலகம் முழுவதிலும் உற்பத்தியாகி ஓடும் ஆறுகள் இயற்கையாக எப்படி ஓட வேண்டுமோ அப்படி ஓடி கடலில் கலக்கின்றன. நாடுகள், மக்கள், சமயங்கள் மற்றும் தலைமுறைகளைப் பொறுத்து ஆறுகள் தங்களின் பாதைகளைத் தீர்மானிப்பதில்லை. ஆற்றங்கரைகளில்தான் உலகின் பல்வேறு நாகரீகங்கள் தோன்றி வளர்ந்திருக்கின்றன.

உலகம் முழுவதும் வாழும் மக்களில் 40% மக்கள் ஏறத்தாழ 300 ஆறுகளின் சமவெளிப் பகுதியில்தான் வாழ்கிறார்கள். ஆப்பிரிக்காவில் 60க்கும் மேற்பட்ட பன்னாட்டு நதிகள் ஓடுகின்றன. ஐரோப்பாவில் ஓடும் டான்யூப் நதி 17 நாடுகளின் வழியாக ஓடுகிறது. தென்கிழக்கு ஆசியாவில் ஓடும் மீகாங் ஆறு 7 நாடுகளின் வழியாக ஓடுகிறது. ஆப்பிரிக்காவில் ஓடும் நைல் நதி 10 நாடுகளின் வழியாக ஓடுகிறது. இந்தப் பட்டியலை விரிக்கின் பெருகும்.

1956ஆம் ஆண்டில் ஐ.நா.வின் ஆதரவில் அங்கேரியின் தலைநகரமான ஹெல்சிங்கியில் நடைபெற்ற அனைத்து நாடுகளின் மாநாட்டின் கூட்டத்தில் பன்னாட்டு நதிநீரைப் பங்கிட்டுக் கொள்வதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டன. அதன்படி மேலே கண்ட நாடுகளின் ஆற்றுநீர்ப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருக்கின்றன.

ஆனால், கர்நாடக மாநிலமோ ஹெல்சிங்கி உடன்பாட்டையோ, உச்சநீதிமன்றத்தின் ஆணையின்படி அமைக்கப்பட்ட நடுவர் மன்றத்தின் தீர்ப்பையோ, உச்சநீதிமன்றத்தின் பல்வேறு ஆணைகளையோ இதுவரை மதிக்க மறுத்தே வந்திருக்கிறது. அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய இந்திய அரசும் செயலற்றுக் கிடந்திருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் இறுதியான ஆனால் உறுதியான ஆணையைப் பிறப்பித்திருக்கிறது. அதன்படி காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்றுக் குழுவையும் அமைக்க மத்திய அரசு முன்வருவதைப் பொறுத்தும், அப்படி அமைக்கப்படும் காவிரி மேலாண்மை வாரியத்திற்குக் கட்டுப்பட கர்நாடகம் ஒப்புக்கொள்ளுவதைப் பொறுத்தும் இந்திய ஒருமைப்பாட்டின் எதிர்காலம் அமைந்திருக்கிறது.

நன்றி : தினமணி 22-09-16

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.