ஒருமுறைக்கு இருமுறை படிக்க வேண்டிய மலர்-தினமணி பாராட்டு PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 20 அக்டோபர் 2016 10:57

தனித்தமிழ் இயக்கம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போதுதான் அது காலத்தின் கட்டாயம். சமஸ்கிருதத்தின் பிடியிலிருந்து தமிழை மீட்கவும், மணிப்பிரவாள நடையை மாற்றித் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தவும் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் தனித்தமிழ் இயக்கத்திற்கு வித்திட்டவர் மறைமலை அடிகள். இன்று ஆங்கில மயமாகிவிட்டிருக்கும் காலகட்டத்தில், மீண்டும் தமிழை அரியணை ஏற்றுகிறோமோ இல்லையோ, குறைந்தபட்சம் தமிழில் பேசி நமது தாய் மொழியைக் காப்பாற்றியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இது தனித்தமிழ் இயக்கம் தொடங்கப்பட்ட நூற்றாண்டு. அது குறித்து எந்தவிதப் பரபரப்போ, கொண்டாட்டமோ இல்லாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. அப்படியொரு குறை (பழி?) ஏற்பட்டுவிடக்கூடாது என்கிற அக்கறை தமிழின் பெயரால் ஆட்சியைப் பிடித்து பதவி சுகம் அனுபவித்தவர்களுக்கு இல்லாமல் போனாலும், தமிழின் மீதும், தமிழர்தம் நலனின் மீதும் அக்கறையுள்ள ஐயா. பழ.நெடுமாறனுக்காவது இருக்கிறது என்பதுதான் ஒரே ஆறுதல்.

கடந்த ஜüலை 15, 16, 17 ஆகிய நாட்களில் உலகத் தமிழர் பேரமைப்பு தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டை தஞ்சையில் நடத்தி இருக்கிறது. அந்த மாநாட்டில் வெளியிடப்பட்ட மலரை அனுப்பித் தந்திருக்கிறார் ஐயா பழ.நெடுமாறன். தனித்தமிழ் இயக்கம் பற்றித் தெரியாதவர்கள், அது குறித்துத் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்கள் இந்த மலரைப் படித்தாலே போதும், நூறு ஆண்டுகளுக்கு முன்னால் தனித்தமிழ் இயக்கம் தொடங்கியது ஏன், எப்படி? என்கிற எல்லா விவரங்களும் வசமாகும்.

சங்க காலத்திற்குப் பிறகு, தனித்தமிழில் எழுதப்பட்ட இலக்கியம் கம்பகாதைதான். பாம்பன் சுவாமிகள் தனித்தமிழுக்காக எழுப்பிய குரல்தான் அந்த இயக்கத்தின் முதல் குரல்களில் ஒன்று எனப் போற்றப்படுகிறது. மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் மூத்த ஆய்வறிஞராகப் பணியாற்றும் பேராசிரியர்

ப. மருதநாயகம் எழுதியிருக்கும் "பாம்பன் அடிகளும் தனித்தமிழும்' கட்டுரையும், கு. அரசேந்திரன் எழுதியிருக்கும், "தனித்தமிழ்க் காப்புப் போராட்டத்தில் கம்பரின் பங்களிப்பு'என்கிற கட்டுரையும் என்னை ஒருமுறைக்கு இருமுறை படித்துக் குறிப்பெடுத்து வைத்துக்கொள்ளத் தூண்டின. அனைத்து கட்டுரைகளும் ஆவணங்கள்.

தனித்தமிழ் இயக்க நூற்றாண்டை நாம் பரவலாகக் கொண்டாடுவதன் மூலம்தான் தமிழில் ஆங்கிலக் கலப்பை அகற்றும் முயற்சியை முனைப்புடன் முன்னெடுத்துச் செல்ல முடியும். ஐயா. பழ.நெடுமாறன் வழி காட்டியிருக்கிறார்.

21-7-16 -தினமணி "இந்த வாரம்' கலாரசிகன் பாராட்டு!

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.