படையை அனுப்பி அணையைத் திறக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 20 அக்டோபர் 2016 10:59

2007ஆம் ஆண்டில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என நடுவர் மன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் அப்போதிருந்த காங்கிரசு அரசும் இப்போதுள்ள பா.ஜ.க. அரசும் அதைச் செயல்படுத்த முன்வரவில்லை.

இதையடுத்து இவ்வாண்டு செப்டம்பர் முதல் வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணைப்பிறப்பித்தது. மீண்டும் செப்டம்பர் 30ஆம் தேதியன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணையில் அக்டோபர் 4ஆம் தேதிக்குள் மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என ஆணையிட்டது.

அதே நாளில் மத்திய அரசின் அட்டர்னி - ஜெனரல் அக்டோபர் 4ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம்அமைக்கப்படும் என கூறியதை உச்சநீதிமன்றம் பதிவு செய்தது. மேலும் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித்தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மேலாண்மை வாரியத்திற்குரிய தங்கள் தரப்பு பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அவரது இந்தக் கருத்தின் அடிப்படையில்தான் அக்டோபர் 1ஆம் தேதி மாலை 4 மணிக்குள் தங்கள் தரப்புப் பிரதிநிதிகளை நியமிக்கும்படி தொடர்பான மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தவிர மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டதும். காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள உண்மை நிலைமையையும் அதற்கான முகாந்திரங்களையும் அந்த வாரியம் தனது கையில் எடுத்துக்கொள்ளும் என்றும் அட்டர்னி -ஜெனரல் கூறியிருந்தார்.

இந்தச் சூழ்நிலையில் மத்திய நீர்வளத் துறையின் இணைச் செயலாளர் தமிழகத் தலைமைச் செயலாளருக்கு 30-09-16 அன்று கடிதம் எழுதி காவிரி மேலாண்மை வாரியத்திற்கான பிரதிநிதியின் பெயரைத் தெரிவிக்கும்படி வேண்டிக்கொண்டார். அக்கடிதத்துடன் மத்திய நீர்வளத்துறையின் செயலாளருக்கு அட்டர்னி-ஜெனரல் எழுதியிருந்த கடிதம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவின் சுருக்கம் ஆகியவற்றை இணைத்திருந்தனர். மேலும் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு உறுப்பினர்களை மத்திய அரசு தனது சார்பில் உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறியிருந்தார்.

அக்டோபர் 5ஆம் தேதி அறிக்கை தயாரிப்பதற்கு ஏதுவாக முடிந்தால் அக்டோபர் 3ஆம் தேதியன்றே அணைப்பகுதிகளை அந்த வாரியம் சென்று பார்வையிடும் என்றும் 6ஆம் தேதியன்று உச்சநீதிமன்றத்தில் அந்த அறிக்கை அளிக்கப்படும் என்றும் அட்டர்னி-ஜெனரல் கூறியிருந்தார்.

இதன்படி தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநில அரசுகள் தங்களது பிரதிநிதிகளின் பெயர்களை மத்திய நீர்வளத்துறைக்குத் தெரிவித்தன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக முதல்கட்ட நடவடிக்கைகள் ஏறத்தாழ முடிவடைந்துவிட்ட கட்டத்தில் மத்திய அரசு திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. அக்டோபர் 1ஆம் தேதியன்று மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட இணை மனுவில் 30-09-2016 அன்று உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று பிறப்பித்த ஆணையை திருத்த வேண்டும் என்றும் இப்போது அவ்வாறு வாரியத்தை அமைக்க முடியாது என்றும் கூறியுள்ளது.

மத்திய அரசின் சார்பில் அட்டர்னி-ஜெனரல் உச்சநீதிமன்றத்தில் கொடுத்த உறுதிமொழிக்கு முற்றிலும் எதிராக மத்திய அரசின் இச்செயல்பாடு அமைந்துள்ளது. மேலாண்மை வாரியத்தை அமைக்கும் பிரச்சினையில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றிக்கொண்டதற்கு பின்னணி என்ன?

சட்டரீதியாக மத்திய அரசு இவ்வாறு தனது நிலையை மாற்றிக்கொள்ள முடியாது. அவ்வாறு செய்வது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என பல்வேறு சட்ட அறிஞர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் உச்சநீதிமன்ற நீதிநாயகமான ஏ.கே. கங்குலி பின்வருமாறு கூறியிருக்கிறார்.

"அரசமைப்புச் சட்டவிதி எண் 144ன்கீழ் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அரசு நிர்வாகம், நீதித்துறை உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பின்பற்றியே ஆக வேண்டும். உச்சநீதிமன்றத்தின் உத்தரவை கர்நாடக அரசு செயற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அந்த உத்தரவுக்கு எதிராக கர்நாடகப் பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நடவடிக்கை அரசமைப்புச் சட்ட விதிகளை மீறும் செயலாகும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கர்நாடக அரசு ஆய்வு செய்யவோ அல்லது முடிவெடுக்கவோ இயலாது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஒரு மாநில அரசு பின்பற்றாவிட்டால் அது மிகவும் மோசமான முன் உதாரணத்தை ஏற்படுத்திவிடும்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிநாயகமான கே. சந்துரு கூறும்போது "உச்சநீதிமன்றத்தின் உத்தரவை கர்நாடகம் மீறுவது முதல் தடவையல்ல. 2001ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உச்சநீதிமன்ற ஆணையின்படி காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட மறுத்தபோது பதவியிலிருந்து விலகிச்செல்லுமாறு உச்சநீதிமன்றம் எச்சரித்தது. அதன்பிறகே அவர் காவிரி நீரைத் திறந்துவிட்டார். அரசியல் சட்ட கோட்பாடுகளை ஒரு மாநில அரசு மதிக்க மறுக்கும்போது அரசியல் சட்டத்தின் மீது உள்ள நம்பிக்கை குறைந்துவிடும். இது நாட்டின் ஒற்றுமைக்குப் பேரபாயமாகும். அரசியல் சட்டத்தின்மீது நம்பிக்கை வைக்க வேண்டியது முதன்மையானதாகும். 1990ஆம் ஆண்டிலிருந்து அரசியல் சந்தர்ப்பவாதத்திற்காக இது போன்ற சகிப்பற்ற தன்மைகள் பெருகி வருகின்றன. அரசியல் சட்டத்தின் 141 முதல் 145 வரையுள்ள விதிகள் நீதித்துறையின் அதிகாரத்தை தெளிவாக வரையறுத்து கூறுகின்றன. உச்சநீதிமன்றத்தின் ஆணையை செயல்படுத்தும் அரசியல் உறுதிப்பாடு இருக்க வேண்டும். இல்லையேல் அது வேண்டாத விளைவுகளுக்கு வழிவகுத்துவிடும்.''

சென்னை உயர்நீதிமன்றத்தின் மற்றொரு முன்னாள் நீதிநாயகமான டி.ஆர். வள்ளிநாயகம் கூறும்போது

உச்சநீதிமன்றம் உடனடியாக கர்நாடக அரசைத் தற்காலிகமாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் அல்லது தனது ஆணையை தானே நிறைவேற்ற வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்குரிய அதிகாரங்கள் உச்சநீதிமன்றத்திற்கு உண்டு.

இந்திய அரசியல் சட்டத்தின் 141ஆவது பிரிவு உச்சநீதிமன்றத்தின் ஆணை அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும். மேலும் 142ஆவது பிரிவின்படி இரு மாநிலங்களுக்கிடையே உள்ள வழக்கில் நீதியை நிலைநிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் ஆணைகளைப் பிறப்பிக்கவும் உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு.

யாராக இருந்தாலும் உச்சநீதிமன்றத்திற்கு முன் நேர்ப்படுத்தவும், எத்தகைய ஆவணத்தையும் தன் முன் கொடுக்குமாறு செய்யவும், நீதிமன்றத்தை அவமதிப்பவர்கள் மீது விசாரணை நடத்தவும் தண்டிக்கவும், உச்சநீதிமன்றத்திற்கு ஏராளமான அதிகாரங்கள் உண்டு.

தனது ஆணையின்படி காவிரியில் தண்ணீரைத் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசைப் பதவி நீக்கம் செய்யவும், இராணுவத்தை அனுப்பி அணையைத் திறந்துவிடச் செய்யவும் உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு.

சட்டத்தின்படி அரசாட்சியா அல்லது அரசியல் ஆதாயங்களுக்கான அரசாட்சியா என்பதற்கான சோதனையே இப்பிரச்சினையாகும்.''

சென்னை உயர்நீதிமன்றத்தின் மற்றொரு முன்னாள் நீதிநாயகமான டி. அரிபரந்தாமன் கூறுகையில் "பன்மாநில ஆற்றுநீர் தகராறு சட்டத்தின் 6ஏ(1) பிரிவின்கீழ் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை நிறைவேற்றுவதற்கான திட்டத்தை வகுக்கும் அதிகாரம் மத்திய அரசிற்கு உண்டு.

நடுவர் மன்றத்தின் தீர்ப்பு ஒரு பரிந்துரையே என மத்திய அரசு கூறுவது அடிப்படையில்லாதது ஆகும். காவிரி ஆற்றுநீர் நடுவர் மன்றம் தன்னுடைய இறுதி ஆணையில் பின்வருமாறு கூறியிருக்கிறது.

பன்மாநில ஆற்று நீர் தகராறு சட்டத்தின் 6(2) பிரிவின் கீழ் கூறப்பட்டிருப்பதாவது.

"நடுவர் மன்றத்தின் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்ட உடனேயே நடைமுறைக்கு வந்துவிடும். உச்சநீதிமன்றத்தின் ஆணைக்கு அது சமமானதாகும்''. எனவே நடுவர் மன்றத் தீர்ப்பையோ உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையோ குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் விவாதிக்க முடியாது.

1956ஆம் ஆண்டு ஆற்றுநீர் வாரியச் சட்டப்படி அமைக்கப்படும் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற வேண்டும் என்பது தேவையற்றது. வாரியச் செயற்பாட்டில் சில சிக்கல்கள் ஏற்படுமானால் அவ்வப்போது சில விதிமுறைகளை நாடாளுமன்றம் இயற்றிக்கொடுக்கலாம் என்றுதான் அச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறவேண்டும் என மத்திய அரசு கூறுவது ஆழமான அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். கர்நாடகத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே இந்தத் தந்திரத்தை மத்திய அரசு கடைப்பிடிக்கிறது. உச்சநீதிமன்றம் இதை புரிந்துகொண்டு இச்சூழ்ச்சிக்கு இரையாகிவிடாமல் தமிழகத்திற்கு நீதி வழங்கும் என்ற நம்பிக்கை தமிழர்களுக்கு இருக்கிறது. இந்நம்பிக்கை பொய்த்துப்போகுமானால் அரசியல் சட்டத்தின் மீதும், அதன் அடிப்படையில் கட்டப்பட்ட தேசிய ஒருமைப்பாட்டின்மீதும் தமிழர்கள் நம்பிக்கை இழப்பார்கள் என எச்சரிக்கிறேன்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.