ஈழத்தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகரமான யாழ்ப்பாணத்தில் 24-09-16 அன்று மாபெரும் மக்கள் பேரணி நடைபெற்றது. சிங்கள இராணுவத்தின் கெடுபிடிகளுக்கு அஞ்சாமல் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்தப் பேரணியில் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.
கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பேரணி நடைபெற்றது.
1. ஈழத் தமிழர்களின் தாயகமான வடக்கு-கிழக்கு மாநிலங்களில் கணக்கற்ற வகையில் புத்த ஆலயங்களை கட்டி வருவதை உடனே நிறுத்த வேண்டும். ஏனெனில் இந்த ஆலயங்களைச் சுற்றி சிங்களக் குடியிருப்புகள் நிறுவப்படும். தமிழர்கள் தங்களின் சொந்தத் தாயகத்திலே சிறுபான்மை மக்களாக ஆக்கப்படுவார்கள்.
2. போர் முடிந்து ஆறாண்டுகள் முடிவடைந்தபிறகும் சிங்களப் படைகள் தமிழர் பகுதியில் தொடர்ந்து இருக்கிறார்கள்.
3. தமிழர்களுக்கெதிராக சிங்களப் படையால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகள், போர்க் குற்றங்கள், பாலியல் வன்முறைகள் ஆகியவை குறித்து அனைத்து நாடுகளின் விசாரணை நடத்த வேண்டும்.
4. கூட்டாட்சிக் கொள்கைகளின் அடிப்படையில் வடக்கு-கிழக்கு மாநில தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்தப் பேரணியில் சமய வேறுபாடுகளுக்கப்பால் அனைத்துத் தமிழர்களும் பங்குபெற்றனர். அரசியல் கட்சிகள், மனிதநேய அமைப்புகள், மாணவர் அமைப்புகள் உட்பட பங்கேற்றனர்.
2009ஆம் ஆண்டு போர் முடிவடைந்த பிறகு முதல் தடவையாக, தமிழர்கள் பொங்கி எழுந்து அறவழியில் போராட முன்வந்துள்ளது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது |