தமிழகத்தில் அண்மைக் காலமாக இலக்கியம், கல்வெட்டு, நாணயம், தொல்லியல், வெளிநாட்டார் குறிப்புகள் போன்ற சான்றுகளை முன்னிறுத்தி புதிய ஆய்வுகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
கொற்கை, முசிறி, அழகன்குளம், கொடுமணம், ஆதிச்சநல்லூர், பொருந்தல் மற்றும் பல ஊர்களில் அகழ்வாய்வுகள் நடத்தப்பட்டு பல வரலாற்று உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கொற்கை, அழகன்குளம், முசிறி, கொடுமணம் ஆகிய நகரங்கள் கி.மு. 4ஆம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே உலக நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தன என்பது அகழ்வாய்வுகள் மூலம் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. கி.பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த ரோம் நாணயங்கள் இவ்வூர்களில் கிடைத்துள்ளன. எனவே, இந்நகரங்கள் வெளிநாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டவையாக திகழ்ந்திருக்கின்றன. ஆனால் இந்த நகரங்கள் இன்று குக்கிராமங்களாகக் காட்சி தருகின்றன. நகர்ப்புற நாகரிகத்திற்கான தடயங்கள் இவ்வூர்களில் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
கொடுமணம்
தற்போது உள்ள ஈரோடு மாவட் டத்தில் கொடுமணம் அமைந்துள்ளது. தமிழ் பல்கலைக் கழக கல்வெட்டியியல் துறையைச் சேர்ந்த புலவர் செ. இராசு 1985ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரை இங்கு மேற்கொண்ட அகழ்வாய்வில், தமிழ்நாடு தொல் பொருள் ஆய்வுத் துறையும் சென்னைப் பல்கலைக் கழக ஆய்வுத் துறையும் பங்கு கொண்டன. கொடுமணம் அகழ்வாய்வு பெரும் கற்படை சின்னங்களிலிருந்தும், குறியீடுகள் பொறித்த பானை ஓடுகளிலிருந்தும் கிடைத்த குறியீடுகள் தமிழ் பிராமி எழுத்துக்களாகும். இதிலிருந்து பல செய்திகள் கிடைத்துள்ளன.
பதிற்றுப்பத்தில் கூறப்பட்டுள்ள கொடுமணம் என்ற ஊரே தற்போது கொடுமணல் என வழங்கப்படுகிறது என்பதும் தெரிகிறது. தன்னைப் பாடிய புலவர்களுக்கு கொடுமணத்தில் செய்யப்பட்ட அணிகலன்களை சேர மன்னன் பரிசாக அளித்தான் என்பது இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இவ்வூரில் ரோமாபுரி நாணயங்களும் மேலும் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கருப்பு-சிவப்பு மண் பாண்ட ஓடுகளும் கிடைத்துள்ளன. இவை கி.மு. முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். சங்க காலச் சேரர் தலைநகரமான கரூருக்கு மிக அருகில் இவ்வூர் அமைந்துள்ளது. இவ்வூரிலிருந்து ஆறு மைல் தொலைவில் உள்ள பாடியூர், ரோம் அரசுடன் மிக அதிகமான வணிகத் தொடர்பு கொண்டிருந்தது என்பது இதன் மூலம் புலப்படுகிறது. படிகப்பச்சை, படிகக் கல், சூதுபவளம், நீலம், போன்றவற்றை கொண்டு செய்யப்பட்ட அணிகலன்கள் இவ்வூரிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. கரூருக்கு அருகே இருக்கக் கூடிய அமராவதி ஆற்றில் கடந்த நூறாண்டு காலமாக ரோம நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் கொடுமணம், பாடியூர் ஆகிய ஊர்களுக்கு மிக அருகில் இருந்த பழைய கரூர் நகரத்தின் அடிச் சுவடுகளை இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆதிச்சநல்லூர்
தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர் அமைந்துள்ளது. பாண்டிய மன்னர்களின் தலைநகரமாகத் திகழ்ந்த கொற்கையில் இருந்து 13 கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது.
1876ஆம் ஆண்டு முனைவர் சாகர் என்னும் ஜெர்மானியரும் 1904ஆம் ஆண்டு லூயிஸ் லேபிக்யூ என்னும் பிரெஞ்சுக்காரரும் முதன் முதலாக இங்கு அகழ்வாய்வு செய்தபோது அவர்களுக்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க பொருட்களை ஐரோப்பாவிற்குக் கொண்டு சென்றுவிட்டனர்.
1889முதல் 1905 வரை ஆங்கிலேயரான அலெக்சாண்டர் ரியா என்பவர் அகழ்வாய்வு நடத்தி வரலாற்றுக்கு முற்பட்டக் காலத்தைச் சேர்ந்த இதற்கு இணையாக இந்தியாவில் வேறு எந்த இடமும் கிடையாது என அறிவித்தார். இவருடைய முயற்சியில் 4000த்திற்கும் மேற்பட்ட பழம் பொருட்களை கண்டெடுத்தார். இரும்பால் செய்யப்பட்ட ஆயுதங்கள், பாத்திரங்கள், வெண்கலத்தால் செய்யப் பட்ட அணிகலன்கள், தங்க நகைகள், பல்வேறு வகையான மணிகள், மாவு அரைக்கும் கல் இயந்திரங்கள், விளக்குகள் போன்றவற்றை கண்டெடுத்தார்.
2004ஆம் ஆண்டு நடைபெற்ற அகழ்வாய்வின் போது 160க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகளும் அவற்றுக்குள் மனித எலும்புகளும் கிடைத்தன. 144 ஏக்கர் பரப்பளவில் ஆயிரக்கணக்கானவர்கள் இங்கு புதைக்கப்பட்டுள்ளார்கள். இவை 3800ஆண்டிற்கு முற்பட்டவை என ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். தமிழ் பிராமி எழுத்தில் இவற்றில் குறியீடுகளும் இருந்தன. முதுமக்கள் தாழிகள் புதைக்கப்பட்ட மயானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் அதற்கருகே மக்கள் வாழ்ந்த நகரம் அமைந்திருக்க வேண்டும். ஆனால், அதை கண்டுபிடிக்கும் ஆய்வுகள் தொடரவில்லை.
இங்கு பணியாற்றிய தொல்லியல் அதிகாரி 2006ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஆனால் தான் செய்த அகழ்வாராய்ச்சிகள் குறித்த அறிக்கைகளை அவர் கொடுக்காமலேயே சென்றுவிட்டார். இன்றுவரை அதைக் கொடுக்க வில்லை. அவர் மீது மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
புதுச்சேரி மாநிலத்தின் அருகே அரிக்கமேடு என்னும் இடத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் மூலம் இங்கு வெளிநாட்டு வாணிபம் செழிப்புற்று வளர்ந்திருந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மரக்காணத்திற்கு 20 மைல் தெற்கே இவ்வூர் அமைந்துள்ளது. மரக்காணம் தமிழ்நாட்டின் சிறந்த துறைமுகங்களில் ஒன்றாக விளங்கியது.
பூம்புகார்
சங்க இலக்கியங்களிலும், சிலம்பு, மேகலை போன்ற காப்பியங் களிலும் சிறப்பாகக் குறிப்பிடப் படும் சோழர் தலைநகரமான பூம்புகார் கடல் கோளில் அழிந்துபோனது.
1991ஆம் ஆண்டில் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் புகழ்பெற்ற பூம்புகார் நகர கடல் பகுதியில் மேற்கொண்ட ஆய்வின் மூலம் கடற்பகுதியிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் தரங்கம்பாடி வரை இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் சங்க காலத்தைச் சேர்ந்த சுட்ட செங்கற்களால் ஆன ட வடிவ கட்டிடம் ஒன்றும் கண்டறியப்பட்டது. இத்துடன் 23 அடி ஆழத்தில் 85 அடி நீளமும் 2 மீட்டர் உயரமும் கொண்ட பல பொருட்கள் கண்டறியப்பட்டன. இவை அனைத்தும் ஒரு பெரிய நகரம் மூழ்கிக் கிடக்கக்கூடும் என்பதை உறுதிப்படுத்தின. ஆனால், தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் தனது ஆய்வினை பாதியில் நிறுத்திவிட்டது.
2001ஆம் ஆண்டில் பூம்புகார் கடல் பகுதியில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் கிரகாம் ஹான்காக் என்பவர் தீவிரமாக ஆராய்ந்து கடலுக்கு அருகில் ஒரு பெரும் நகரம் மூழ்கிக் கிடப்பதை கண்டறிந்தார். இதனுடைய காலம் 11,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறினார். அந்நகரம் சுமார் 75 அடி ஆழத்தில் புதைந்து கிடப்பதை கண்டறிந்தார். பூம்புகார் நகர நாகரிகம், சிந்து சமவெளி நாகரிகத்தை விட மிகவும் மேம்பட்ட ஒன்று என்றும் அவர் கூறினார்.
இலக்கியச் சான்றுகளை உறுதிப்படுத்தும் தொல்லியல் ஆதாரங்களும் பூம்புகாரில் கிடைத்துள்ளன. சங்க காலப் படகுத்துறை, புத்தவிகாரை, உறைகிணறுகள், அரிய மணிகள், கட்டிடங்கள், பழங்காசுகள் ஆகியவையும் கிடைத்துள்ளன. முதுமக்கள் தாழி ஒன்றும் அதற்குள் 10க்கும் மேற்பட்ட சிறுசிறு கலயங்களும் கிடைத்துள்ளன. கருப்பு, சிவப்பு கலயத்தில் எழுத்துப்பொறிப்புடன் கிடைத்துள்ள முதல் கலயம் இதுதான். கருப்பு, சிவப்பு நிறம் என்பது கி.மு. 5ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காலத்தைக் காட்டுகிறது.
ஆனாலும், கடலுக்குள் மூழ்கிக் கிடக்கும் பூம்புகாரைப் பற்றிய முழு மையான ஆராய்ச்சி இன்னமும் நடைபெறவில்லை. கிரகாம் ஹான்காக்கின் ஆய்விற்குப் பிறகு இந்த ஆழ்கடல் ஆய்வு தொடரப்படவில்லை.
வைகை நாகரிகம்
மதுரை நகரத்திற்குக்கருகே வைகைக் கரையில் உள்ள கீழடி என்னும் சிற்றூரில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் 2300 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகள், தந்தம், சுடுமண் ஆகியவற்றால் செய்யப்பட்ட காதணிகளும் வேறு அரிய வகை மணிகளும், அணிகலன்களும் கிடைத்துள்ளன.
மேலும் கட்டிடங்களின் தரைத்தளங்கள் மதில்சுவர்கள், கால்வாய்கள், பெரும் தொட்டிகளும் அவற்றின் உள்ளே தண்ணீர் செல்வதற்கும், வெளியேறுவதற்குமான அமைப்புகள், வட்டக் கிணறுகள், மூடிய மற்றும் திறந்த வடிகால்கள், சுடுமண் குழாய்கள் போன்றவை முதன்முறையாகக் கிடைத்துள்ளன. ஒரு பெரும் நகர நாகரிகம் இருந்ததற்கான அடையாளச் சின்னங்களே இவையாகும்.
கீழடியில் 110 ஏக்கர் பரப்பளவைக் கொண்டிருக்கும் தொல்லியல் மேட்டில் வெறும் 50 சென்ட் பரப்பளவிற்குத்தான் அகழ்வாய்வு நடத்தப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வினை மேற்கொண்டிருக்கும் இந்திய தொல்லியல் துறையின் கண்காணிப்பாளரான அமர்நாத் இராமகிருட்டிணா "கி.மு. 3ஆம் நூற்றாண்டை சேர்ந்த இடமாக இந்த இடம் அமைந்திருக்கிறது. 2013ஆம் ஆண்டில் நாங்கள் அகழ்வாய்வு பணியைத் தொடங்கியபோது, சங்கக் காலத்தைச் சேர்ந்த சுமார் 293 நகரங்கள் வைகை ஆற்றின் இருகரைகளிலும் அமைந்திருப்பதை கண்டறிந்தோம். தமிழ்நாட்டிலேயே 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நகர்ப்புற நாகரிகத்தின் முதல் தடயம் இதுவாகும். அரிக்கன்மேடு, காவிரிப்பூம்பட்டினம், உறையூர் போன்ற தொன்மையான நகரங்களில் செய்யப்பட்ட அகழ்வாய்வில் கிடைத்ததைவிட கீழடியில் அதிக எண்ணிக்கையில் தொடர்ச்சியாக பல கட்டிடங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன.
சங்க காலத்தில் கட்டிடங்களே இல்லை என்ற கூற்றை இந்த அகழ்வாய்வு மாற்றியமைத்துள்ளது. இங்கு ஒரு நகர நாகரிகம் வாழ்ந்ததற்கான அடிப்படை ஆதாரங்கள் அத்தனையும் கிடைத்துள்ளன. அரப்பா நாகரிகம் போன்று சுடுமண், கழிவு நீர்க் கால்வாய், வசதியுடைய கட்டிட அமைப்புகளும் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் இப்போதுதான் முதன்முறையாக சுடுமண் முத்திரை கிடைத்துள்ளது. அக்கால மக்கள் வாணிக நோக்கத்திற்காக இந்த முத்திரைக் குறியீட்டை பயன்படுத்தியிருக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
இந்தப் பகுதியில் பத்து முதல் 15 ஆண்டுகள் வரை அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டியுள்ளது. இப்போது நடைபெற்ற அகழ்வாராய்ச்சிக்கு 30 பேர் தங்கள் நிலங்களை கொடுக்க முன்வந்துள்ளனர். ஆனால் அகழ்வாராய்ச்சி முடிந்த பிறகு தோண்டப்பட்ட குழிகளை மண்போட்டு மூடிக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் மண்ணால் ஆன பழம் பொருட்கள் சேதமாகாமல் இருக்கும். அவசியமானால் மீண்டும் தோண்டி எடுத்துக்கொள்ள முடியும். இல்லாவிட்டால் மழையில் அவை அழிந்துவிடும்.
அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களை, இங்கு பத்திரப்படுத்தி வைக்க கட்டிடங்கள் இல்லை. கூடாரங்களில்தான் வைக்கப்பட்டுள்ளன. இங்கு எடுக்கப்பட்ட பொருள்களை, வேதியல் முறையில் சுத்தம் செய்வதற்குரிய சோதனைச் சாலை இங்கில்லை. மைசூரில்தான் உள்ளது. அங்கு கொண்டு சென்று அனைத்தையும் சுத்தம் செய்து திரும்பக் கொண்டுவந்து இங்கு வைப்பதற்கு அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும்.
இந்தியா எங்கும் இவ்வாறு அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்ற இடங்களிலேயே 45 அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதைப்போல் இங்கும் அமைப்பதற்கு தமிழக அரசு இரண்டு ஏக்கர் நிலம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் மத்திய அரசு அதற்கான கட்டிடத்தைக் கட்டித் தரும்.
பழஞ் சேர நாடான இன்றைய கேரளத்தில் உள்ள பண்டைக் காலத் துறைமுகமான முசிறியில் நடத்தப்பட்ட அகழ்வாய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் அங்கேயே ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. அண்மையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அதைத் திறந்து வைத்துள்ளார்.
கீழடியில் நடைபெறும் ஆய்வுகள் முழுமையாக நிறைவேறுமானால் தமிழகத்தின் வரலாற்றையே திருத்தி எழுத வேண்டியிருக்கும்.
தற்போதைய மதுரையில் மீனாட்சி கோயிலுக்கு அருகே அரசி மங்கம்மாளின் அரண்மனையின் ஒரு பகுதி உள்ளது. அங்கு இப்போது பொதுப்பணித்துறை அலுவலகம் அமைந்துள்ளது. அதற்கு அருகே, காய்கறிச் சந்தை இருந்தது. அது இப்போது வேறிடத்திற்கு மாற்றப்பட்டுவிட்டது. எனவே அந்த இடத்தில் இருந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வெற்றிடமாக உள்ளது.
அந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்தால் பல வரலாற்றுத் தடயங்கள் கிடைக்கக்கூடும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அதற்கான அனுமதியை அளிக்கும்படி தமிழக அரசை வேண்டிக்கொண்டுள்ளனர்.
அதைப்போல கீழடியில் நடைபெற்ற ஆய்வுகள் மூலம் கிடைக்கப்பெற்ற பழமைவாய்ந்த பொருட்களை அதற்கருகிலேயே அருங்காட்சியகம் அமைத்து வைக்க வேண்டும். அதற்கு இரண்டு ஏக்கர் நிலம் வேண்டுமென தமிழக அரசிடம் இந்திய தொல்லி யல் துறை வேண்டுகோள் விடுத்திருக்கிறது. விரைவில் அதை தமிழக அரசு வழங்காவிட்டால் இந்த பொருட்கள் அனைத்தும் மைசூரிலுள்ள தலைமை நிலையத்திற்குக் கொண்டு செல்லப்படும். அவை அங்கு பத்திரமாக பாதுகாக்கப்படும் என்பதற்கு உத்திரவாதம் கிடையாது.
சங்க கால நகரங்களான மதுரை, உறையூர், கரூர், முசிறி போன்ற பழம்பெரும் நகரங்கள் அழிந்துவிட்டன. கொற்கை, பூம்புகார் ஆகியவை கடலுள் ஆழ்ந்துவிட்டன. உறையூர், திருச்சி மாநகரத்தில் ஒரு பகுதியாக ஒடுங்கிவிட்டது. இப்போதுள்ள மதுரை நாயக்கர் கால மதுரையாகும். மேலே கண்ட நகரங்களில் மூதூர் மதுரை அமைந்திருந்த பகுதி மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நகர்ப்புற நாகரிகம் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்ட இடம் இதுமட்டுமே. எனவே, இந்த அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டு இதை கண்டறிந்த மத்திய தொல்லியல் ஆராய்ச்சித்துறை கண்காணிப்பாளர் அமர்நாத் இராமகிருட்டிணா மற்றும் அவரது துணை ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் தமிழ் மக்களின் பாராட்டிற்கும் நன்றிக்கும் உரியவர்களாவார்கள். இவர்களின் ஆய்வுப் பணிகள் தொடர்வதற்கு மத்திய அரசும், தமிழக அரசும் ஊக்கமளிக்க வேண்டும். |