புலம்பெயர்ந்த தமிழர்கள் அதிகம் வாழும் கனடா நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி டொரோண்டா நகரிலுள்ள அல்பேர்ட் காம்பெல் சதுக்கத்தில் மாலை 5.30க்கு தொடங்கிய "எழுக தமிழ்'' நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமான நிகழ்வாக நடந்து முடிந்தது.
சமீபத்தில் ஈழ மண்ணில் தன்னெழுச்சியாக நடந்த மாபெரும் "எழுக தமிழ்'' பேரணிக்கு வலிமை சேர்க்கும் நிகழ்வாக இந்நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக தமிழர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளரும், திரைப்பட இயக்குநருமான வ. கெளதமன் அவர்கள் கலந்து கொண்டு நிறைவுரை ஆற்றினார்.
நிகழ்வில் பல முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
போர்க்குற்றங்கள், மனிதத்திற்கு எதிரான குற்றம் மற்றும் இன அழிப்பிற்கான அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும்.
ஈழத்தமிழரிடம் அபகரித்த பூர்வீகக் காலனிகளை மீள் கையளிக்கப்பட வேண்டும்.
பயங்கரவாத தடுப்புச் சட்டம் அகற்றப்பட வேண்டும்.
அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும்.
ஐ.நா. கண்காணிப்பில் வடக்கு-கிழக்கை பூர்வீகமாகக் கொண்ட தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
விட்டுவிட்டு பெய்த மழையில் பிள்ளை குட்டிகளுடன் ஆயிரக்கணக்கில் பெருந்திரளாக திரண்டு நின்ற மக்களின் பெரு உணர்ச்சிகளோடு இத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியாக பேசிய இயக்குநர் வ. கெளதமன், "இன அழிப்பு நடந்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகும் உலகமும், ஐ.நா.வும் எங்கள் தமிழினத்திற்கு நீதி தர தயங்குகிறது. இழுத்தடித்து சிதைக்கப்பார்க்கிறது. இந்நிலை தொடர்ந்தால் எமக்கான நீதியினை நாங்களே போராடி எடுத்துக்கொள்ளும் நிலை உருவாகும். 2010இல் அமெரிக்கா வெளியிட்ட ஒரு அறிக்கையில் உரிய நேரத்தில் தமிழர்களுக்கு நீதி தரவில்லையென்றால் மீண்டும் அங்கு எழும் மக்கள் புரட்சியைத் தவிர்க்க முடியாது என்று கூறியிருப்பதை உண்மையாக்கிவிடாதீர்கள் என்று பேசிவிட்டு எதிர்க்கத் துணிந்தால் தமிழ் மீளும், எதர்க்கும் துணிந்தால் தமிழ் ஆளும் என தனது உரையினை நிறைவு செய்தார்.
"எழுக தமிழ்' நிகழ்வினை கனடிய தமிழர் தேசிய அவை மிக சிறப்பாக நடத்தினார்கள் |