திரைப்படங்களில் தமிழைக் கொலை செய்கிறார்கள் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் நேர்காணல் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 03 நவம்பர் 2016 17:10

திரைப்படத்திற்குத் தமிழில் பெயர் வைத்தால்கூட கேளிக்கை வரிச்சலுகை கிடைக்கிறது. தமிழில் படிப்பது மட்டும் கேலிக்கூத்தாகி விடுகிறதே ஏன்...? - கதிர் தியாகு, விருத்தாசலம்

தமிழ்நாட்டு அரசியலிலும், சமுதாயத்திலும், திரைப்படங்களின் தாக்கம் மிதமிஞ்சி இருக்கிறது. அந்த அளவிற்கு தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு போன்றவை மதிக்கப்படுவதில்லை. எனவேதான் அரசுகள் தங்களது செல்லப்பிள்ளையாக திரைப்படத் துறையைக் கருதி, ஊட்டி வளர்க்கின்றன. தமிழில் பெயர் வைக்கப்பட்ட திரைப்படங்களில், கலப்புத் தமிழில் உரையாடல், தமிழிசைப் புறக்கணிக்கப்பட்டு பிறமொழி இசைக்கு முதன்மை, தமிழ்ப்பண்பாட்டிற்கு எதிரான நடை, உடை, ஆகமொத்தத்தில் தமிழ்த் திரைப்படங்களில் தமிழ்க் கொலை நடைபெறுகிறது. அதைப்பற்றிக் கவலைப்படாமல் பெயரில் மட்டும் தமிழ் இருந்தால் போதுமென அரசுகள் கருதுகின்றன.

தமிழ்த்தேசியம் பேசும் நீங்கள், இந்திய தேசியம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்..? - ரவிக்குமார், காஞ்சிபுரம்

இந்தியா என்றொரு நாடோ அல்லது இனமோ கிடையாது. இது ஒரு துணைக் கண்டம். பல்வேறு மொழிகளைப் பேசும் பல தேசிய இனங்கள் வாழ்கின்றன. மொழி, இலக்கியம், பண்பாடு, பழக்க வழக்கங்கள், வரலாறு போன்றவற்றால் வேறுபட்ட தேசிய இனங்களை ஒரே கூண்டிற்குள் அடைத்து இந்தியா என்றும், இந்தியர் என்றும் பெயர் சூட்டி அடக்கி ஆண்டார்கள் ஆங்கிலேயர்கள். அந்நிய ஆட்சிக்கு எதிரானப் போராட்டத்தில் அனைத்துத் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களும் கைகோர்த்து நின்று போராடினார்கள். அந்தப் போராட்டம் வெற்றியுடன் முடிந்துவிட்டது. அந்தந்த தேசிய இனங்களுக்கு தங்களின் எதிர்காலம் குறித்து முடிவுசெய்யும் உரிமை உண்டு. அதை நாம் மறுக்க முடியாது. ஆங்கிலேயர் வீற்றிருந்து ஆண்ட தில்லியி லிருந்து ஆள்வதனால் இவர்களும் தங்களை ஆங்கிலேயர் போல கருதிக் கொண்டு அனைத்துத் தேசிய இனங்களையும் அடக்கி ஆள முற்படுகிறார்கள்.

மொழி வழியாகத் மாநிலங்களைப் பிரிக்க மறுத்தார்கள். மக்கள் போராட்டங்களுக்குப் பிறகு அடிபணிந்தார்கள். மொழி வழி மாநிலங்கள் உருவான பிறகு, அவர்களுக்குரிய உரிமைகளை அளிக்க மறுக்கிறார்கள். அதை எதிர்த்துதான் காஷ்மீர், பஞ்சாப், அசாம், நாகலாந்து போன்ற பல்வேறு மாநிலங்களில் உரிமைப்போராட்டங்கள் நடைபெறுகின்றன. மற்ற மாநிலங் களிலும் அவை பரவிக்கொண்டிருக்கின்றன. சோவியத் ஒன்றியத்திற்கு ஏற்பட்ட நிலை இந்திய ஒன்றியத்திற்கு ஏற்படும் காலம் அதிக தூரத்தில் இல்லை.

தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு என்ன...? - இராகிருஷ்ணன், திருவள்ளூர்.
தமிழக மீனவர்களை தனது குடிகள் என இந்திய அரசு கருதவில்லை. உலகத்தில் ஐந்தாவது பெரிய கடற்படையான இந்தியக் கடற்படையால் தமிழக மீனவர்களைப் பாதுகாக்க முடியவில்லை என்பதல்ல. மனம் இல்லை என்பதே உண்மை. அதனால்தான் சிங்களக் கடற்படை நமது மீனவர்களை கடந்த 30 ஆண்டு காலத்திற்கு மேலாக சுட்டுக்கொல்கிறது. சிறைப்பிடிக்கிறது. படகுகளையும்,வலைகளையும் அழிக்கிறது. இந்தியக் கடற்படை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

இதை மீனவர்களின் பிரச்சினை என்று பார்க்காமல் ஒட்டுமொத்தத் தமிழர்களின் பிரச்னை என கருதி ஏழரை கோடி தமிழ் மக்களும் மீனவர்களுக்கு ஆதரவாக அணி திரள வேண்டும். போராட வேண்டும். அப்போதுதான் நமது மீனவர்களைக் காப்பாற்ற முடியும்.

சட்டம் ஒழுங்கை சிறப்பான முறையில் செயல்படுத்தும் ஜெயலலிதா ஆட்சியில், தமிழகத்தில் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை, போன்ற குற்றச்செயல்கள் பற்றி...? - வெற்றிவேல், சென்னை.

திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் சமூக விரோதிகள் + ஊழல் அரசியல்வாதிகள் + காவல் துறையில் உள்ள கருப்பு ஆடுகள், ஆகியோரைக் கொண்ட முக்கூட்டு அச்சு உருவாகியிருக்கிறது. அதனால்தான் கொலைகளும் கொள்ளைகளும் தொடர்கின்றன. இந்த முக்கூட்டு அச்சை தகர்க்த்தெறிந்தால் தான் கொலை, கொள்ளைகளைத் தடுக்க முடியும். அது மக்கள் கையில்தான் இருக்கிறது.

தமிழ்த் தேசியம் பேசி சிலர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறாமல் போனது ஏன்...? - இந்திரா பார்த்தசாரதி, விருதுநகர்.

இல்லாத இந்தியம், திராவிட மாயை ஆகியவற்றில் சிக்கிக்கிடக்கும் தமிழர்களுக்கு தமிழ்த்தேசிய உணர்வு ஊட்டி அவர்களை அணிதிரட்டினால் ஒழிய தமிழ்த்தேசியம் வெற்றி பெற முடியாது. தமிழீழத்தில் தந்தை செல்வா தலைமையில் 30 ஆண்டு காலம் தமிழ்த்தேசிய உணர்வை மக்களுக்கு ஊட்டி அவர் வளர்த்தார். மக்கள் தமிழீழக் கோரிக்கைக்கு ஆதரவாக அணி திரண்டார்கள். எனவே தமிழீழத்தில் தொடர்ந்து நடைபெறும் அத்தனைத் தேர்தல்களிலும் சிங்களக் கட்சிகளால் ஓரிரு இடங்களைக்கூடக் கைப்பற்ற முடியவில்லை. இந்த உண்மையை உள்வாங்கி செயல்பட்டால்தான் தமிழ்த்தேசியம் வெல்ல முடியும்.

தகவல் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்துவிட்ட இன்றைய நிலையிலும் சில அரசியல்வாதிகள் ஆரிய எதிர்ப்பு, பார்ப்பனிய மாயை என்று பேசுகிறார்களே... இதை எப்படி பார்க்கிறீர்கள்..? - பூபதி. கோவை.

தகவல் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கும் இன்றைய காலகட்டத்திலும் சாதி ஏற்றத்தாழ்வுகள், கற்பிப்பவர்களும், ஒருபோதும் பேச்சு மொழியாக இருக்காத சமற்கிருதத்தை உயர்த்திப் பிடிப்பதும், அதிலிருந்துதான் தமிழ் உள்பட இந்திய மொழிகள் அனைத்தும் பிறந்தன என்று சொல்பவர்களும், கோவிலுக்குள் தமிழில் வழிபாடு நடத்தினால் தீட்டாகிவிடும் என ஆணவமொழி பேசுபவர்களும் இன்றும் இருப்பதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

எதிர்க்கட்சித் தலைவராக மு.க. ஸ்டாலின் செயல்பாடுகள் உங்களுக்கு மனநிறைவைத் தருகின்றனவா...? இல்லையா...? ஏன்? - ஆனந்தி, மதுரை.

தமிழக சட்டமன்ற இந்தியாவில் உள்ள ஏனைய மாநில சட்டமன்றங்களுக்கு முன்மாதிரியாக விளங்கிய ஒரு சட்டமன்றமாகும். இராஜாஜி, காமராசர், அண்ணா போன்றோர்கள் முதலமைச்சர்களாகவும் பி. இராமமூர்த்தி, ஜீவானந்தம், கருத்திருமன் போன்றவர்கள் எதிர்க்கட்சித் தலைவர்களாகவும் வீற்றிருந்து மக்கள் பிரச்சினைகளுக்காகக் கருத்துப் பரிமாற்றங்களை சூட்டோடும் சுவையோடும் சட்டமன்ற மரபுகளை மீறாமல் நடத்தியிருக்கிறார்கள். ஆனால், அண்மைக் காலத்தில் சட்டமன்றம் என்பது, மரபுகள் என்பவையும் மதிக்கப்படாமல், மக்கள் பிரச்சினைகளைப் பற்றி கவலைப்படாமல் பகை உணர்வுகளைப் பறிமாறிக் கொள்ளும் மன்றமாக மாறிவிட்டது. ஆளுங்கட்சிக்கும் முதலமைச்சருக்கும் எத்தகைய பொறுப்புணர்வு இருக்க வேண்டுமோ அதே அளவிற்கு எதிர்க்கட்சிக்கும் அதன் தலைவருக்கும் பொறுப்புணர்ச்சி இருக்க வேண்டும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பிரச்சினைகள் பற்றிப் பேசுவதற்காக சட்ட மன்றம் வந்திருக்கிறோம் என்ற உணர்வுடன் இருதரப்பினரும் செயல்படவேண்டும்.

நன்றி : "ஜெயப்பிரியா' ஆகஸ்டு 2016

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.