புதுச்சேரி தமிழன்பர்கள் பலரும் தங்கள் இரு சக்கர வண்டிகளில் ஒரு பலகையில் தமிழ் எண்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். இப்படித் தமிழ் எண்களைப் பயன்படுத்தக்கூடாது என்று தன்னுடைய நிறுவனத்தின் தொலைக்காட்சி வழியாக காங்கிரசுக் கட்சியின் இப்போதைய முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகிய திரு. ஜான்குமார், சில ஆண்டுகளுக்கு முன்பு விளம்பரம் செய்து வந்தார். இதை எதிர்த்து தமிழ் அமைப்புகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இடையில் நெல்லித்தோப்பு தொகுதியின் அப்போதைய அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராகிய திரு.ஓம். சக்தி சேகர் அவர்கள் "தமிழ் எண்களை வண்டிகளில் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும்' என்று புதுச்சேரி சட்டமன்றத்தில் பேசினார். எனவே, மேற்சொன்ன ஜான்குமார், ஓம்சக்தி சேகர் ஆகியோரின் தமிழுக்கு எதிரான போக்கைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
உலகத் தமிழர் பேரமைப்பின் செயலாளர் ஆன ந.மு. தமிழ்மணி அவர்களின் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மறுநாள், சட்டமன்ற உறுப்பினரான திரு.ஓம் சக்தி சேகர் அவர்கள் சட்டமன்றத்தில் தான் பேசியதற்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டம் செய்ததால் தன் உரிமைமீறப்பட்டதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவரிடம் புகார் செய்தார். சட்டப்பேரவைத் தலைவரும் நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
இது நடந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு திரு. ஓம்சக்தி சேகர் அவர்களின் ஆதரவாளர்கள் காவல் துறையில் புகார் செய்ததன் அடிப்படையில் திரு.ந.மு. தமிழ்மணி, திரு. க. சத்யானந்தம் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.
அந்தப் புகாரில் "நக்சலைட்டாக மாறி, வீட்டிற்குள் புகுந்து, வெடிகுண்டு வீசி, வெட்டிக் கொலை செய்வதாக'' சட்டமன்ற உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகச் சொல்லப்பட்டிருந்தது.
காவல் துறையால் போடப்பட்ட பொய் வழக்கு கடந்த ஏழரை ஆண்டுகளாக நடந்து வந்தது. இதிலிருந்து திரு. ந.மு. தமிழ்மணி, திரு. சத்யானந்தம் ஆகியோர் கடந்த 11-10-2016 அன்று விடுதலை செய்யப்பட்டனர். |