பல்லவபுரம் மறைமலையடிகள் இல்லத்தில் 25--9--2016 அன்று மாலையில் நடைபெற்ற மறைமலையடிகளாரின் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. வரவேற்புரை: ம.ம.அ.க. அறக்கட்டளை அறங்காவலர் மறை.தி.தாயுமானவன் பேசுகையில்...
ஐயா பழ.நெடுமாறன் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவை அடிகளாரின் பிறந்த நாளை கடந்த சூலை 15முதல்17வரை தஞ்சாவூரில் மிகச்சிறப்பாக தமிழ் அறிஞர்களைக் கொண்டு மூன்று நாட்கள் மாநாடு நடத்தி தமிழகத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார். இதனைப் பாராட்டும் வண்ணம், ஐயா பழ.நெடுமாறன் அவர்களுக்கு ம.ம.அ.க. அறக்கட்டளையின் சார்பாக (உரூ.30,000/-) முப்பதாயிரமும், நினைவுப் பரிசும் வழங்கப்பட்டன. அறக்கட்டளையின் வளர்ச்சிக்கு இயன்ற வரை உதவி செய்த நல்உள்ளங்களுக்கு தூயதமிழன்புடன் அறக்கட்டளையின் சார்பாக நன்றியறிதலை தெரிவித்தார்.
தலைமை உரையாற்றிய இரா.முத்துக்குமாரசுவாமி, "அடிகளார் தனித்தமிழ் இயக்கம் தொடங்கியவராக இருந்தாலும், தமிழகத்தில் கட்டாய இந்தி எதிர்ப்புப் போரில் தலைமையேற்று நடத்திச்சென்ற பொழுதுதான் தமிழகம் முழுமையும் அறியப்பட்டார். 1937ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் நாள் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் திரு.வி.க., அண்ணா, பாவேந்தர், கி.ஆ.பெ.போன்ற தலைவர்கள் கலந்துகொண்டனர். அவ்வமையம் நடைபெற்ற சுவையான நிகழ்ச்சியை இங்கு குறிப்பிடுதல் சிறப்பாக இருக்கும். அடிகளாரைப்பற்றி தமிழ்ப் புலவர்களும், படித்தவர் களுமே அறிந்திருந்தனர். திரு.வி.க. அவர்கள் தொழிற்சங்கத் தலைவராக இருந்ததால் தமிழகம் முழுமையும் அனைவரும் அவரை அறிந்திருந்தனர். மேடையில் திரு.வி.க. அவர்கள் நெடுஞ்சாண் கிடையாக மறைமலை யடிகளாரை வீழ்ந்து வணங்கினார். கூட்டத்தினர் அனைவரும் வியப்புற்றனர். அப்போது "உங்களுக்கு நான் தலைவராக இருக்கலாம். ஆனால் எனக்குத் தலைவர் அடிகளாரே!' என திரு.வி.க. முழங்கியதை, கூட்டத்தினர் அனைவரும் பலத்த கைத்தட்டி வரவேற்றனர். தனித்தமிழும், இந்தி எதிர்ப்பும் சேர்ந்து தமிழகத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. அடிகளாரின் தனித்தமிழ் இயக்கம் மேலும் வளர்ச்சி அடைவதற்கு இந்நிகழ்ச்சி தமிழகத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது எனக் குறிப்பிட்டார்.
முன்னிலை வகித்த முனைவர் பா.இறையரசன் "அடிகளாரின் தனித்தமிழ் உணர்ச்சியே என் இயற்பெயரான சாமிநாதன் என்பதை தூயதமிழில் இறையரசன் என மாற்றம்செய்துகொண்ட கரணியத்தையும் விளக்கிக் கூறினார். தஞ்சையில் நடைபெற்ற தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு மாநாட்டில் ஐயா பழ.நெடுமாறன் அவர்களால் மறைமலையடிகள் விருது தனக்கு வழங்கப்பட்டதை நன்றியுடன் தெரிவிப்பதாகவும் தனித்தமிழ் இயக்கம் தொடந்து முன்னெடுத்துச் செல்லப்படவேண்டியதின் தேவையை விளக்கமாக எடுத்துரைத்தார்.
புதுவைத் தமிழறிஞர் க.தமிழமல்லன் எழுதிய தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார் என்ற நூலை மணிவாசகர் பதிப்பக மேலாளர் குருமூர்த்தி முன்னிலையில் ஐயா பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட முதல் நூலை முனைவர் இரா.முத்துக்குமாரசுவாமி பெற்றுக்கொண்டார்.
மலேசியா முத்தமிழ்ப்பாவலர் மன்றத்தின் தலைவர் அருள்.க.ஆறுமுகம் அவர்களின் தமிழ்த் தொண்டினைப் பாராட்டி "முத்தமிழ்ச்செல்வர்' என்ற விருதினை ஐயா பழ.நெடுமாறன் அவர்கள் அறக்கட்டளையின் சார்பாக வழங்கினார். விருதைப்பெற்றுக்கொண்டு, பேசுகையில் "எங்கள் மலேசிய நாட்டில் 534 பள்ளிகளில் மறைமலையடிகளார் மற்றும் தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களின் வரலாற்றை எமது மாணவர்கள் அறிந்து, தெரிந்து தனித்தமிழை கடைபிடித்துவர பல முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருவதை விளக்கமாக எடுத்துரைத்தார்.
அடிகளாரின் கொள்ளுப்பேரன், பேத்திகள் அடிகளார் தனித்தமிழுக்கும், சைவத்திற்கும் ஆற்றிய தொண்டினையும், அவரது பன்மொழிப் புலமையைப் பற்றியும் தங்களுக்கே உரித்தான பேச்சுத்திறத்தால் வெளிப்படுத்தி பார்வையாளர்களை வெகுவாகக்கவர்ந்தனர்.சிறுமியர் இருவர் தேவாரம், பாவேந்தர் பாடல்களைப்பாடி பார்வையாளர்களை பரவசப் படுத்தினர்.
பழ.நெடுமாறன் பேசுகையில் "தமிழ் மொழிக்கும், இனத்திற்கும் பாதிப்பு ஏற்படும்போதெல்லாம் அதைக்காப்பாற்ற தமிழ் அறிஞர்கள் தோன்றினார்கள். திருக்குறள் தமிழர்களின் வாழ்வியல் மெய்மைகளையும், மனிதவாழ்க்கையின் ஒழுக்கங்களையும் எடுத்துரைத்தது. அது போல் அறநெறிகளையும், தமிழ் தேசியத்தையும் வலியுறுத்தும் சிலப்பதிகாரம் என்னும் தமிழ்க்காப்பியத்தை படைத்தவர் இளங்கோவடிகள். அதுபோல் தமிழ் மொழிகாப்புக்காக பல அறிஞர்கள் தோன்றியிருந்தனர். அவர்களில் முகாமையானவர் மறைமலையடிகளாரே என்றால் மிகையாகாது.
அடிகளாரால் தனித்தமிழ் இயக்கம் 1916ஆம் ஆண்டு தொடங்கியிருக்கா விடில் இந்நேரம் தமிழ் மொழி மேலும் சிதைவு அடைந்திருக்கும். தமிழிற் பிறமொழிச் சொற்கள் அதிகம் கலந்து மற்றொரு மொழி தோன்றாமல் குறிப்பாக சமற்கிருத மொழியின் (முதலைவாயில்) பிடியிலிருந்து காப் பாற்றிய பெருமை மறைமலையடிகளாரையே சாறும். அடிகளார் தமிழ் மொழியின் பாதுகாவலர். பிறமொழிபால் பகைமை பாராட்டாதவர். சான்றாக அடிகளுடைய நாட்குறிப்பு முழுவதும் அழகான ஆங்கிலத்தில் வரையப் பட்டதாகும், சமற்கிருத மொழியையும் துறை போகக்கற்று மிகப் பெரும் புலமை பெற்றார். அடிகளார் தனித்தமிழ் அறிஞர் மட்டுமல்ல சமூகசீர்திருத்த சிந்தனை கொண்டவர். தமிழக மக்களின் சாதி என்னும் கொடிய எலும்புருக்கி நோய் தென்னாட்டவர் திறனைத் தின்று தீர்த்துவிடும் என்று முழங்கியதோடு நில்லாமல் சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் என்ற சமூக விழிப்புணர்வு நூலையும் எழுதி வெளியிட்டு, தமிழகத்தில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். தூத்துக்குடியில் அடிகளார் தலைமையில் சைவசித்தாந்த சபை விழாவில் நடைபெற்ற நிகழ்ச்சியைக் குறிப்பிடலாம். விழாவின் மதிய உணவு இடை வேளையில் மண்டபத்தினுள் ஒரு சாராருக்கும், வெளியில் மற்றவருக்கும் உணவு பரிமாறப்பட இருந்தது. அதைக் கண்ணுற்ற அடிகளார் "ஏன் இருவிதமான உணவுப்பந்தி நடைபெறுகிறது' என விழாக்குழுவினரிடம் அடிகள் வினவ அவர்கள் சைவவேளாளருக்கு உள் மண்டபத்திலும், மற்றவர்களுக்கு வெளியிலும் உணவு பறிமாறப்படுவது வழக்கம் என்றுரைத்தனர். இச்செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, மண்டபத்துக்கு வெளியில் உட்கார்ந்து அடிகள் அவர்களுடன் உணவு உண்டார். இதைக் கண்ணுற்ற மன்றத்தார் மாநாட்டின் தலைவரான அடிகளை உள்ளே செல்ல அனுமதி மறுத்தனர். அடிகளார் இது போன்ற பாகுபாட்டை சைவசித்தாந்த சபை கடைபிடிப்பதால் யாம் இங்கு உரையாற்ற விரும்பவில்லை யான் செல்கிறேன் என்று புறப்பட்டார். இதைக்கேள்வியுற்ற விழா பொறுப்பாளர்கள் இச்செயலுக்கு தாங்கள் வருந்துவதாகவும் இனி இவ்வாறு நடைபெறது என்று உறுதி கூறிய பின்புதான் அடிகளார் அவ்விழாவில் கலந்துகொண்டு தமிழர்கள் சாதியை ஒழித்தாலன்றி தமிழ்ச் சமூகம் முன்னேற்றத்தைக் காணமுடியாது என்பதை பல நிகழ்வுகளை மேற்கோள்காட்டி சாதியற்ற தமிழ்ச் சமூகம் உருவாக தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டிய தேவையை அடிகளார் எடுத்தியம்பினார்.
"மறைமலையடிகள் கல்வி அறக்கட்டளையின் சார்பாக ரூ.30 ஆயிரத்தை நீங்கள் வழங்கியதற்கு எனது இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதற்காக முன்னின்று முயற்சிகளை மேற்கொண்ட தம்பி தாயுமானவன் மற்றும் நண்பர் இரா. முத்துக்குமாரசாமி உள்ளிட்ட அனைவருக்கும் உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ஆண்டுதோறும் மறைமலையடிகளின் பேரால் நினைவுச் சொற்பொழிவு நடத்த இந்தப் பணம் பயன்படுத்தப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார்.
முனைவர் சாரதாநம்பியாரூரன், தனித்தமிழ் இயக்கம் தோன்றிய வரலாற்றை இனிய பாடலுடன் பல மேற்கோள்கள் காட்டி விரிவாக உரையாற்றினார். குறிப்பாக மலைக்கு தமிழிற் பல சொற்கள் உள்ளதை எடுத்துக் கூறினார். மலை என்பது அடிச்சொல்,வேர்ச்சொல். மல்-வலிமை, ஓங்கல் –உயர்ந்தமலை, குன்று- குறும்பொருள்,பொற்றை-மண்நிறைந்த பாறை என்று பொருள் விளக்க உரையாற்றினார்.
சுப்பையா முத்துக்குமாரசுவாமி பேசுகையில்
"அடிகளார் இல்லம் எப்படி வாங்கப்பட்டது,என்றும் தனது தாத்தா தாமரைத் திரு சுப்பையா அவர்களின் முயற்சியால் அடிகளாரின் நூல்கள் அனைத்தும் சை.வ.சி.கழகம் அச்சிட்டதையும் நினைவு கூர்ந்தார். கழகம் அடிகள் இல்லத்துக்கு ஆற்றிவரும் பணியையும், உலக அளவில் கணனியில் தமிழ் மொழியின் பயன்பாடு பற்றியும், நாம் இக்கால அளவில் பதிப்புத் துறையில் தமிழ் நூற்களின் நிலையை மாற்றவேண்டிய தேவையையும் எடுத்துரைத்தார்.
விழா நிறைவாக முனைவர்.மா. பூங்குன்றன் இவ்விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி கூறினார்.
விழா நிறைவில் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. |