அறுபதில் அடியெடுத்து வைக்கும் இனிய தமிழ்நாடு! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 21 நவம்பர் 2016 12:12

விண்ணையிடிக்கும் தலையிமயம் - எனும்
வெற்பையடிக்கும் திறனுடையார் - சமர்
பண்ணிக்கலிங்கத் திருள்கெடுத்தார் தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு.

என பாரதி பாடிப் பெருமிதம் கொண்டான்.பொற்கோட்டு இமயத்துப் புலி பொறித்து ஆண்டான் பூம்புகார்ச் சோழன். ஆரியப் படை கடந்தான் பாண்டியன் நெடுஞ்செழியன். இமயத்தில் கல்லெடுத்து கனக விசயர் தலையில் ஏற்றி சேரநாட்டில் பத்தினித் தெய்வம் கண்ணகிக்குக் கோவில் எழுப்பினான் சேரன் செங்குட்டுவன். பாரதி பாடியதைப் போல தமிழ் மன்னர்கள் இமயம் வரை சென்று வெற்றிக் கொடி நாட்டினார்கள் என்பது உண்மை. ஆனால் தமிழ்நாடு மூவேந்தர்கள் ஆட்சிக் காலத்தில்கூட ஒன்றாக இருந்ததில்லை. சேர, சோழ, பாண்டிய நாடுகளாகப் பிரிந்து கிடந்தது. மூவரும் தமக்குள் ஓயாமல் போராடினர்.

சங்க கால இறுதியில் களப்பிரர் ஆட்சியிலும் தமிழகம் ஒன்றாக இருந்ததில்லை. அதற்குப் பின்னர் பல்லவர் ஆட்சியிலும் தமிழ்நாடு ஒரே நாடாக விளங்கியதில்லை. முதலாம் பாண்டியப் பேர ரசு காலத்திலும், பின்னர் சோழப் பேரரசு காலத்திலும் ஓயாத போர்கள் நடந்தன. தமிழ்நாடு ஓராட்சியின் கீழ் இருக்கவில்லை.பேரரசர்களான இராசராசன், இராசேந்திரன், ஆகியோர் காலத்தில் இலங்கை, கடாரம் மற்றும் கடல் கடந்த நாடுகளைக் கைப்பற்றி ஆண்டார்கள். ஆனாலும் அவர்கள் காலத்தில் தமிழகம் முழுவதையும் புலிக்கொடியின் கீழ் கொண்டுவர முடியவில்லை.

சோழரும்,பாண்டியரும் இடைவிடாது தமக்குள் போராடியதின் விளைவாகத் தமிழகம் வலிமைக் குன்றியது. பின்னர் விசயநகரப் பேரரசின் மேலாண்மையின்கீழ் மதுரை, தஞ்சை, செஞ்சி நாயக்கர்களின் ஆட்சி ஏற்பட்டது. அதற்குப்பிறகு மராட்டியர்களும், நவாபுகளும், தமிழகத்தின் சில பகுதிகளை ஆண்டனர். இவர்கள் அனைவரின் ஆட்சியிலும் தமிழகம் பல பகுதிகளாக சிதறுண்டுக் கிடந்தது. பாளையப்பட்டுகளின் சிற்றரசர்கள் ஆட்சியில் சிறு சிறு துண்டுகளாகத் தமிழகம் பிளவுப்பட்டுக் கிடந்தது. வணிகம் செய்து பிழைக்க வந்த அந்நியரான கிழக்கிந்திய நிறுவனத்திற்கு இது வாய்ப்பாக அமைந்தது. வணிகம் செய்யவந்தவர்கள் நாடாளும் வெறிக்கொண்டவர்களாக மாறினார்கள். அவர்கள் கைப்பற்றிய நாட்டின் நிர்வாகத்தை பிரிட்டிஷ் அரசே நேரிடையாக மேற்கொண்டது.

சென்னை, மும்பை, கல்கத்தா ஆகிய துறைமுக நகரங்களை தங்களது வணிக மேம்பாட்டுக்காக உருவாக்கிய ஆங்கிலேயர் அந்நகரங்களைச் சுற்றியிருந்த பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழும் பகுதிகளை ஒன்றாக இணைத்து பல்வேறு மாகாணங்களை உருவாக்கினார்கள். அப்படி அமைக்கப்பட்ட சென்னை மாகாணம் என்னும் சிறைக்குள் தமிழகம் கட்டுண்டுக் கிடந்தது. தெலுங்கு பேசும் மாவட்டங்கள், கன்னட மாவட்டங்கள், மலபார் மாவட்டம் ஆகியவை தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டு பெரும் சென்னை மாகாணமாகத் திகழ்ந்தது.
நாட்டின் விடுதலைக்காகப் போராட்டம் நடைபெற்ற காலத்தில் 1920 ஆம் ஆண்டில் நாகபுரியில் வி.விசயராகவாச்சாரியார் தலைமையில் கூடிய காங்கிரசு மாநாட்டில் மாகாண காங்கிரசுக் குழுக்களை மொழிவழி அடிப்படையில் திருத்தி அமைக்கவேண்டும் என்ற தீர்மானத்தை திலகர் முன்மொழிய காந்தியடிகள் வழி மொழிந்தார். அதன் விளைவாக காங்கிரஸ் கட்சி மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டுத் திருத்தி அமைக்கப் பட்டது. சென்னை மாகாண காங்கிரசுக்குழு, தமிழ்நாடு காங்கிரசுக்குழு, ஆந்திர காங்கிரசுக்குழு, கர்நாடக காங்கிரசுக்குழு என பிரிக்கப்பட்டு இயங்கத் தொடங்கின. நாடு விடுதலை பெற்ற பிறகு மொழி வழியாக மாகாணங்கள் திருத்தியமைக்கப்படும் என்ற வாக்குறுதியை காங்கிரஸ் கட்சி அளித்தது.

ஆனால், நாடு விடுதலை பெற்றபிறகு மொழி வழியாக மாநிலங்களைப் பிரிப்பதை இந்திய அரசு விரும்பவில்லை. ஆனால், மக்கள் போராட்டங்களுக்குப் பிறகு வேறு வழியில்லாமல் மொழி வழி மாநிலங்கள் அமைக்கப்பட்டன.

சங்க காலம் தொடங்கி ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் வரையிலும், அதற்குப்பிறகு நாடு விடுதலை பெற்ற 1947 ஆகஸ்டு 15ஆம் நாளிலிருந்து 1956ஆம் ஆண்டு அக்டோபர் 30 வரையும் தமிழ்நாடு தனி மாநிலமாக விளங்கவில்லை. 1956ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதி தமிழ்நாடு உருவாயிற்று. சில பகுதிகளை இழக்க நேரிட்டாலும் முதன் முதலாக தமிழர்களுக்கென்று ஒரு மாநிலம் அமைக்கப்பட்டது.

தமிழ் நாட்டின் தென் முனையில் இருந்த தமிழர் பகுதிகளைத் தமிழ் நாட்டுடன் சேர்ப்பதற்காக நேசமணி, நத்தானியல், பி.எஸ்.மணி போன்றோர் தலைமையில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் என்ற அமைப்புத் தொடர்ந்து போராடியது.

தமிழ் நாட்டின் வட எல்லையில் வேங்கடம் முதலிய பகுதிகளை தமிழ் நாட்டோடு இணைக்க வேண்டுமென்று தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சிவஞானம், மங்கலங்கிழார், கே.விநாயகம் போன்றோர் தலைமையில் போராட்டம் நடந்தது.

தமிழகத்தின் வடஎல்லையிலும், தெற்கு எல்லையிலும் நடைபெற்ற இந்தப் போராட்டங்களுக்கு தமிழ் நாட்டில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு ஆதரவுக் கொடுத்திருந்தால் பல பகுதிகளை இழந்திருக்க மாட்டோம்.

சென்னை நகரம் தமிழர்களுக்கே சொந்தமானது என்பதை நிலைநாட்ட அன்றைய முதல்வர் இராஜாஜி, பெரியார், காமராசர், அண்ணா, ஜீவா போன்ற தலைவர்கள் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்தார்கள். தட்சிணப் பிரதேசம் என்னும் சிறைக்குள் தமிழகத்தைப் பூட்டி வைக்கும் திட்டத்தை எதிர்த்து அன்றைய முதல்வர் காமராசரும், மற்ற தலைவர்களும் ஒன்றுபட்டுப் போராடியதால் வெற்றி கிடைத்தது. இந்த ஒற்றுமை எல்லைப் பகுதிகளை மீட்பதில் இல்லாமல் போயிற்று.

எனினும் தமிழகம் அமைந்த இத்திருநாளான நவம்பர் முதல் நாளை தமிழர்கள் ஆண்டு தோறும் கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்ந்திருக்கவேண்டும். கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும் மற்றும் பல்வேறு மாநிலங்களிலும் அந்தந்த மாநிலங்கள் பிறந்த நாட்களை, மாநில அரசுகளும், கட்சிகளும் இணைந்து கொண்டாடுகின்றன.

ஆனால், என்ன காரணத்தினாலேயோ தமிழ் நாட்டில் இதுவரை ஆண்ட அரசுகள் எதுவும் தமிழகம் பிறந்த நாளைக் கொண்டாட முன்வரவில்லை.இந்த நிலை தொடரக் கூடாது.இவ்வாண்டு தமிழகம் பிறந்து 60ஆவது ஆண்டில்அடியெடுத்து வைக்கிறது.இத்திருநாள் தமிழர்கள் அனைவரும் எத்தகைய வேறுபாடு இல்லாமல் இணைந்து நின்று கொண்டாடி மகிழ வேண்டிய பெரு நாளாகும். இருக்கும் பகுதியைக் காக்கவும், இழந்தப் பகுதிகளை மீட்கவும் உறுதிப்பூண வேண்டிய நாள். தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட தன் உயிரை ஈந்த தியாகி சங்கரலிங்கனார் அவர்களையும், தமிழகம் அமைய அரும்பாடுபட்டு எண்ணற்றத் தியாகம் செய்த அனைவரையும் நன்றியோடு நினைவு கூரும் நாள். இத்திருநாளை அனைவரும் கொண்டாடி மகிழ்வோமாக!

நன்றி : தினமணி 02-11-2016

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.