தனித்தமிழியக்க நூற்றாண்டு விழா, தமிழ் எதிர்கொள்ளும் அறைகூவல்களை எண்ணிப் பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பு நேர்ந்திருக்கிறது என்று வெறுமனே சொல்லிவிட முடியாது. ஏன் என்றால் முன் எப்போதையும் விட உலகம் முழுவதும் ஒரே மேலாண்மை மையம் எனும் பெரும் பாய்ச்சலோடு உலகமயம் என்னும் மேலைப் பண்பாட்டு, மொழிப் படையெடுப்பு நடந்து கொண்டிருக்கிறது.
அணை உடைத்த பெருவெள்ளமாய் வல்லாண்மை நாடுகளின் தொழில் நிறுவனங்கள் அவரவர் மொழி மேலாண்மையோடு வேட்டையாட வந்து விட்டன. ஊசி முனையிலும் பாசிமணி துளையிலும் தகவல் தொழில் நுட்பம் புகுந்து வெளிவரும் இன்றைய நிலையில் அந்த நிறுவனங்களின் ஆங்கிலத் திணிப்பு தமிழ் போன்ற மண்ணின் மொழிகளை மக்களிடமிருந்து வெளியேற்றி வருகின்றன. இத்தகையச் சூழலில் தமிழ்ப்பாதுகாப்புக்குத் தனித்தமிழ் அரணாக அமையும் என்கிற நம்பிக்கை, தமிழுணர்வாளர்களிடமிருந்து வருகிறது.
1916ஆம் ஆண்டு மறைமலை அடிகளார் தம்முடைய மகள் நீலாம்பிகையோடு நடத்திய உரையாடலில் அயல்மொழிச் சொல்லுக்கு மாற்றாகத் தமிழ்ச் சொற்களையே பயன்படுத்த வேண்டும் என்கிற கருத்து நிலைதான் இன்றையத் தனித்தமிழியக்க பன்முக விரிவுக்கான வித்து என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பின்னணியில் தனித்தமிழ் நூற்றாண்டு விழா மாநாட்டை தஞ்சையில் சூலைத் திங்கள் 15, 16, 17 ஆகிய நாள்களில் பழ. நெடுமாறன் தலைமையில் செயல்பட்டு வரும் உலகத்தமிழர் பேரமைப்பு மிகச் சிறப்புற நடத்தியது. இந்த மாநாட்டில் மொழித் தூய்மைக் கோட்பாடும் இயக்கங்களும், தனித்தமிழியக்க முன்னோடிகள், தனித்தமிழியக்கத் தோற்றமும் வளர்ச்சியும், தமிழர் மெய்யியல் சிந்தனைகள், தமிழர் வரலாற்றில் புதிய தடங்கள் முதலான தலைப்புகளில் அந்தந்த துறை சார்ந்த அறிஞர்கள் பங்கேற்ற கருத்தரங்கங்கள் நடைபெற்றன.
தனித்தமிழியக்க விரிவையும் ஆழத்தையும் எடுத்துக்காட்டும் ஆவணமாகத் திகழும் "தன்னேரில்லாத தமிழ்'' என்னும் பெயரில் மலரும் வெளியிடப் பெற்றது. இந்த மலரில் 54 அறிஞர்களின் 56 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தனித்தமிழியக்கக் கருத்துருவாக்க முன்னோடிகளும் தனித்தமிழை மக்கள் இயக்கமாக்கிய முன்னோடிகளும் என பரிதிமாற்கலைஞர், மறைமலை அடிகள், பாவேந்தர், பாவாணர், இரா. இளவரசு ஆகியோரின் கருப்பு வெள்ளைப் படங்கள் எழிலுற வடிவமைக்கப்பட்டு வெளியிடப் பெற்றுள்ளன. தனித்தமிழியத்தின் முதன்மையான நோக்கம் அயல்மொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது என்பதுதான். இந்தத் தனித்தமிழ்ப் பயன்பாடு என்பது இலக்கியப் படைப்பாக்க முயற்சியோடு மட்டும் நிற்பதல்ல மக்கள் வழக்காறுகள், கலைச் சொல்லாக்கங்கள் என்று எல்லையானது விரிவடைந்து செல்வதாகும். இந்தப் போக்கை இந்த மலர் கோடிட்டுப் புலப்படுத்துகிறது. இந்த மலர் முழுக்க மறைமலை அடிகள், பாவாணர், பெருஞ்சித்திரனார் முதலியோரின் பங்களிப்புகள் விரித்துரைக்கப்பட்டுள்ளன என்றாலும் இரா. இளங்குமரனார், ம.இலெ. தங்கப்பா, மறை. தி. தாயுமானவன், மா. பூங்குன்றன் ஆகியோரின் கட்டுரைகள் விரிவாக எடுத்துச் சொல்கின்றன.
தனித்தமிழியக்கம் அமைப்புச் சார்ந்த இயக்கமாகத் தோற்றம் எடுத்தது 1957ஆம் ஆண்டுதான். திருச்சிராப்பள்ளியில் தூயவளனார் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் தமிழ்ப்பேராயம் என்னும் பெயரில் அமைப்பைத் தோற்றுவித்தனர். "தமிழ்ஒளி'' என்னும் பெயரில் கையெழுத்து இதழையும் கொண்டுவந்தனர். ஏறக்குறைய ஐம்பது பேர் உறுப்பினர்களாக இருந்தனர். உறுப்பினர்கள் அனைவரும் தம் பெயர்களைத் தனித் தமிழில் மாற்றிக் கொண்டனர். தனித்தமிழிலேயே பேசுவதும் எழுதுவதும் என்று உறுதி பூண்டனர். அமைப்பின் முதலாண்டு செயலாளராக இரா. இளவரசு தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாமாண்டு செயலாளராக அரசக்கண்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்கள் நாயக முறையில் செயல்பட்ட முதலமைப்பு "தமிழ்ப்பேராயம்'' என்று அறியப்படுவதால், உண்மையில் தனித்தமிழியக்கத்துக்கு மணிவிழா ஆண்டின் முந்தைய ஆண்டு என்றுதான் அறிவிக்கப்பட வேண்டும்.
தமிழ்ப் பேராயம் 1957ஆம் ஆண்டு தோற்றம் பெற்றது என்றால், 1959ஆம் ஆண்டு பெருஞ்சித்திரனார், தமிழும் பன்னீர்ச்செல்வம் ஆகியோரால் தொடங்கப்பெற்ற தென்மொழி தனித்தமிழ்ப் பயன்பாட்டுக்குப் பெரும் வலுவும் பெரும் வீச்சும் ஏற்படுத்திய இதழாகும். "தென்மொழி'' இதழ் முயற்சிக்குத் தமிழ்பேராயத்தின் இரா. இளவரசும் மு. தமிழ்க்குடிமகனும் பெரும் ஒத்துழைப்பு நல்கினர் என்பது வரலாறு என்றாலும் தமிழகம் தழுவிய உணர்வாளர்களை "தென்மொழி'' திரட்டியது என்பதே உண்மை. இப்படி தனித்தமிழியக்கம் விரிவடைந்ததை இந்த மலரைப் பயிலும் போது நினைவுகூர வைக்கிறது.
தனித்தமிழியக்க விரிவுக்கு மறைமலை அடிகள், பாவாணர், பெருஞ்சித்திரனார் ஆகிய பெரிய ஆளுமைகளோடு மட்டுமல்லாது பல்வேறு துறைசார்ந்த ஆற்றலாளர்களான பா.வே. மாணிக்க நாயகர், சேந்தமாங்குடியார், த. சரவணத்தமிழன், இரா. இளவரசு, செங்கை செந்தமிழ்க்கிழார், இசையறிஞர் ப. சுந்தரேசனார், வை. பொன்னம்பலனார், புலவர் குழந்தை ஆகியோரும் செயல்பட்டுள்ளனர் என்பது பற்றிய அறிமுகக் கட்டுரைகள் இடம் பெற்றிருப்பது மிகவும் தனித்துச் சுட்டப்பட வேண்டிய ஒரு செய்தியாகும். இந்த வரிசையில் இன்னும் பலரைப் பற்றியும் எழுத வேண்டிய தேவையுமிருக்கிறது.
தமிழோடும் தனித் தமிழோடும் தொடர்புடைய பல்வேறு பொருள் கலந்த கட்டுரைகள் இடம் பெற்றிருப்பது மலரின் இன்னொரு சிறப்புமிக்கச் செய்தியாகும். மலையாளப் பாவியல் மொழியில் தனித்தமிழ் (இரணியன்), மூன்றாம் உலக நாடுகளில் தாய்மொழிக் காப்புப் போராட்டம் (கண.குறிஞ்சி), பண்டையத் தமிழ் வரிவடிவம் (அர.பூங்குன்றன்), மேலைநாட்டு இசை வளர்ச்சியில் தமிழிசையின் பங்கு (கு.கோ. தண்டபாணிப் பிள்ளை), தனித்தமிழும் பழங்குடி மொழிகளும் (கு. ஆல்துரை), திருக்குறளின் மலர் மருத்துவக் கூறுபாடுகள் (கு. பூங்காவனம்), மார்க்சியமும் தனித்தமிழும் (ஞானி), விவிலியத் தமிழ்மொழி பெயர்ப்புகள் (பா. வளனரசு), மக்கள் மொழி வழக்குகளும் சங்கத் தமிழ்ச் சொற்களும் (பி. தமிழகன்), ஊர்ப்பெயர் வரலாற்றில் தனித்தமிழ் (க.குழந்தைவேலன்), நடுகல்லின் நினைவேந்தல் மொழிநடை (மு. இளமுருகன்), தமிழரும் சிங்களவரும் மானிட மரபணுவியல் ஆய்வு (பக்தவத்சல பாரதி) ஆகிய கட்டுரைகள் தனித்தமிழ் அகன்ற பரப்பை நோக்கி நகர்வதைச் சுட்டுகின்றன. சிறப்புகள் பல நிறைந்த இந்த மலரில் விடுபடல்களும் போதாமைகளும் இருக்கின்றன என்றாலும் தனித்தமிழ் இயக்க வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆவணமாக இந்த மலர் விளங்குகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.
வெளியீடு : உலகத் தமிழர் பேரமைப்பு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் விளார் சாலை, தஞ்சாவூர் - 613 006. விலை ரூ: இருநூற்றைம்பது |