8-10-16 அன்று சென்னை இக்சா அரங்கத்தில் உலகத் தமிழ்க் கழகம் சார்பில் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா த. அன்புவாணன் வெற்றிச்செல்வி தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் தனித்தமிழ் இயக்கம் குறித்து நூல்கள் எழுதிய முதுமுனைவர் இரா. இளங்குமரனார், முனைவர் சாரதா நம்பி ஆரூரன், முனைவர் கு. திருமாறன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இவ்விழாவில் சிறப்புரையாற்றிய உலகத்தமிழர் பேரமைப்பின் பழ.நெடுமாறன் கூறியதாவது:
உலகத்தமிழ்க் கழகத்தின் சார்பில் நடைபெறும் இவ்விழாவில் மூன்று தமிழறிஞர்களுக்கு விருதும் பட்டயமும் வழங்கப்பெற்றன. தனித்தமிழ் இயக்கம் குறித்து இம்மூவரும் சிறப்பான நூல்களை எழுதியுள்ளனர். இந்நூல்கள் எழுதப்படாமல் போயிருந்தால் மறைமலையடிகள் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கத்தின் வரலாறு நமக்குத் தெரியாமலேயே போயிருக்கும். அரைநூற்றாண்டுக் காலத்திற்கு மேலாக மறைமலையடிகள் தமிழகம் முழுவதும் சுற்றிச்சுற்றி வந்து தனித்தமிழ் இயக்கத்தை உருவாக்கி அனைவருக்கும் உணர்வூட்டிய வரலாறு தமிழக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய வரலாறு ஆகும்.
இன்றைக்கு நம் நடுவில் வாழும் தமிழறிஞர்களில் மிகச்சிறந்தவர் இளங்குமரனார் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. உலகத் தமிழர் பேரமைப்பின் தொடக்க விழா மாநாடு 2002ஆம் ஆண்டு நடைபெற்றபோது அம்மாநாட்டில் உலகப் பெருந்தமிழர் விருதினை இவருக்கு அளித்து நாங்கள் பெருமைகொண்டோம். மறைமலையடிகள் வழியில் தமிழ்த் தூய்மை இயக்கத்தை இன்றும் முன்னெடுத்துச் செல்லும் மூதறிஞராக அவர் திகழ்கிறார்.
முனைவர் சாரதா நம்பி ஆரூரன் அடிகளாரின் குடும்பத்தைச் சேர்ந்தவர். இலக்கியம், இசை முதலிய துறைகளில் சிறந்தவர். இன்றுவரை உலகம் முழுவதும் சென்று தமிழ்த்தொண்டாற்றி வருகிறார். மறைமலையடிகள் வழியில் நின்று அவருடைய கணவர் நம்பி ஆரூரன் அவர்கள் ஆற்றிய தொண்டும் அவரைத் தொடர்ந்து சாரதா நம்பிஆரூரன் ஆற்றிவரும் தொண்டும் மிகச்சிறப்பானவை. முனைவர் கு. திருமாறன் அவர்கள், முனைவர் பட்டத்திற்கான ஆய்வுக்கட்டுரையாக தனித்தமிழ் இயக்கம் குறித்து எழுதியுள்ள நூல் மிகச்சிறப்பான நூலாகும். மறைமலையடிகள் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கத்தின் வீச்சினை இன்றளவும் தொடர்ந்து தமிழர்களிடம் கொண்டு செல்லும் பெருமைக்குரியவராக திகழ்கிறார். மேற்கண்ட மூவரையும் நான் மனமாறப் பாரட்டுகிறேன். தமிழ்கூறும் நல்லுலகம் இவர்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது.
உலக மொழி என அழைக்கப்படும் ஆங்கில மொழி பிறமொழிச் சொற்களின் கலப்புமொழியாகும். இலத்தீன், கிரேக்கம் முதலான பலமொழிகளின் துணையின்றி ஆங்கிலம் தனித்தியங்க இயலாத ஒரு மொழியாகும். ஆனால், தமிழ்மொழி பிறமொழிகளின் கலப்பு சிறிதுமின்றி தனித்தியங்க வல்ல செம்மொழியாகும். தொல்காப்பியரும், திருவள்ளுவரும் பேசிய தமிழ்மொழியை இன்றும் நாம் பேசுகிறோம், எழுதுகிறோம். எனவேதான் சுந்தரனார் "சீரிளமைத்திறன் குன்றாத மொழி'' என பாராட்டினார்.
பிறமொழிக் கலப்பால் மொழியின் சீர்மை குன்றும், அதை ஒருபோதும் ஏற்கக்கூடாது. ஆங்கிலத்திற்கு இணையான பிரஞ்சு மொழியின் தூய்மையை காப்பதில் இன்றளவும் அம்மொழி பேசும் மக்கள் மிகக் கவனமாகவும் உறுதியாகவும் உள்ளனர். பிரான்சு நாட்டை 14ஆம் லூயி மன்னன் ஆண்ட காலத்தில் பிரெஞ்சு மொழி தூய்மையைக் காப்பதற்காக பிரெஞ்சு அகாதமி என்னும் ஓர் அமைப்பை ஏற்படுத்தினார். இன்றளவும் அந்த அமைப்பு பல நூற்றாண்டு காலமாக தொடர்ந்து இயங்கி வருகிறது. அம்மொழித் தொடர்பான உயர் அதிகாரம் படைத்த அமைப்பு அதுவாகும்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் இதழ்களில் ஒரு செய்தி வெளிவந்தது. பிரான்சில் புகழ்பெற்றதும் பல இலட்சக்கணக்கான மக்களால் படிக்கப்படுவதுமான நாளிதழ் ஒன்றில் மூன்று ஆங்கிலச் சொற்கள் கலந்துவிட்டன. மேனாடுகளில் நாளிதழ் என்பது குறைந்த அளவு 96 பக்கங்களைக் கொண்டதாக இருக்கும். அந்த 96 பக்கங்களில் மூன்றே மூன்று ஆங்கிலச் சொற்கள் கலந்துவிட்டன என்பதற்காக அந்த இதழின் ஆசிரியரை அழைத்து பிரஞ்சு அகாதமி கண்டித்தது. மூன்று நாட்கள் இதழை வெளியிடக்கூடாது என தண்டித்தது. ஆனால், தமிழ்நாட்டில் வெளியாகும் இதழ்கள் பெரும்பாலானவற்றில் பிறமொழிச் சொற்கள் மிதமிஞ்சியும் திட்டமிட்டும் கலக்கப்படுகின்றன. அதைத் தட்டிக்கேட்க யாருமில்லை. இந்தப் போக்கு அந்த இதழ்கள் படிக்கும் மக்களிடையேயும் பரவுகிறது. தமிழ்மொழியின் சீர்மை மேலும் கெடுகிறது.
இதழ்களில் மட்டுமல்ல. தொலைக்காட்சிகள் மற்றும் திரைப்படங்கள் போன்ற அனைத்து ஊடகங்களிலும் கலப்புத் தமிழ் ஓங்கி நிற்கிறது. இத்தகையப் போக்கினைத் தடுத்து நிறுத்துவதற்காக மறைந்த முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவாதம் அவர்கள் தமிழகப் புலவர் குழு என்னும் அமைப்பை தொடங்கினார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் அதில் அங்கம் வகித்தார்கள். தமிழ்மொழியைப் பொறுத்தவரையில் புலவர் குழுதான் உயரதிகாரம் பெற்ற அமைப்பாக இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கோடு அவர் அந்த அமைப்பை தொடங்கினார். எந்த நோக்கத்திற்காக இந்த அமைப்புத் தொடங்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறுவதற்கு தமிழக அரசு துணை நிற்கவில்லை.
எந்த அரசாக இருந்தாலும் மொழியின் தூய்மையை காக்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டிருக்க வேண்டும். உறுதியாகவும் இருக்க வேண்டும்.
1917ஆம் ஆண்டு நவம்பர் புரட்சிக்குப் பிறகு ருசியாவின் தலைவராக இலெனின் அவர்கள் ஆட்சிப்பொறுப்பை ஏற்றபோது, அந்நாட்டிற்கு என்ன பெயர் சூட்டுவது என்பது குறித்த கேள்வி எழுந்தது. பல்வேறு மொழிகளைப் பேசும் தேசிய இனங்கள் வாழும் அந்த நாட்டின் பெயர் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொதுப்பெயராக இருக்க வேண்டும் என இலெனின் கருதினார். ஆனால், மற்றவர்கள் பெரும்பான்மை மக்கள் ருசிய மொழி பேசுபவர்களாக இருப்பதால் அந்நாட்டிற்கு ஜார் மன்னன் ஆட்சிக்காலத்தில் நிலவிய ருசியா என்ற பெயரே இருக்க வேண்டும் எனக் கூறினார்கள். ஆனால் அந்தக் கருத்தை இலெனின் ஏற்கவில்லை. அனைத்து தேசிய மொழியினரும் ஏற்கும் வகையில் சமதர்ம சோவியத் குடியரசு ஒன்றியம் என்ற பெயரையே சூட்டினார். ஒவ்வொரு குடியரசும் அந்த மக்கள் பேசும் மொழிகளே ஆட்சி மொழியாகவும், பயிற்சி மொழியாகவும் விளங்க வகைசெய்தார். எழுத்தில்லாத மொழிகளுக்கு எழுத்து வடிவங்களை உருவாக்கிக்கொடுக்கச் செய்தார். எல்லாவற்றிற்கும் மேலாக சோவியத் நாட்டில் வழங்கிய மொழிகளில் பிறமொழி கலப்புக்கு இடமளிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.
ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன் இந்தியா என்ற பெயரோ, இந்தியர்கள் என்ற பெயரோ கிடையாது. பல்வேறு மன்னர்கள், நாட்டின் பல பகுதிகளில் ஆண்டார்கள். அனைவரையும் துப்பாக்கி முனையில் அடக்கி தனது ஆளுகைக்கு கொண்டுவந்த ஆங்கிலேயருக்கு இந்த நாட்டில் பலமொழி பேசும் பல்வேறு தேசிய இனங்கள் உள்ளன என்பதே தெரியாது. எனவே அனைவரையும் இந்தியர்கள் என்றும் இந்நாட்டை இந்தியா என்றும் பெயர்சூட்டி ஆண்டார்கள்.
அனைத்துத் தேசிய இன மக்களும் இணைந்து போராடி அந்நிய ஆட்சியை அகற்றினர். எந்தவொரு தனித்தேசியமும் இதற்கு உரிமை கொண்டாட முடியாது. ஆனால், நாடு விடுதலைக்குப் பிறகு அந்தந்த தேசிய இன மக்களுக்கு உரிமைகள் பகிர்ந்துகொடுக்கப்படவில்லை. அனைத்து அதிகாரங்களும் தில்லியில் குவிக்கப்பட்டன. இந்தி மொழிக்கு இந்தியாவின் ஆட்சி மொழி தகுதி அளிக்கப்பட்டது. இப்போதுள்ள அரசு அத்தகுதியை சமற்கிருதத்திற்கு அளிக்க விரும்புகிறது. அதற்காக முனைந்து செயல்படுகிறது.
மொழிவழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு அந்தந்த மாநிலங்களில் வாழும் மக்களின் தாய்மொழியே ஆட்சிமொழியாக, பயிற்சிமொழியாக, வழிபாட்டு மொழியாக, நீதிமன்ற மொழியாக இருப்பதுதான் நீதியின்பாற்பட்டதாகும். ஆனால், தமிழ்நாட்டில் தமிழ் இன்னமும் அரியணை ஏற்றப்படவில்லை. மறைமலையடிகள் வாழ்ந்த காலத்தில் வடமொழி என்னும் முதலை வாய்ப்பிடியில் தமிழ் சிக்கித்தவித்ததைக் கண்டு பெரும் போராட்டத்திற்கிடையே அதை மீட்டுத்தந்தார். அரைநூற்றாண்டு காலத்திற்கு மேலாக தமிழகம் எங்கும் சென்று மொழியின் தூய்மையை பாதுகாப்பதற்காக அயராது தொண்டாற்றினார். அதற்கான விழிப்புணர்வை மக்களுக்கு ஊட்டினார்.
இன்றைக்குத் தமிழகத்தில் நமது மொழியைப் பாதுகாக்க பல்வேறு போராட்டங்கள் நடக்கின்றன. பல்வேறு இயக்கங்கள் நடைபெறுகின்றன. இவற்றுக்கெல்லாம் அடித்தளமிட்டவர் மறைமலையடிகள். தொலைநோக்குப் பார்வையுடன் அவர் தொடக்கிய தனித்தமிழ் இயக்கம்தான் இன்றைக்கு தமிழ்த்தேசியமாக மலர்ந்திருக்கிறது. அவர் காட்டிய வழியை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். அவருக்குப் பிறகு புரட்சிக் கவிஞர், பாவாணர், பெருஞ்சித்திரனார் போன்ற எண்ணற்ற தமிழறிஞர்கள் நமக்கு உணர்வூட்டுவதற்காக மெழுகுவர்த்திகளாக எரிந்து கரைந்து போனார்கள். ஒரு நூற்றாண்டுக் காலத்திற்கு மேலாக மொழி உணர்வை ஊட்டும் தொண்டு தமிழகத்தில் நடைபெற்றிருக்கிறது. வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு நீண்ட காலத்திற்கு உணர்வூட்டும் வேலை நடைபெறவில்லை.
ஆனாலும், இன்று நமது மொழிக்கு ஏற்பட்டுள்ள இழிவு நமக்கு தலைக்குனிவை ஏற்படுத்தியிருக்கிறது. நாடெங்கும் புற்றீசல்போல ஆங்கில வழிப் பள்ளிகள் பெருகிக்கொண்டேயிருக்கின்றன. நமது குழந்தைகள் ஆங்கிலமும் சரிவரத் தெரியாமல், தமிழும் புரியாமல் இரண்டும்கெட்டான் குழந்தைகளாக வளர்ந்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலைமை நீடித்தால் நமது செந்தமிழும் செத்தமொழிகளில் ஒன்றாகிவிடும்.
இந்த அபாயத்தை தமிழ் மக்களுக்கு எடுத்துக்கூறுவதற்காகத்தான் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவினை நாம் நாடெங்கும் நடத்தி வருகிறோம். நகரங்களில் மட்டுமல்ல, நாட்டுப்புறங்களிலும் இந்த விழா நடத்தப்பட வேண்டும்.
மொழிப்புரட்சி வெற்றிபெறவேண்டுமானால் அடித்தட்டு மக்களை நாம் திரட்டியாக வேண்டும். மக்களைத் திரட்டாமல் நம்மால் வெற்றிபெற இயலாது. இந்த தலைமுறையைச் சேர்ந்த நமது காலத்திலேயே தமிழை அரியணை ஏற்றும் இப்போராட்டத்தில் நாமும் வெற்றிபெற்றே ஆகவேண்டும். எதிர்காலத் தலைமுறை நல்ல தமிழர்களாக உருவாக நம்மை நாம் ஒப்படைத்துக்கொள்வோமாக.
நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக தி. வெற்றிச்செல்வன் செயல்பட்டார். பா.இறையெழிலன் அனைவருக்கும் நன்றி கூறினார். |