கருணாநிதி மறைத்த இரகசியம்! |
|
|
|
திங்கட்கிழமை, 21 நவம்பர் 2016 12:20 |
1989ஆம் ஆண்டு டிசம்பரில் இந்தியாவில் நடைபெற்ற நாடளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கப்பட்டு பிரதமர் இராஜீவ் பதவி விலக நேர்ந்தது. அதையொட்டி எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் வி.பி.சிங் பிரதமர் பொறுப்பை ஏற்றார். உடனடியாக இந்திய அமைதிப் படையைத் திரும்பப் பெற்றார்.
இலங்கையில் இனப்பிரச்சினை தொடர்பாக ஈழத் தமிழர் தரப்பினர் அனைவரையும் அழைத்துப் பேசி அந்தப் பிரச்சினையை சுமூகமாகத் தீர்ப்பதற்கு உதவுமாறு முதலமைச்சர் கருணாநிதியை பிரதமர் வி.பி. சிங் வேண்டிக்கொண்டார். அவர் எடுக்கும் முடிவை இந்திய அரசு ஏற்கும் என்றும் அறிவித்தார். அதாவது ஈழத் தமிழர் பிரச்சினையில் தீர்வு காண்பதற்கு இந்திய அரசு எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்யும் பொறுப்பு முதல்வர் கருணாநிதியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் தன்னிடம் ஒப்படைக்கப் பட்ட இந்த வாய்ப்பைப் பொறுப்புணர்ச்சியுடன் கருணாநிதி நிறைவேற்றினாரா?
கருணாநிதியின் அழைப்பை மதித்து ஏற்று அவருடன் பேசுவதற்காக பாலசிங்கம், யோகி ஆகியோரை பிரபாகரன் அனுப்பி வைத்தார். அப்போது கருணாநிதி தெரிவித்த தீர்வுத் திட்டம் என்ன?
இந்திய இராணுவத்தினால் வட-கிழக்கு மாநிலத்தில் அமைக்கப்பட்டிருந்த பொம்மை முதலமைச்சரான வரதராசப் பெருமாளுடன் இணைந்து அம்மாநில நிர்வாகத்தில் பங்குகொண்டு ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்துடன் இணைந்து ஒற்றுமையுடன் செயல்படுமாறு கருணாநிதி கூறினார்.
இந்திய அமைதிப்படையுடன் சேர்ந்து கொண்டு ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர்கள் தமிழ் மக்களுக்கு எதிராகப் புரிந்த கொடிய குற்றங்களையும் வரதராசப் பெருமாளின் நிர்வாகம் புரிந்த தவறான செயல்களையும் விரிவாக பாலசிங்கம் எடுத்துக்கூறினார். மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டிருக்கிற அவருடன் இணைந்து செயல்படுவதை மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். புதிய தேர்தல் நடத்தி அந்த தேர்தலின் மூலம் அதிகாரத்திற்கு வர புலிகள் தயாராக இருப்பதாக பாலசிங்கம் கூறினார். ஆனால் அதை கருணாநிதி ஏற்கவில்லை. அவர் டில்லி சென்று பிரதமர் வி.பி.சிங் அவர்களைச் சந்தித்துப் பேசி புலிகள் தனது யோசனையை ஏற்க மறுத்துவிட்டதாகக் கூறினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில் "இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமது பணி முடிவடைந்துவிட்டதாகவும் இனி இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொறுப்பு மத்திய அரசிடம்தான் உள்ளது'' என்றும் கூறி இப்பிரச்சினையை அடியோடு கைகழுவியவர் கருணாநிதி. - (27-6-12 தினமணி நாளிதழில் பழ. நெடுமாறன் எழுதிய கட்டுரையிலிருந்து) |