1956, நவம்பர் 1 அன்று, தமிழ்நாடு மொழிவழி மாநிலமாக அமைந் ததை முன்னிட்டு 1-11-2016 அன்று, திருவாரூர் மாவட்ட தமிழர் தேசிய முன்னணியின் ஏற்பாட்டில், மன்னார்குடியில் தமிழன்னை ஊர்வலமும், தமிழகத் திருநாள் பொதுக் கூட்டமும் சீரோடும், சிறப்போடும் நடைபெற்றன.
அன்று மாலை 5.30 மணிக்கு, மன்னார்குடி தேரடியில் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் அவர்கள் தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்து, ஊர்வலத்தைத் துவக்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசியபோது,"கர்நாடகத்தைப் போல, கேரளத்தைப் போல தமிழ்நாட்டிலும் தமிழ்நாடு தனி மாநிலமாக அமைந்த நவம்பர் 1 நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும். தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் இந்நாளில் விழா எடுக்கவேண்டும்' என்று வேண்டிக்கொண்டார்.
தஞ்சை நாத சங்கம் பறை இசைக் குழுவின் இசை முழங்க, தமிழர் தேசிய முன்னணி கட்சிக் கொடி பறக்கும் தானிகள் பின் தொடர, தமிழர் தேசிய முன்னணியின் திருவாரூர் மாவட்டத் தலைவர் மருத்துவர் பாரதிச் செல்வன் தமிழன்னை ஊர்வலத்தின் நோக்கத்தை முழங்கி வர, திருவள்ளுவர், பாரதியார், ஒளவையார், தமிழன்னை வேடமணிந்த குழந்தைகளோடு, தமிழன்னை சிலை தாங்கிய ஊர்தியுடன், தலைவர் பழ.நெடுமாறன் அவர்களும், தமிழர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர்கள் அயனாபுரம் முருகேசன்,புதுச்சேரி தமிழ்மணி, புதுக்கோட்டை சத்தியமூர்த்தி, காரைக்குடி மாறன், சதா முத்துகிருஷ்ணன், தஞ்சை மாவட்டத் தலைவர் பொன் வைத்தியநாதன், திருவாரூர் மாவட்டச் செயலாளர் கலைச்செல்வம், மாநில செயற்குழு உறுப்பினர் கென்னடி, மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் முரளீதரன் உள்ளிட்ட கட்சி பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும், பொதுமக்களும் ஊர்வலத்தில் நடந்து வந்தனர்.
ஊர்வலம் பயணித்த மன்னார்குடி கடை வீதியின் இரு மருங்கிலும் திரண்டு, தமிழன்னை ஊர்வலத்தைக் கண்டு மகிழ்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு இனிப்புக் கடலைக் கட்டியும், தமிழகத் திருநாள் குறித்து விளக்கும் துண்டறிக்கையும் வழங்கப்பட்டது. பொதுமக்கள் மட்டற்ற மகிழ்ச்சியுடன், தமிழன்னையை வணங்கினர். ஊர்வல முழக்கம் கேட்டு, துண்டறிக்கையைப் படித்து தமிழுணர்வு பெற்றனர். ஊர்வலம் மன்னார்குடி பந்தலடியில் இரவு 6.30 மணிக்கு நிறைவடைந்தது.
மன்னார்குடி பந்தலடியில் அழகுற அமைக்கப்பட்டிருந்த மேடையில், தமிழக எல்லை மீட்புப் போராளிகளின் உருவப் படத்திற்கு மலர் தூவி, வீரவணக்கம் செலுத்தி "தமிழகத் திருநாள்- 60 பொதுக்கூட்டம்' இரவு 6.45 மணிக்கு துவங்கியது. தமிழர் தேசிய முன்னணியின் திருவாரூர் மாவட்டத் துணைத் தலைவர் அரிகரன் தலைமை தாங்க, மன்னார்குடி நகரத் தலைவர் மகேந்திரன், மன்னார்குடி நகரச் செயலர் கணேசன், கோட்டூர் ஒன்றிய செயலர் நெம்மேலி சோழன் ஆகியோர் முன்னிலை வகிக்க, கோட்டூர் ஒன்றியத் தலைவர் வள்ளூர் கண்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தமிழர் தேசிய முன்னணியின் திருவாரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சபேசன், திருவாரூர் மாவட்டத் தலைவர் மருத்துவர் பாரதிச்செல்வன், மாநில பொதுச் செயலாளர்கள் அயனாபுரம் முருகேசன், புதுச்சேரி தமிழ்மணி ஆகியோர் உரை நிகழ்த்தினர். தலைவர் பழ நெடுமாறன் நிறைவுரையாற்றினார். திருவாரூர் மாவட்டத் துணைத்தலைவர் தேவேந்திரன் நன்றியுரையாற்ற பொதுக்கூட்டம் இரவு 9 மணிக்கு நிறைவடைந்தது.
தமிழ்நாடு இழந்ததை மீட்கவும், இருப்பதைக் காக்கவும் தமிழர்கள் ஒன்றிணைந்து போராடவேண்டும் என்ற கருத்தை மன்னார்குடியைச் சேர்ந்த பொது மக்களிடம் கொண்டு சேர்த்திடவும், இந்த இலக்குகளை அடைய, தமிழர் தேசிய முன்னணியினராகிய நாம் அர்ப்பணிப்பு உணர்வுடன் போராட, உறுதி ஏற்றிடவும் தமிழன்னை ஊர்வலமும், தமிழகத் திருநாள்- 60 பொதுக் கூட்டமும் பயன்பட்டது என்றால் அது மிகையாகாது. இவ்விழாவில் தமிழர் தேசிய முன்னணி நிதிக்காக மாவட்டத் தலைவர் மரு. பாரதிச்செல்வன் ரூ.5000/- பழ.நெடுமாறனிடம் வழங்கினார். |