பண ஒழிப்பால் பதவிகளைப் பறிகொடுத்த தலைவர்கள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 07 டிசம்பர் 2016 13:54

உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை ஒழித்ததால், ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியே ரசிய கூட்டமைப்பு, சிதறு தேங்காய் போல் 15க்கும் மேற்பட்ட துண்டுகளாக உடைந்துள்ளன. இதேபோல் வேறு பல நாடுகள் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தன.

பிரதமர் மோடியின் 500, 1000 ரூபாய் ஒழிப்பால், சாமானிய பொதுமக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் அடிப்படைத் தேவைக்காக தெருத் தெருவாக அலைந்து கொண்டுள்ளனர். மோடியைப் போலவே மேலும் பல நாடுகளிலும் கூட பண ஒழிப்பு நடந்தது.

ஆனால் எதுவுமே எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. அந்த நாடுகளில் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியவில்லை. வறுமையை விரட்ட முடியவில்லை. மாறாக வறுமை அதிகரித்து உள்நாட்டுக் கலவரத்திற்கே அவை வித்திட்டன. அந்த அரசுகளின் முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. கருப்புப் பணத்தை முடக்க அல்லது அழிக்கப் போய் தற்போது பெரும்பான்மையான மக்களின் தவிப்பை வேடிக்கை பார்த்து வருகிறது மத்திய அரசு. மத்திய அரசின் திட்டமும், நோக்கமும் மிக நல்ல விஷயம்தான் என்றாலும் கூட முறையான திட்டமிடல் இல்லை.

வங்கிகளின் மிகப்பெரிய மோசமான திட்டமிடலே இந்தக் குழப்பங்களுக்கு எல்லாம் காரணம். இதையெல்லாம் முன்கூட்டியே சரி செய்திருக்க வேண்டியது ரிசர்வ் வங்கியின் கடமை. அதுவும் கூட வாய் பொத்தி மவுனித்துக் கிடக்கிறது. இதற்கு முன்பு பல நாடுகளிலும் இதுபோல அதிரடியாக பெரிய மதிப்பிலான பணத்தை ஒழித்துப் பார்த்தனர். அவையெல்லாம் ச்சீ., ச்சீ., இந்தப் பழம் புளிக்கும் என்பதுபோல்தான் முடிந்துள்ளன.

1991-ஆம் ஆண்டு. சோவியத் யூனியன் வெடித்துச் சிதறக் காத்திருந்த நேரம். ஒன்றுபட்ட நாடாக இருக்க வேண்டுமா- பிரிந்து செல்வதா- என்ற மக்கள் கருத்துக்களை அறிவதற்கான வாக்குப் பதிவுகளும் நடைபெற்றன. அப்போது அதிபராக இருந்தவர் கார்பசேவ். அந்த ஆண்டு ஜனவரி மாதம் உயரிய மதிப்பிலான ரூபிகளை திரும்பப் பெறுவதாக திடீரென்று அறிவித்தார் கார்பசேவ். கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையே இந்த அதிரடி அறிவிப்பு. 50 மற்றும் 100 ரூபிள் நோட்டுகள் ஒழிக்கப்பட்டன.

ரூபிள் ஒழிப்பால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. பணவீக்கம் சற்றும் குறையவில்லை. மாறாக மக்கள்தான் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மக்களிடையே பெரும் கொந்தளிப்பும், போராட்டங்களும் வெடித்தன. பொருளாதாரம் மேலும் சீர்குலைந்தது. இது கார்பசேவின் பதவியை குறி வைத்த புரட்சிக்கும் வித்திட்டது. அடுத்த ஆண்டே சோவியத் யூனியன் சுக்கு நூறாக சிதறியது. வல்லரசு நாடு என்ற அந்தஸ்தையும் இழந்தது.

2010ஆம் ஆண்டு வட கொரியாவின் மறைந்த சர்வாதிகாரி கிம் ஜோங் 2 இதே போன்ற கரன்சி சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தினார். ஆனால் அது பெரும் விபரீதத்திற்கே வித்திட்டது. நாடே பஞ்சத்தில் மூழ்கியது. மக்கள் பசி பட்டினியால் வாடினர். உணவுக்கு வழியின்றி பலர் செத்து மடிந்தனர். விலைவாசிகள் வாங்க முடியாத அளவு உயர்ந்தது. இதற்காக மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார். இந்தச் சீர்திருத்தத்திற்கு யோசனை கூறிய நிதித்துறை அமைச்சரை தலையைத் துண்டித்துக் கொலை செய்தது உலக நாடுகளையே அதிர்ச்சி அடைய வைத்தது.

ஜயர் நாடு 1990களில் பெரும் பொருளாதார சீர்குலைவுகளைச் சந்தித்தது. இதையடுத்து சர்வாதிகாரி மொபுடு செசே சீக்கோ கரன்சிகளில் சீர்திருத்தங்களை அறிவித்தார். 1993ஆம் ஆண்டு சில கரன்சிகளை அவர் புழக்கத்திலிருந்து திரும்பப் பெற உத்தரவிட்டார். இதனால் அந்நாடு பெரும் பணவீக்கத்தை சந்தித்தது. டாலருக்கு எதிரான ஜயர் நாட்டு கரன்சியின் மதிப்பு அதலபாதாளத்தை நோக்கிச் சென்றது. உள்நாட்டுப் போர் வெடித்தது. 1997ல் மொபுடு ஆட்சியிலிருந்து தூக்கி வீசப்பட்டார்.

நைஜீரியாவில் 1984ஆம் அண்டு இராணுவ சர்வாதிகாரி முகம்மது புகாரி ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை எடுத்தார். புதிய ரூபாய் நோட்டுக்களை அவர் வெளியிட்டார். புதிய நிறத்துடன் வந்த அந்த ரூபாய் நோட்டுக்களால் எந்தப் பயனும் கிடைக்கவில்லை. நாட்டின் பொருளாதாரத்தையே அது சீர்குலைத்துவிட்டது. பின்னர் வந்த புரட்சியில் புகாரி வெளியேற்றப்பட்டார். மியான்மர் 1987ஆம் ஆண்டு மியான் இராணுவ ஆட்சியாளர்கள் புழக்கத்தில் இருந்த பணத்தில் 80 சதவீத மதிப்பை குறைத்து அறிவித்தனர். கருப்புப் பண ஒழிப்பை குறிவைத்தே இந்த நடவடிக்கை. ஆனால் அது அப்பாவி மக்களைத்தான் கடுமையாக பாதித்தது. போராட்டங்கள் வெடித்தன. இதில் ஆயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டனர். ஆப்பிரிக்காவின் கானா நாட்டில் 1982ஆம் ஆண்டு 50 செடி கரன்சி ஒழிக்கப்பட்டது. இதனால் வங்கிகள் சீர்குலைந்தன. இதனால் வங்கிகள் மீது இருந்த நம்பிக்கை தகர்ந்தது. நடே ஸ்தம்பித்தது. கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பல மைல் தூரம் நடந்து வந்து வங்கிகளில் பணத்தை மாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். குறிப்பிட்ட காலத்திற்குள் மாற்ற முடியாமல் பல கோடிப் பணம் வீணாக மூட்டை மூட்டையாக வீசப்பட்டது.

திட்டமிடல் இல்லாவிட்டால் தோல்விதான். சரியான திட்டமிடல் இல்லாததால் வந்த வினைதான் இந்த நாடுகளில் ஏற்பட்ட தோல்விக்குக் காரணம். இந்தியாவிலும் கூட தற்போது முறையான திட்டமிடல் இல்லாமல்தான் பெரும் குழப்பமாக உள்ளது.

500, 1000 ரூபாய் நோட்டு ஒழிப்பு என்ற மோடியின் நடவடிக்கை எந்த அளவுக்கு பயன் தரும் என்று தெரியவில்லை. மக்களுக்கு நல்லது செய்யத்தான் இந்த நடவடிக்கை என்று அரசு சொல்லுமேயோனால் இந்தத் திட்டத்தை தோல்வி என்று இப்போதே கூறிவிடலாம். காரணம் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது மக்கள்தான். கருப்புப் பண முதலைகளோ அல்லது பெரும் பணக்காரர்களோ அல்ல. ஏராளமான பணத்தை மூட்டை கட்டி வைத்திருப்பவர்கள் வங்கி வாசலில் கால் கடுக்க நிற்கவில்லை. ஊழல் செய்து பணத்தை புதைத்து வைத்தவர்கள் வங்கிப் பக்கம் தலைகாட்டவில்லை. கார்ப்பரேட் முதலாளிகளோ, அரசாங்கத்தில் ஊழல் செய்த பணத்தை பதுக்கி வைத்தவர்களோ வங்கிப் பக்கம் செல்லவே இல்லை. மாறாக அப்பாவி பொது மக்கள்தான் அல்லாடுகின்றனர். கள்ள நோட்டு ஒழிப்பு நடவடிக்கையை முதலில் பாராட்டிய பலர். இப்போது அரசுக்கு எதிரான கேள்விகளை அடுக்கத் தொடங்கியுள்ளனர். வங்கிகளில் பணம் இல்லாமல் வாடிக்கையாளர்கள் வெளியேற்றப்படுகின்றனர். ஏ.டி.எம். முடக்கத்தால் நடுத்தர வர்க்கத்தினர் வீதி வீதியாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இவை எல்லாம் மோடி மீது மக்கள் வைத்திருந்த அபிமானத்தை முடக்கி விட்டன. பத்திரிகைகளும் ஊடகங்களும் மக்கள் படும் அவதிகளை முக்கிய செய்தியாக வெளியிட்டு வருகின்றன. ஒருவாரத்தில் நிலைமை சீரடையும் என்று முதலில் கூறப்பட்டது. பின்னர் மேலும் ஒருவார காலம் அவகாசம் கோரப்பட்டது. இப்போது, 2 மாத காலம் என்கின்றனர். விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்கள் கோபம் மாற்றத்தை ஏற்படுத்தும். அது என்ன மாற்றம் என்பதுதான் கேள்விக் குறி.

நன்றி : "தினச்செய்தி' நவ. 18, 2016

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.