2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி அன்று தலைமையமைச்சர் மோடி நாட்டு மக்கள் சற்றும் எதிர்பார்க்காத வகையில் அதிர்ச்சியை அளித்தார். அன்றிரவு 12 மணிக்கு மேல் ரூ.500, ரூ1000 நோட்டுக்கள் செல்லாது என்று அவரது அறிவிப்பு நாடெங்கிலுமுள்ள மக்களை பதற்றத்திற்குள்ளாக்கியது.
மோடியின் இந்த அறிவிப்புக்கு இரண்டு காரணங்கள் கூறப்பட்டன.
1. கறுப்புப் பணத்தை அடியோடு ஒழிப்பது.
2. பயங்கரவாதிகளிடம் உள்ள கள்ள நோட்டுக்களை ஒழிப்பது.
முதலாவது காரணமான கறுப்புப் பணத்தை அடியோடு ஒழிப்பது நல்ல நோக்கமே. இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் சீர் நிலைக்குக் கொண்டுவரப்படும். ஆனால், இந்தப் பணம் யாரிடம் உள்ளது- பெரும் பண முதலைகள், அரசியல்வாதிகள், இலஞ்ச அதிகாரிகள், இயற்கை வளங்களைச் சுரண்டுபவர்கள், வரி ஏய்ப்பவர்கள், ஹவாலா, கடத்தல் போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் ஆகியோரிடம் கறுப்புப் பணம் மலைபோல் குவிந்துகிடக்கிறது. இந்தப் பணத்தில் பெரும் பகுதியை அவர்கள் பல வகையில் பதுக்கி வைத்திருக்கிறார்கள். சிறு பகுதியை மட்டுமே ரூபாய் நோட்டுகளாக வைத்துள்ளனர்.
வெளிநாட்டு வங்கிகளிலும், தங்கக் கட்டிகளாகவும், வணிக மனைகளாகவும், பினாமிகள் பெயரில் சொத்துக்களாகவும் இன்னும் பல மறைமுகமான வழிகளிலும் குவித்து வைத்திருக்கிறார்கள். பதுக்கப்பட்ட எல்லாவற்றையும் அடையாளம் கண்டு பறிமுதல் செய்வதோ, அல்லது அவற்றின் மீது வரிவிதிப்பதோ எளிதானதல்ல.
மற்றும் சிலர் இந்த அறிவிப்பு வந்தவுடன் தங்களிடம் வேலை பார்ப்பவர்கள் மற்றும் தங்களின் நம்பிக்கைக்குரியவர்கள் ஆகியோர் பெயர்களில் உள்ள வங்கி கணக்குகளில் தொகையை அவசரம் அவசரமாக செலுத்தியிருக்கிறார்கள். தனியார் பல்கலைக் கழகம் ஒன்று தனது அலுவலர்களின் பெயர்களில் வங்கிக் கணக்கில் செலுத்தியிருந்த 8 கோடி ரூபாய்களுக்கு மேலான பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபோல் மேலும் பலர் பிடிபடக்கூடும்.
அரசின் இந்த அறிவிப்பு மற்றொரு உண்மையை வெளியாக்கியிருக்கிறது. ஏற்கெனவே கள்ளப்பணத்தை கண்டுபிடித்து ஒழிப்பதற்காக கீழ்க்கண்ட சட்டங்கள் உள்ளன.
1. 1998ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ஊழல் ஒழிப்புச் சட்டம். 2. 1998ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பினாமி பணப்பரிமாற்றத் தடைச் சட்டம். 3. 2005ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம். 4. கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்குவதற்கான தடைச் சட்டம்.
இச்சட்டங்களை செயல்படுத்துவதற்காக தனி இயக்ககம் உள்ளது. ஆனால், மேற்கண்ட சட்டங்களை மீறி தனி இயக்ககத்தின் கண்காணிப்பில் மண்ணைத் தூவி இந்தியாவில் புழங்கும் கறுப்புப் பணத்தின் அளவு மிகுதியாகும். எனவேதான் இந்த நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மேலே கண்ட சட்டங்கள் சரியான முறையில் செயல்படுத்தப்பட்டிருந்தால் இந்த நடவடிக்கைக்கு அவசியம் இருக்காது.
ஆனால் நடுத்தர மக்கள், சிறு வணிகர்கள், விவசாயிகள், இல்லத்தரசிகள் ஆகியோர் நவம்பர் 9ஆம் தேதியிலிருந்து 21ஆம் தேதிவரை நாடு முழுவதும் வங்கிகளில் 33 ஆயிரத்து 6 கோடி ரூபாய் பெறுமான நோட்டுகளை மாற்றியிருக்கிறார்கள். இதே காலக்கட்டத்தில் ரூபாய் 5,11,565 கோடி ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து 1,03,316 கோடி ரூபாய் மட்டும் மீண்டும் வங்கிகளிலிருந்து எடுக்கப்பட்டு மக்களிடம் போயிருக்கிறது. எஞ்சிய 4,08,249 கோடி ரூபாய் வங்கிகளில் அப்படியே உள்ளது.
மொத்தமுள்ள கள்ளப் பணத்தில் 3 முதல் 5 சதவீதம் மட்டுமே கையிருப்பு பணமாக உள்ளது. மற்றவை வெவ்வேறு வடிவங்களில் பதுக்கப்பட்டுள்ளன. மோடியின் இந்த நடவடிக்கையின் விளைவாக கறுப்புப் பணத்தின் பெரும்பகுதியை கண்டுபிடிக்கவோ ஒழிக்கவோ முடியாது என பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
சாதாரண மக்களில் பெரும்பாலோர் சொந்த வங்கிக் கணக்கு இல்லாதவர்கள். அவர்களிடம் உள்ள சொற்பப் பணத்தை மாற்றுவதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் கால அவகாசம் மிகக்குறைவு. அதிலும் மாறி மாறி செய்த அறிவிப்புகளால் மக்களின் துயரம் அதிகமாயிற்று. திட்டமிட்டு அரசு இந்நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்பதும் அம்பலமாயிற்று.
எது எப்படியிருந்தபோதிலும் இப்போது வங்கிகளுக்கு வந்திருக்கும் பணத்தில் பெரும்பகுதி சாதாரண மக்கள் வீடுகளில் சேமித்து வைத்திருந்த பணம்தான். இது மீண்டும் சேமிப்பாகவே அந்த வீடுகளுக்குத் திரும்பினால்தான் பொருளாதார வளர்ச்சி சீராக இருக்கும். இதற்கு அரசு சேமிப்புப் பத்திரங்களை வெளியிட்டு மக்களுக்கு அளிக்கலாம். இல்லையென்றால். மக்கள் செலுத்தியிருக்கும் இந்தப் பணம் மீண்டும் கடன் என்ற பெயரால் பெரு முதலாளிகள் மற்றும் நிறுவனங்களிடம் கொடுக்கப்பட்டு விடும். அவ்வாறு நடைபெறுவது கறுப்புப் பண ஒழிப்பு, ஊழல் பண ஒழிப்பு நடவடிக்கைகள் பயனளிக்காமல் போவதோடு மேலும் பெருகவும் கூடும். |