இந்திய ஒன்றியம் கலகலக்கும் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 07 டிசம்பர் 2016 14:05

"என்னுடைய மாநிலத்திலிருந்து ஒரு சொட்டு நீர் வெளியே போவதைத் தடுப்பதற்காக என்னுடைய இரத்தத்தின் ஒவ்வொரு சொட்டினையும் சிந்துவதற்கு நான் தயாராக இருக்கிறேன்'' என பஞ்சாப் சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் பாதல் சூளுரைத்திருக்கிறார். அகாலிதளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அங்கு நடைபெறுகிறது.

மேலும் சட்டமன்றத்தில் கீழ்க்கண்ட தீர்மானத்தை முதல்வர் பாதல் முன்மொழிந்து ஒருமனதாக நிறைவேறச் செய்துள்ளார்.

"சட்லஜ்-யமுனை கால்வாய் வெட்டப்படுவதற்கு நிலம் கொடுக்க முடியாது. இத்திட்டத்தை நிறைவேற்ற முற்படும் எந்த அமைப்பையும் அனுமதிக்க முடியாது. அத்தகைய அமைப்பிற்கு எவ்வித ஒத்துழைப்பும் கொடுக்க முடியாது.''

1966ஆம் ஆண்டிலிருந்து அரியானா, இராசஸ்தான், டில்லி ஆகிய மாநிலங்கள் பஞ்சாப் அளித்த தண்ணீருக்குரிய விலையைக் கொடுக்க வேண்டும். அதைப் பெற்றுத் தருவதற்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்ற தீர்மானமும் பஞ்சாப் சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப் பட்டிருக்கிறது.

1966ஆம் ஆண்டிலிருந்தே பஞ்சாப் அளித்த தண்ணீரைப் பெற்றதற்காக இராசஸ்தான் மாநிலம் 80 ஆயிரம் கோடி செலுத்த வேண்டும் என அகாலிதள சட்டமன்ற உறுப்பினரான நிர்மல்சிங் கூறினார். சுயேச்சை உறுப்பினரான சிங்ரஞ்சித்சிங் என்பவர் இத்தொகையை மேலும் உயர்த்தி 15.34 இலட்சம் கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

சட்லஜ்-யமுனை கால்வாய்த் திட்டத்திற்காக கையகப்படுத்திய நிலத்தை அதன் உரிமையாளர்களுக்கு இலவசமாகவே திருப்பி அளிப்பது என பஞ்சாப் அமைச்சரவை செய்த முடிவு ஆழமான உள்நோக்கம் கொண்டதாகும். அந்த நிலத்தைத் திரும்பப் பெற்றவர்கள் அதில் கட்டிடங்களோ மற்ற கட்டுமானங்களையோ எழுப்பிவிட்டால் பிறகு நிரந்தரமாக இந்தக் கால்வாயை அமைக்க முடியாது போகும்.

பக்கத்து மாநிலங்களைப் பகை நாடுகளாகக் கருதி மேற்கண்டவாறு முதல்வரும், அனைத்துக்கட்சியினரும் முழங்கியிருக்கிறார்கள். அந்த அளவிற்கு இவர்கள் ஆத்திரப்படுவது ஏன்-

சிந்து நதியின் கிளை நதிகளான ரவி, பியாசு, சட்லஜ் ஆகியவை ஒன்றுபட்ட பஞ்சாப் மாநிலத்தில் ஓடி அதை வளங்கொழிக்கச் செய்தன. இந்தியா பிரிக்கப்பட்ட பிறகு இந்தியாவிற்கு ஒதுக்கப்பட்ட மேற்கண்ட நதிகளின் நீரை பஞ்சாப், இராசஸ்தான், பெப்சு, ஜம்மு-காசுமீர் ஆகிய மாநிலங்களுக்கிடையே எவ்வாறு பகிர்ந்துகொள்வது என்பதற்கு 1960ஆம் ஆண்டு ஒரு உடன்பாடு செய்துகொள்ளப்பட்டது. 1966ஆம் ஆண்டில் மொழி வழி மாநிலப் பிரிவினைக்குப் பிறகு பெப்சு சமசுதானம் பஞ்சாபுடன் இணைக்கப்பட்டது. அதன் பிறகு அம்மாநிலம் பஞ்சாப், அரியானா என இரு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டன. அரியானா மேற்கண்ட நதிகளின் நீரில் உரிமை கொண்டாடியபோது. அதை ஏற்பதற்கு பஞ்சாப் மறுத்துவிட்டது.

1981ஆம் ஆண்டில் தலைமை அமைச்சர் இந்திரா காந்தி அவர்கள் தலைமையில் பஞ்சாப், அரியானா, இராசஸ்தான் ஆகிய மாநில முதலமைச்சர்கள் கூடி இச்சிக்கல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கிணங்க இராசஸ்தான் மாநிலத்திற்கு 8.5 மில்லியன் கன அடி நீரும், பஞ்சாப் மாநிலத்திற்கு 4.22 மி.க.அடி நீரும், அரியானாவிற்கு 3.5 மி.க.அடி நீரும் அளிப்பதென உடன்பாடு செய்துகொள்ளப்பட்டது. மேலும் சட்லஜ்-யமுனை கால்வாய் திட்டத்தை இரண்டாண்டுகளுக்குள் பஞ்சாப் முடிக்க வேண்டும் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

ஆனால், 1985ஆம் ஆண்டில் இந்திரா காந்தியின் மறைவிற்குப் பிறகு பஞ்சாப் சட்டமன்றத்தில் 1981ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட உடன்பாடு செல்லாது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் விளைவாக இச்சிக்கல் நடுவர் மன்றத்தின் தீர்ப்புக்கு விடப்பட்டது.

ரவி-பியாசு நதிகளின் சமவெளிப் பகுதிக்கு வெளியே இருப்பதால் அரியானா மாநிலத்திற்கு தண்ணீர் அளிக்க முடியாது என்று பஞ்சாப் கூறியதை ஏற்க மறுத்த நடுவர் மன்றம். "நதிகள் ஓடும் பாதைகளும் மாநிலங்களின் எல்லைகளும் மாறலாம். அத்தகைய மாற்றம் 1966 நவம்பர் 1ஆம் தேதி ஏற்பட்டது. அதற்கு முன்னால் பஞ்சாப் மாநிலத்தின் ஒரு பகுதியாக அரியானா இருந்தது. எனவே அரியானா மாநிலத்திற்கு இந்நதிகளின் நீரைப் பெறுவதற்கு உரிமை உண்டு'' என்று கூறியது.

இதற்கிணங்க பஞ்சாப் - அரியானா அரசுகள் இணைந்து ரவி-பியாசு இணைப்புத் திட்டத்திற்காக 214 கி.மீ. நீளமுள்ள கால்வாயை அமைக்க வேண்டும் என மத்திய அரசு ஆணை பிறப்பித்தது.

அதன்படி அரியானாவின் எல்லைக்குட்பட்ட பகுதியில் 93 கி.மீ. நீளமுள்ள கால்வாய் கட்டுமானப் பணிகள் நிறைவேற்றப்பட்டன.

ஆனால், பஞ்சாப் அரசு தன் பகுதியில் 121 கி.மீ. நீளமுள்ள கால்வாயை வெட்டுவதற்கான நிலத்தை உரிமையாளர்களிடமிருந்து எடுத்துக்கொண்டபோதிலும், கால்வாய் வெட்டும் வேலையைத் தொடங்கவில்லை. இத்திட்டத்தால் தனக்கு உரிமையான நீரின் பங்கு குறையும் என கருதிய பஞ்சாப் அரசு இந்த உடன்பாட்டை இரத்துசெய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இதற்கு எதிர் மனுவை அரியானா தாக்கல் செய்தது.

2003 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் "சட்லஜ்-யமுனா கால்வாயை முழுவதுமாகக் கட்டி முடிக்க வேண்டும்'' என பஞ்சாப் அரசிற்கு உத்தரவிட்டது.

2004ஆம் ஆண்டில் இத்தீர்ப்பை இரத்து செய்வதற்கான சட்டத்தை மாநில சட்டப் பேரவையில் பஞ்சாப் காங்கிரசு அரசு கொண்டுவந்து நிறைவேற்றியது. இச்சட்டத்தை எதிர்த்து அரியானா அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் 12 ஆண்டு காலம் கழித்து 10-11-16இல் பஞ்சாப் அரசு கொண்டுவந்த சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவே இச்சட்டத்தை இரத்து செய்வதாக உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.

இதற்கு எதிராகத்தான் பஞ்சாப் பொங்கி எழுந்திருக்கிறது. முதலமைச்சரும் சட்டமன்ற உறுப்பினர்களும், உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராகக் கொக்கரித்துள்ளனர்.

தேசிய ஒருமைப்பாட்டை காப்பதையே தனது இலட்சியமாகக் கொண்டுள்ளதாகக் கூறிக்கொள்ளும் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த 42 சட்டமன்ற உறுப்பினர்கள் அண்டை மாநிலங்களுக்கு நீர் அளிப்பதைக் கண்டித்து தங்கள் பதவிகளிலிருந்து விலகியுள்ளனர். முன்னாள் முதலமைச்சரும், மக்களவை காங்கிரசு கட்சித் துணைத் தலைவருமான அமரீந்தர் சிங் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளனர். பஞ்சாப் மக்களின் நலனைக் காக்க பெரும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

பஞ்சாபில் பா.ஜ.க.-அகாலிதள கூட்டணி அரசும், அரியானாவில் பா.ஜ.க. அரசும் உள்ளன. இப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமென்று உண்மையாகவே பிரதமர் மோடி நினைத்தால் தீர்க்க முடியும். ஆனால், அவர் அமைதி காக்கிறாரா- அல்லது அதற்கான வலிமை அவரிடம் இல்லையா-

மறைந்த தலைமையமைச்சர் இந்திரா காந்தி முன்னிலையில் இரு மாநில காங்கிரசு அரசுகளும் 1981ஆம் ஆண்டு செய்து கொண்ட உடன்பாட்டை இப்போதைய பஞ்சாப் மாநில காங்கிரசுக்காரர்கள் எதிர்த்துப் பதவி விலகும் கோமாளித்தனம் நடக்கிறது.

தமிழகம் - கேரளம் ஆகிய மாநிலங்களுக்கிடையே முல்லைப் பெரியாறு அணைப்பிரச்சினை எழுந்தபோது உச்சநீதிமன்றம் 28-7-2006 அன்று முல்லைப் பெரியாறு அணையில் நீர் தேக்கப்படும் அளவை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

ஆனால் இந்த ஆணையை ஏற்க மறுத்த கேரள அரசு இத்தீர்ப்பிற்கு எதிராக அவசரச் சட்டம் ஒன்றை மாநில சட்டமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றியது. இச்சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழகம் முறையிட்டபோது இச்சட்டம் செல்லத்தக்கது அல்ல என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்தது.

காவிரி நடுவர்மன்றம் 1991இல் இடைக்கால தீர்ப்பு வழங்கியபோது, அத்தீர்ப்பை செல்லாததாக்கும் வகையில் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்து கர்நாடக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. ஆனால், அந்தச் சட்டம் செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதைப்போல தமிழகம்-கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கிடையே காவிரி பிரச்சினை குறித்து நீண்டகாலமாக நடைபெற்ற வழக்கில் 20-09-2016 அன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. இந்திய அட்டர்னி-ஜெனரல் முகுல் ரோத்தகி அக்டோபர் 4 அல்லது அதற்குள்ளாக மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார்.

"சிவில், நீதித்துறையில் இருப்பவர்கள் உச்சநீதிமன்றத்திற்கு உதவியாகச் செயல்படவேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து சிவில், நீதித்துறை இருப்பவர்கள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி செயல்படவேண்டும் என்பதே இதன் பொருளாகும்.

இந்த விதியைப் படிக்கும்போதே இந்தியாவில் உள்ள அனைவரும் உச்சநீதிமன்றத்தின் படி செயல்படவேண்டும் என்பது பளிங்குபோல தெளிவாகும்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்கு அனைவரும் கீழ்ப்படிய கட்டுப்பட்டவர்கள் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. தேவைப்பட்டால் உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை அமுல்படுத்த நீதிமன்றத்தின் உதவியைப் பெறலாம். ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசு மீறியுள்ளது. மேலும் சட்டத்தின் மாண்பை குலைக்கும் சூழ்நிலையை கர்நாடக அரசு உருவாக்கியுள்ளது.

எங்கள் உத்தரவைக் கண்டிப்பாக பின்பற்றுவதற்கான நடைமுறைகளை நாங்கள் தொடங்கியிருக்கலாம். ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் களத்தில் உள்ள உண்மை நிலவரத்தை ஆய்வு செய்து எங்களுக்கு அறிக்கை அளிக்க உத்தரவிடுகிறோம்.

காவிரியிலிருந்து வினாடிக்கு 600 கனஅடி நீரைத் திறந்துவிட வேண்டும் என்ற எங்களின் முந்தைய உத்தரவை மீண்டும் வலியுறுத்தி 2016 அக்டோபர் 1 முதல் அக்டோபர் 6 வரை காவிரியில் நீரைத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுகிறோம்.

கர்நாடக சட்டசபையின் இரு அவைகளிலும் இதற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் இந்த உத்தரவைப் பிறப்பித்துக் கர்நாடக அரசுக்குக் கடைசி வாய்ப்பை வழங்குகிறோம்.

ஆனால் மறுநாளே இதற்கு எதிரான வகையில் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்ற பிறகே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியும் என்ற மனுவை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் அளித்தது.
"உச்சநீதிமன்ற உத்தரவைப் பின்பற்றக்கூடாது என்ற பிடிவாதப்போக்கில் கர்நாடக அரசு தொடர்ந்து செயல்பட்டால் இறுதியில் சட்டத்தின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை அனைவரும் அறிவர்.'' என உச்சநீதிமன்றம் கடுமையாக எச்சரித்த பிறகும் கர்நாடக அரசும், கட்சிகளும் சிறிதளவுகூட தங்கள் போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. தமிழகத்திற்குத் தண்ணீரைத் திறந்துவிடவும் இல்லை. மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு முன்வரவும் இல்லை.

கர்நாடக முதலமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டம் கூட்டப்பட்டது. இதில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் மட்டுமல்ல, மத்திய அமைச்சர்களான சதானந்த கவுடா, ரமேஷ் ஜிகஜின்கி ஆகியோரும் மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜüன கார்கே, முன்னாள் முதல்வர்கள் குமாரசாமி, எடியூரப்பா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

உச்சநீதிமன்றம் இதுவரை பிறப்பித்துள்ள உத்தரவுகளை மறுபரிசீலனை செய்யக்கோரிச் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்திற்கு மாநிலம் சார்பில் பிரதிநிதிகளை நியமனம் செய்யாமல் புறக்கணிக்க வேண்டும்.

கர்நாடக மாநிலச் சட்டப்பேரவை மற்றும் மேலவை ஆகியவற்றில் கீழ்க்காணும் தீர்மானம் ஒரேமனதாக நிறைவேற்றப்பட்டது.

கர்நாடகத்தில் காவிரியில் உள்ள அணைகளில் இருப்பில் இருக்கும் தண்ணீரை, குடிநீருக்கும் மாநிலத் தில் உள்ள விவசாயிகளின் விளை பயிர்களுக்கும் திறந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

சனநாயகத்தின் நான்கு தூண்களில் முக்கிய தூணான உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அனைத்துக்கட்சிக் கூட்டத்தையும், சட்டமன்ற பேரவை மற்றும் மேலவைக் கூட்டங்களையும் கூட்டிக் கேரளம், கர்நாடகம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் தீர்மானங்களை நிறைவேற்றியிருப்பது செல்லத்தக்கதல்ல என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் இம்மாநிலங்கள் அதைச் சிறிதளவுகூட மதிக்கவில்லை.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் கேரளமும், காவிரிப் பிரச்சினையில் கர்நாடகமும், சட்லஜ்-யமுனை கால்வாய்ப் பிரச்சினையில் பஞ்சாபும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை மதிக்கப் பிடிவாதமாக மறுத்து வருகின்றன. உச்சநீதிமன்றத்தின் ஆணைகளைப் பகிரங்கமாக மேற்கண்ட மாநிலங்களின் முதல்வர்கள் மீறியபோது அவர்களை உச்சநீதிமன்றம் பெயரளவில் கண்டித்ததோடு நின்றுவிட்டது. தனது தீர்ப்பை ஏற்க மறுத்த அவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்தப் போக்கு தொடர்கதையாகி இருக்காது.
அதைப்போல உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து நிறைவேற்றத் தவறிய மாநில முதல்வர்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அரசியல் காரணங்களுக்காக முன்னால் இருந்த காங்கிரசு அரசோ அல்லது இப்போதிருக்கும் பா.ஜ.க. அரசோ நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை.

தமிழகத்தில் உள்ள காவிரிப் பாசன விவசாயிகள், முல்லைப் பெரியாறு விவசாயிகள், அரியானா மற்றும் இராசஸ்தான் விவசாயிகள் ஆகியோர்களின் நலன்களைச் சிறிதளவுகூட எண்ணிப்பார்க்காமல் கேரளம், கர்நாடகம், பஞ்சாப் ஆகிய அரசுகள் தன்னலத்துடன் செயல்படுகின்றன. இம்மாநிலங்களில் உள்ள அரசுகள் அகில இந்திய கட்சிகளின் அரசுகளே என்றாலும், தேர்தல் ஆதாயத்திற்காகத் தங்கள் கட்சி அரசுகள் செய்யும் இந்த அழிச்சாட்டியத்தை கண்டிக்கவோ, தடுத்து நிறுத்தவோ அகில இந்திய கட்சிகளின் தலைவர்கள் யாரும் முன்வரவில்லை.

அரசியல் ஆதாயம் ஒன்றையே நோக்கமாகக் கொண்டவர்களும், கடுகு போல் சிறுத்த உள்ளம் கொண்டவர்களும், அகில இந்தியக் கட்சிகளின் தலைவர்களாக இருப்பதால் இத்தகைய வேண்டாத போக்குகள் வளருகின்றன.

எதிர்காலத்தில் மேலும் பல மாநிலங்கள் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளைத் துச்சமாக மதித்துத் தூக்கியெறியும் நிலை தொடராது என்பதற்கு எத்தகைய உத்தரவாதமும் இல்லை. ஏனென்றால் தீர்ப்புகளை மதியாத மாநிலங்கள் மீது எவ்வித நடவடிக்கையும் உச்சநீதிமன்றத்தாலோ, அல்லது மத்திய அரசாலோ இதுவரை எடுக்கப்படவில்லை. இந்நிலை தொடர்ந்தால் இந்திய ஒன்றியத்தின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகிவிடும்-

நன்றி : 23-11-2016

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.