சனிக்கிழமை, 17 டிசம்பர் 2016 12:42 |
27-11-16 ஞாயிறு அன்று மாவீரர் நாள் நிகழ்வினை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. காலை முதலே ஏராளமான தமிழுணர்வாளர்கள் முற்றத்திற்கு வருகைபுரிந்து தமது அஞ்சலியை செலுத்தினர்.
மாலை 6 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வுகள் தொடங்கின. தமிழன்னை சிலைக்கு முன் மாவீரர் நினைவுச் சுடரை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் ஐயா பழ. நெடுமாறன் அவர்களும், முனைவர் ம. நடராசன் அவர்களும் ஏற்றி வைத்தனர். மாவீரர் பாடல் ஒலிக்க, திரண்டிருந்த மக்கள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி தமது உணர்வுப்பூர்வமான நினைவேந்தலை மறைந்த மாவீரர்களுக்குச் செலுத்தினர்.
பின்னர் முத்தமிழ் மண்டபத்தில் நடந்த மேடை நிகழ்வில் தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டிருந்த மாவீரர் நாள் உரை ஒலிப்பரப்பப் பட்டது. முனைவர் ம. நடராசன் அவர்களும், ஐயா பழ. நெடுமாறன் அவர் களும் மாவீரர் நாள் உரை நிகழ்த்த நிகழ்வு நிறைவுக்கு வந்தது. பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். |