நம்முடைய போராட்ட முறையை நமது எதிரிகள் தீர்மானிக்கிறார்கள்! பழ. நெடுமாறன் நேர்காணல் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 17 டிசம்பர் 2016 12:43

விடுதலைப் புலிகளின் இயக்கத்தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? இருந்தார் என்றால் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இவ்வாறு கூறியிருக்கிறீர்கள்?

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அச்சாணியாக திகழ்பவர் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் என்பது உலகறிந்த உண்மையாகும். எனவேதான், அவரைத் தீர்த்துக்கட்டினால் தமிழீழ விடுதலைப் போரையே முடிவுக்குக் கொண்டுவந்துவிடலாம் என சிங்கள அரசு மட்டுமல்ல, இந்திய "ரா' உளவுத்துறையும் பல முயற்சிகளை செய்தன. பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக பலமுறை பொய்ச் செய்திகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. சிங்கள ஊடகங்கள் மட்டுமல்ல, இந்திய ஊடகங்களும், பத்திரிகைகளும் போட்டி போட்டுக்கொண்டு இத்தகைய செய்திகளை வெளியிட்டன.

1984ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி சிங்கள இராணுவம் பிரபாகரனைச் சுட்டுக் கொன்றுவிட்டதாக ஒரு செய்தி பரப்பப்பட்டது. இலங்கையில் மட்டுமல்ல உலகெங்கும் உள்ள தமிழர்களிடம் இச்செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திற்று. மறுநாள் 6--9--84 அன்று மதுரையில் உள்ள எங்கள் வீட்டிற்கு முன்னால் வந்துநின்ற ஜீப் ஒன்றிலிருந்து சிரித்த முகத்துடன் பிரபாகரன் இறங்கிவந்து எங்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

1989ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி இந்து ஆங்கில நாளேடு பின்வரும் செய்தியை பரபரப்புடன் வெளியிட்டது. "ஜூலை 23ஆம் தேதி அன்று மாத்தையா குழுவினரால் பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டார். வவுனியாவிலிருந்து வடகிழக்கே 20 கி.மீ. தொலைவில் உள்ள அனந்தபெரியகுளம் என்னும் கிராமத்தில் பிரபாகரன் உடல் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக ஏராளமான மக்கள் அவருக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருவதாக' இந்து நாளிதழ் செய்தி கூறியது.

2005ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி இலங்கை அரசுக்குச் சொந்தமான இலங்கை வானொலி ்சுனாமி பேரழிவில் சிக்கி பிரபாகரனும், உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானும் இறந்துவிட்டதாக' அறிவித்தது. இலங்கை கடற்படை துணைத் தளபதி அட்மிரல் தயா சந்தகிரி என்பவர் இச்செய்தியை வெளியிட்டதாக அரசு வானொலி அறிவித்தது. இச்செய்தியை இந்து ஆங்கில நாளேடு வெளியிட்டதோடு விடுதலைப்புலிகள் இயக்க தளபதிகளில் ஒருவரான கருணா இச்செய்தியை உறுதி செய்ததாகவும் கூறியது. ஆனால், அதே இந்து ஆங்கில நாளிதழ் 10 நாட்கள் கழித்து நார்வே நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் பீட்டர்சன் கிளிநொச்சியில் பிரபாகரனைச் சந்தித்துப் பேசிய படத்தையும் செய்தியையும் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
15--12--2007 அன்று சிங்கள விமானப் படை நடத்திய தாக்குதலில் பிரபாகரன் படுகாயமடைந்திருப்பதாகவும், அவர் இரகசியமாக ஓர் இடத்தில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், பிழைப்பது இயலாத ஒன்று என்றும் பரபரப்பான செய்தியை இலங்கைப் பாதுகாப்புத்துறை வெளியிட்டது. இந்திய பத்திரிகைகளிலும் இச்செய்தி வெளியாயின.

2009ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் பிரபாகரன் கொல்லப்பட்டு அவரது உடல் நந்திக் கடலில் மிதந்தது என்று கூறி அவரது உடலைத் தொலைக்காட்சி மூலம் திரும்பத்திரும்ப சிங்கள அரசு காட்டியது. மரபணு சோதனை மூலம் அது பிரபா கரனின் உடல்தான் என்பது உறுதி செய்யப்பட்டது என்றும் கூறியது. தளபதி கருணா அந்த உடல் பிரபாகரன் உடல்தான் என அடையாளம் காட்டியதாகவும் கூறப்பட்டது. இந்திய ஊடகங்களும், பத்திரிகைகளும் இச்செய்தியைப் பெரிதாக வெளியிட்டன.

மரபணு சோதனை செய்வதற்கு பிரபாகரனின் மிக நெருங்கிய உறவினர்களின் இரத்தம் எடுக்கப்பட்டு ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டிருக்கவேண்டும். பிரபாகரனின் பெற்றோர் அப்போது இலங்கையில்தான் இருந்தார்கள். அவர்களிடம் இரத்தம் எடுக்கப்படவே இல்லை. மேலும் மரபணு சோதனை செய்யும் வசதி இலங்கையிலேயே கிடையாது. சென்னைக்கு அனுப்பப்பட்டுதான் அச்சோதனை செய்யப்படவேண்டும் என புகழ்பெற்ற மரபணு சோதனை ஆய்வாளரான டாக்டர் சந்திரசேகரன் கூறிய செய்தி தமிழகப் பத்திரிகைகளில் வெளிவந்தது.
உண்மையில் பிரபாகரன் இறந்திருந்தால் சிங்கள அரசு என்ன செய்திருக்கும்? பிரபாகரனின் உடலை கொழும்புக்குக் கொண்டுவந்து பகிரங்கமாக வைத்து சர்வதேசப் பத்திரிகையாளர்களைப் பார்க்கச் செய்திருக்கும். ஆனால், அவ்வாறு செய்யாமல் மறுநாளே உடலை எரித்துச் சாம்பலைக் கடலில் வீசி விட்டோம் என அறிவித்துவிட்டது. இது ஏன்?

பிரபாகரன் உட்பட விடுதலைப்புலிகள் இயக்கத்தை அழித்துவிட்டோம் என தம்பட்டம் அடித்த இராசபக்சே ஏற்கெனவே சிங்கள இராணுவத்தில் உள்ள 3 இலட்சம் படைவீரர்களின் எண்ணிக்கையைக் கொஞ்சம்கொஞ்சமாகக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கவேண்டும். ஆனால், அதற்கு மாறாக மேலும் 1 இலட்சம் இராணுவ வீரர்களைத் திரட்டும் முயற்சியில் சிங்கள அரசு ஈடுபட்டிருப்பது ஏன்? சிங்கள இராணுவ வீரர்களுக்குத் தொடர்ந்து இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படுவது ஏன்?

இராஜிவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டுத் தேடப்பட்டு வருபவர்களின் பட்டியலில் பிரபாகரன் பெயர் இன்னமும் நீக்கப்படவில்லை. அவ்வாறு செய்ய வேண்டுமானால் சிங்கள அரசு இறப்புச் சான்றிதழ் அளிக்கவேண்டும். இதுவரை அந்த சான்றிதழ் அளிக்கப்படவில்லை. மேற்கண்ட கேள்விகளுக்கு சிங்கள அரசோ, இந்திய அரசோ இதுவரை பதில் கூறவில்லை. பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறார் என எனக்குக் கிடைத்த மிக நம்பகமான தகவல்களின் அடிப்படையில்தான் அவ்வாறு கூறுகிறேன். தகுந்த ஆதாரம் இல்லாமல் எதுவும் கூறமாட்டேன்.

புலிகள் அமைப்பு இல்லாமல் தற்போது ஈழத்தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பொறுப்புகளிலும் இருக்கிறார்கள். ஆனால், புலிகள் அமைப்புகளால் இதுவரை பேரழிவுதானே நடந்திருக்கிறது என்று விமர்சனம் வைக்கப்பட்டிருகிறதே? புலிகள் அமைப்புகளால் என்ன நன்மை நிகழ்ந்திருக்கிறது?

புலிகளின் அமைப்பு இல்லாத நிலையில் வடக்குமாகாணத்தில் தேர்தல் நடைபெற்று சிங்களக் கட்சிகளின் வேட்பாளர்களும், அவர்களின் ஆதரவாளர் களும் தோற்கடிக்கப்பட்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மாகாண முதல்வராக விக்னேசுவரன் பதவி ஏற்றுள்ளார். ஆனால் தனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்பதை அவர் வெளிப்படையாக பலமுறை கூறியிருக்கிறார். தமிழர் பகுதியில் உள்ள சிங்கள இராணுவ முகாம்கள் அகற்றப் படவில்லை. போருக்குப்பின்னால் சிறை பிடிக்கப்பட்ட பல்லாயிரக்கணக் கானவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. போர்க் குற்றங்களில் ஈடுபட்ட இராணுவத்தினர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்ட விவசாய நிலங்கள் திருப்பித்தரப்படவில்லை. தமிழர்கள் பகுதியில் சிங்கள குடியேற்றம் நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. தமிழ்ப் பெண்கள் பாதுகாப்பு இல்லாத நிலையில் வாழவேண்டிய பரிதாபம் நீடிக்கிறது. ஈழத் தமிழர்கள் எத்தகைய சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை இவை எடுத்துக்காட்டுகின்றன.

புலிகள் அமைப்பினால்தான் பேரழிவு நடந்திருக்கிறது என்ற விமர்சனம் அபத்தமானது. 2 இலட்சம் தமிழ் மக்களை புலிகள் சுட்டுக் கொல்லவில்லை. அவர்களின் சாவுக்கும், பேரழிவிற்கும் சிங்கள இராணுவமும் அதற்கு இராணுவ ரீதியாக எல்லாவகையான உதவிகளையும் செய்த இந்தியா, சீனா, பாகிஸ்தான் உட்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளே காரணம். போரின் இறுதிக்கட்டத்தில் தங்களின் ஆயுதங்களை மெளனிப்பதாக புலிகள் அறிவித்த பிறகும் இந்தியாவோ அல்லது ஐ.நா.வோ தலையிட்டு போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் இந்தப் பேரழிவைத் தடுத்திருக்க முடியும். அதைச் செய்ய தவறியவர்கள்தான் குற்றவாளிகளே தவிர, புலிகளல்லர்.

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு ஜெனரல் டயர் காரணமல்ல, காங்கிரசுக் கட்சிதான் காரணம் என்று கூறுவது எத்தகைய தவறோ, அதைப் போன்ற தவறுதான் ஈழத்தில் நடந்த பேரழிவிற்குப் புலிகள் காரணம் என்று கூறுவதாகும்.

இன்றைய இலங்கை தமிழரின் நிலைமை எப்படி இருப்பதாக நினைக்கிறீர்கள்?அவர்களுடைய உரிமைகளைப் பெற புலிகள் அமைப்பு மீண்டும் தேவையா? அல்லது போராட்ட வடிவத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

நாம் "எத்தகைய போராட்ட முறையைக் கையாளவேண்டும் என்பதை நம்முடைய எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள்' என்று சீன தலைவர் மாசேதுங் கூறினார். ஈழத்தமிழர்களுக்கு இது முற்றிலும் பொருந்தும்.

கிழக்கு மாகாண தளபதியாக இருந்த கருணா கைதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

உலக வரலாற்றில் துரோகிகளுக்கு என்ன நேர்ந்ததோ அது கருணாவுக்கும் நேர்ந்திருக்கிறது.

இலங்கை அதிபர் சிறிசேனா தமிழர்களை மதிக்கிறாரா? அவருடைய செயல்பாடு எப்படி இருப்பதாக நினைக்கிறீர்கள்?

இலங்கை விடுதலை பெற்ற நாள் முதல் இன்றுவரை சிங்களத் தலைவர்களின் போக்கு தமிழர் பிரச்சினையில் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. அதிலிருந்து அவர்கள் மாற முடியாது. சிங்கள மக்களிடையே இனவெறியைத் தூண்டி அதில் ஆதாயம் அடைவதில் சிங்களத் தலைவர்களிடையே போட்டா போட்டி நிலவுகிறது. தமிழர்களை ஒடுக்குவதில் யார் முதன்மையாக இருக்கிறார்கள்? என்பதே அங்குள்ள அரசியலாகும். இராசபக்சே இனப்படுகொலையை வெளிப்படையாக செய்தார். சிறீசேனா அதை சிறுகச்சிறுக அமைதியாக செய்கிறார். இராணுவத்தை மீறி செயல் பட சிறீசேனாவுக்கு துணிவு கிடையாது. துணிந்தால் இராணுவப் புரட்சி நிகழும்.

ஈழம்-புலிகள் பிரச்சனை என்றாலே நீங்கள்-வைகோ என்ற நிலைமாறி தற்போது சீமான்-வேல்முருகன் என்று இளம்தலைமுறையினர் வந்துள்ளார்கள். இதனை வரவேற்கிறீர்களா? இல்லை அவர்கள் பாதகமாக இருக்கிறார்கள் என்று விமர்சனம் வைக்கிறீர்களா?

ஈழப் பிரச்சினையில் தமிழகக் கட்சிகளின் ஆதரவும், மக்களின் ஆதரவும் நாளுக்குநாள் பெருகிக்கொண்டே வருவதையே இது காட்டுகிறது. இந்தப் போக்கை வரவேற்கிறேன்.

புலிகள் பிரச்சனையாக இருந்தாலும் சரி-தமிழக அரசியலாகட்டும் இன்னமும் கூட கருணாநிதியை எதிர்க்கிற அளவுக்கு ஜெயலலிதாவை எதிர்ப்பதில்லையே நீங்கள் - வைகோ - வேல்முருகன் - சீமான் - ராமதாஸ் உட்பட தமிழ் அமைப்புகள்? என்ன காரணம்?

தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என பெருந்தலைவர் காமராசர் கூறியது தொலைநோக்குப் பார்வை கொண்டதாகும். அவர் கூறியதில் எவ்வித மாற்றமும் இப்போதும் இல்லை. என்னைப் பொறுத்தவரையில் இரு கழகங்களும் தமிழகத்தை ஊழல் காடாக்கிவிட்டன. தமிழகத்தின் இயற்கை வளங்கள் தங்கு தடையின்றி சுரண்டப்படுகின்றன. இந்தப் போக்கு நீடிக்குமானால் எதிர்கால தலைமுறையினர் பாழ்பட்ட பாலைவனமான ஒரு நாட்டில்தான் வாழவேண்டியிருக்கும்.

இரு கழகங்களும் தில்லியில் யார் ஆட்சியில் இருந்தாலும் அவர்களுடன் உறவுகொள்வதில் போட்டா போட்டி போடுகின்றன. இதன் காரணமாக மத்திய ஆட்சியில் பங்கு பெற்றாலும் தமிழகத்தின் தலையாய பிரச்சினைகளான காவிரி, முல்லைப் பெரியாறு, ஈழத்தமிழர் பிரச்சினை போன்றவற்றைத் தீர்ப்பதற்கு எதுவும் செய்யவில்லை. தில்லியின் குடை நிழலில் தங்களுடைய ஊழல் ஆட்சியை எவ்வித தடையுமில்லாமல் நடத்தினால் போதும் எனக் கருதுகின்றன. இவர்களைத் தொடர்ந்து விமர்சனம் செய்வதில் எங்களது தமிழர் தேசிய முன்னணி முக்கிய பங்கு வகிக்கிறது.

சமீபத்தில் நடந்த நளினி புத்தக வெளியீட்டு விழாவில் நீங்கள் ஏன் கலந்துகொள்ளவில்லை? அந்த புத்தகத்தின் அணிந்துரையில் உங்களை மிக சிறப்பாகவும், உயர்வாகவும் கூறியுள்ளார்கள். அப்படியிருந்தும் கலந்து கொள்ளவில்லையே? அந்த புத்தகம் படித்தீர்களா? அதுபற்றிய தங்களின் கருத்தென்ன?

ஏற்கெனவே மதுரையில் வேறு நிகழ்ச்சிக்கு ஒப்புக்கொண்டிருந்த காரணத்தினால் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலவில்லை. உலகில் எந்தப் பெண்ணும் இதுவரை அனுபவித்து அறியாத கொடுந் துன்பங்களை ஒரு பாவமும் அறியாத நளினி அனுபவித்துவிட்டார். அவருக்கு நேர்ந்த இந்நிலை வேறு எந்தப் பெண்ணுக்கும் வரக்கூடாது.

தமிழ்- தமிழர்நலன் - இனநலன் - போன்றவற்றை முன் வைத்து அரசியல் நடத்துவதில் நீங்கள், வைகோ, ராமதாஸ், வேல்முருகன், சீமான் அனைவரும் ஒன்றுபடுகிறீர்கள். ஆனால் ஒரே அமைப்பாக ஏன் உங்களால் சேர்ந்து செயல்பட முடியவில்லை?

அவரவர்கள் வகுத்துக்கொண்ட வழியில் அவரவர்கள் செயல்படுகிறார்கள். ஒன்றுபடவேண்டிய பிரச்சினைகளில் ஒன்றுபடுகிறோம். காலப்போக்கில் இணைந்து செயல்படும் சூழ்நிலை உருவாகும்.
இரண்டரை ஆண்டுகால மோடியின் ஆட்சியை எப்படி பார்க்கிறீர்கள்? 500-1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது குறித்து என்ன நினைக்கிறீர்கள்? அதனால் நீங்களும் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா?
500-1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதன்மூலம் கறுப்புப் பணமும், அதைப் பதுக்கியவர்களும் எந்தளவு ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது போகப்போகத்தான் புரியும். ஆனால் கறுப்புப் பணத்திற்குக் கொஞ்சமும் தொடர்பில்லாத அப்பாவி பொதுமக்கள், சிறு வணிகர்கள், விவசாயிகள் போன்றவர்கள் தங்கள் கையிருப்புப் பணத்தை மாற்ற முடியாத துன்பத்திற்குத் தேவையில்லாமல் ஆளாகியிருக்கிறார்கள். மக்களில் பெரும்பாலோருக்கு வங்கிக் கணக்கு கிடையாது. அவர்களின் நிலைமையை எண்ணிப்பார்த்து அதற்கேற்ற செயல் திட்டம் வகுக்கப்படவில்லை.

மக்கள் நலக் கூட்டணி குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

இரு கழகங்களும் அல்லாத மூன்றாவது அணி ஒன்றின் ஆட்சி ஏற்படவேண்டும் என்பது தமிழக மக்களின் நீண்டகால விருப்பமாகும். அந்த விருப்பத்திற்கு ஏற்றவாறு நடந்துகொண்டு மக்களின் நம்பிக்கையைப் பெற மக்கள் நலக் கூட்டணி தவறிவிட்டது.

முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் உள்ள நிலையில் தமிழக நிர்வாகம் எப்படி உள்ளதாக நினைக்கிறீர்கள்?

தமிழக அரசியல் நிருவாகம் தற்போது ஆளுநராலும், அதிகாரிகளாலும் நடத்தப்படுகிறது. அமைச்சர்கள் பொம்மைகளாக இருக்கிறார்கள். உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தும் நமக்குரிய நீரைத்தர கருநாடகம் மறுத்ததின் விளைவாகவும், பருவமழை பொய்த்துப் போனதின் விளைவாகவும் காவிரிப் பாசன விவசாயிகள் அடைந்துவரும் பெருந்துன்பத்தை நேரில் காணவும், அவர்களின் துயரைப் போக்கவும் கூடச் செயலற்றவர்களாக அமைச்சர்கள் விளங்குவது ஒரு எடுத்துக்காட்டாகும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு இதுவரை உடன்படாதது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தீர்ப்பளித்த பிறகும், முந்திய மன்மோகன் சிங்கின் அரசும், தற்போதைய மோடியின் அரசும் அதை நிறைவேற்றவில்லை. கருநாடகத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தங்கள் கட்சிகளின் வெற்றியை அவை பாதிக்கும் என்ற அரசியல் ஆதாய நோக்குடன் நடந்துகொள்கின்றன. இதன் விளைவாக தேசிய ஒருமைப்பாடு என்பது கேலிக்கூத்தாக்கப்பட்டிருக்கிறது. கருநாடகத்திலும், கேரளத்திலும் மாறிமாறி அகில இந்தியக் கட்சிகளே ஆட்சி பீடத்தில் அமருகின்றன. ஆனாலும், அரசியல் சட்டத்தையோ, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையோ அக்கட்சிகள் மதிக்க மறுக்கின்றன. இக்கட்சிகளின் அகில இந்தியத் தலைவர்கள் தலையிட்டு தங்கள் மாநில கட்சியினரைக் கண்டிக்கும் துணிவோ, தகுதியோ இல்லாமல் போனார்கள் என்பது இரங்கத்தக்க இழிநிலையாகும். தொலைநோக்குப் பார்வையற்ற இவர்களால் இந்திய ஒன்றியத்தின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த நீங்கள், அதிலிருந்து வெளிவந்து விடுதலைப்புலிகளைத் தொடர்ந்து ஆதரிக்க என்ன காரணம்? காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளிவர கசப்பான அனுபவம் என்ன?

1978ஆம் ஆண்டில் இந்திராகாந்தி அவர்கள் தலைமையமைச்சராகவோ, எதிர்க்கட்சித் தலைவராகவோ கூட இல்லை. ஆனால், அவர் தமிழகம் வந்தபோது அவரை எதிர்த்து தி.மு.கழகம் கறுப்புக்கொடி காட்டியது. ஆளுங்கட்சியைச் சேர்ந்த தலைமையமைச்சரோ, முதலமைச்சரோ, அமைச்சர்களோ வரும்போது எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் சில பிரச்சினைகளுக்காக கறுப்புக்கொடி காட்டுவது ஜனநாயக மரபாகும். இச்சூழ்நிலையில் எந்தப் பதவியிலுமில்லாத இந்திராகாந்தி அவர்களுக்கு தி.மு.க. கறுப்புக்கொடி காட்டியது ஜனநாயக மரபை மதிக்காத போக்காகும். சர்க்காரியா கமிசன் அளித்த பரிந்துரைகளின் மீது நடவடிக்கை எடுப்பதிலிருந்து தப்புவதற்காக அப்போதைய தலைமையமைச்சர் மொரார்ஜி தேசாயைத் திருப்திப்படுத்த தி.மு.க. கையாண்ட தந்திரமாகும். தி.மு.க. வெறியர்களின் கொலைவெறித் தாக்குதலிலிருந்து இந்திராகாந்தி அவர்களைக் காப்பாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஆனால், அதற்கடுத்த ஆண்டே தி.மு.க.வுடன் கூட்டு சேருவது என அவர் எடுத்த முடிவை என்னால் ஏற்க இயலவில்லை. அவருடன் வாதாடிப் பார்த்தேன். செத்துக்கொண்டிருக்கும் தி.மு.க.வுடன் கூட்டுச் சேர்ந்து அதற்கு உயிர்கொடுத்துவிடாதீர்கள் என மன்றாடினேன். காங்கிரஸ் தனித்து நின்றாலும் பத்துக்குக் குறையாத நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றிபெற முடியும் என்பதை ஆதாரப்பூர்வமாக எடுத்துக்காட்டினேன். ஆனால் அதை அவர் ஏற்கவில்லை. எனவே காங்கிரசிலிருந்து விலகினேன்.

அறவழியில் போராடிய ஈழத்தமிழர்களுக்கெதிராக இராணுவ ஒடுக்குமுறைகளை சிங்கள அரசு மேற்கொண்டபோது அதை எதிர்த்து விடுதலைப்புலிகள் ஆயுதம் தாங்கி தங்கள் மக்களைக் காக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். எனவே, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு அளிப்பதன் மூலம்தான் ஈழத் தமிழர்களுக்கு உதவ முடியும் என்பதால் புலிகளைத் தொடர்ந்து ஆதரித்தேன். இனியும் ஆதரிப்பேன்.

தற்போதுள்ள தமிழகக் காங்கிரஸ் கட்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்? நீங்கள் இருந்தபோது இருந்த காலகட்டமும், தற்போதும் எப்படி இருப்பதாக நினைக்கிறீர்கள்?

காமராசர் காலத்தில் காங்கிரசுக் கட்சியில் தொண்டர்களின் கருத்துக்கு இருந்த மதிப்பு இப்போதைய காங்கிரசில் இல்லை. உள்கட்சி ஜனநாயகமும் அறவே கிடையாது. தமிழ்நாடு காங்கிரசுத் தலைவர் பதவியிலிருந்து வட்டார காங்கிரசுத் தலைவர் பதவி வரை தில்லியிலிருந்தே நியமிக்கப்படுகிறார்கள். அவ்வாறு நியமிக்கப்படுகிறவர்கள் தில்லி தலைமைக்கு மட்டுமே விசுவாசம் காட்டுகிறார்கள். கீழ்மட்டத்தில் உள்ள தொண்டர்களையோ, மக்களையோ அவர்கள் மதிக்கவேண்டிய தேவை இல்லை. தமிழ்நாட்டில் இரு கழகங்களில் ஏதாவது ஒன்றுடன் கூட்டு சேர்ந்து ஒரு பத்து இடங்கள் நாடாளுமன்றத்தில் கிடைத்தால் போதும் என தில்லி தலைமை நினைக்கிறது. அதற்கு தமிழக காங்கிரசைப் பலிகொடுக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் வளர்வது என்பது பகல் கனவாகிவிட்டது.

பொதுவாகவே தமிழர்நலன் சார்ந்த அமைப்புகள் சாதிக்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதில்லை என்ற விமர்சனம் தமிழர் அமைப்புகள் மீது முன்வைக்கப்படுகிறதே?

சாதிகளற்ற சமுதாயம் அமைந்தால்தான் தமிழ்த் தேசியம் மலரும் என்பதில் தமிழ்த் தேசியவாதிகளுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. சாதிய உணர்வைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேடும் கட்சிகள் தமிழ்த் தேசியவாதிகளை விமர்சிப்பதற்கு இதுவே காரணமாகும்.

முன்னர் இருந்த ஈழத் தமிழர் ஆதரவு தற்போது அரசியல் கட்சிகளிடம் இல்லையே? என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலை தற்போதைய அரசியல் கட்சிகளிடம் இல்லை என்று கூறுவது தவறானதாகும். தமிழக மக்களைப் பாதிக்கும் பிரச்சினையாக இது இன்னமும் உள்ளது. எனவேதான் தமிழக சட்டமன்றத்தில் தனித் தமிழீழத்திற்கு ஆதரவான தீர்மானத்திற்கும், போர்க் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்பதற்கும் அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஆதரவு தந்து நிறைவேற்றித் தீரவேண்டிய இன்றியமையாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழீழப் பிரச்சினை தமிழக மக்களிடையே இன்னமும் நீறு பூத்த நெருப்பாக இருக்கிறது. தொடர்ந்து இருக்கும்.

தொடர்ந்து பா.ஜ.க. அரசு இந்தித் திணிப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வருவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
இதில் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை. பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் நோக்கம் என்பது சமற்கிருதத்தை இந்தியாவின் தேசிய மொழியாகவும், ஆட்சிமொழியாகவும் ஆக்குவதுதான். அதற்கு முன்னோட்டமாக இந்தித் திணிப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தங்களது குடும்பம் பற்றி கூறுங்கள்?

எங்கள் குடும்பம் தமிழ்த் தொண்டில் ஈடுபட்ட குடும்பமாகும். எனது பாட்டனார் கிருஷ்ண பிள்ளை காலத்தில் பல தமிழறிஞர்களின் நூல்களைப் பதிப்பித்தார். குறிப்பாக, தமிழ் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் அத்தனை நாடகங்களையும் முதன்முதலாக அச்சிட்டவர் அவரே. தமிழ்நாட்டின் முதல் நாட்காட்டியான விவேகானந்தா நாட்காட்டியை தமிழ் எண்களுடன் வெளியிட்டவர் அவர்தான். அவருக்குப் பின் எனது தந்தையார் கி. பழநியப்பனார் அவர்கள் மதுரையில் திருவள்ளுவர் கழகத்தைத் தோற்றுவித்தார். மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் செயலாளராகப் பணியாற்றினார். தமிழவேள் பி.டி. இராசனுடன் இணைந்து மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் பொன்விழாவினையும், திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுவிழாவினையும், முத்தமிழ் மாநாட்டினையும், தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் தமிழ்த் திருநாளையும் மக்களின் பேராதரவோடு நடத்தியவர். அவர் வழியில் நானும் எங்கள் குடும்பத்தினரும் தமிழ்த் தொண்டில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறோம்.

2009 ஈழப்போர் காலக்கட்டத்தில் தி.மு.கவும், அதன் எம்.பிக்கள், அமைச்சர்களும் துரோகம் இழைத்தார்கள் என்று கூறுகிறீர்கள்? அப்படி கூற என்ன காரணம்?

2009ஆம் ஆண்டு ஈழத்தில் போர் மிகக் கடுமையாக நடந்த காலத்தில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களின் துணையுடன்தான் மத்தியில் காங்கிரசு ஆட்சி இருந்தது. தமிழகத்தில் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் தி.மு.க. காங்கிரசுக் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி நடத்தியது. இந்த காலக்கட்டத்தில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யாவிட்டால் மத்திய ஆட்சிக்குக் கொடுத்த ஆதரவைத் திரும்பப் பெறுவோம் என தி.மு.க. உண்மையாக மிரட்டியிருந்தால் இந்திய அரசு பணியவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும். ஆனால், தன்னுடைய ஆட்சியும் கவிழ்ந்து போகுமே என கருணாநிதி அஞ்சினார். எனவே அவர் உண்ணா நோன்பு நாடகத்தை நடத்தி பிரச்சினையை திசைதிருப்ப முயன்றார். தனது ஆட்சி பறிபோனாலும் கவலையில்லை என்ற நிலைப்பாட்டை அவர் எடுத்திருந்தால் 2 இலட்சம் தமிழர்கள் படுகொலையாவதிலிருந்து காப்பாற்றியிருக்க முடியும். தமிழ்நாட்டு மக்கள் நடுவிலும் அவருக்கு என்றும் அழியாத புகழ் கிடைத்திருக்கும். அதை செய்யத் தவறியதின் விளைவாக இன்னமும் அந்தப் பழியினை அவர் சுமந்து திரியவேண்டிய நிலையில் இருக்கிறார்.

1956ஆம் ஆண்டில் ஒன்றுபட்ட பம்பாய் மாநிலம் மராட்டியம், குஜராத் என இரு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டபோது பம்பாய் நகரத்தின் மீது இரு மாநிலங்களும் உரிமை கொண்டாடின. தலைமையமைச்சராக இருந்த நேரு அவர்கள் இரு மாநிலங்களுக்கும் பொதுத் தலைநகரமாக பம்பாய் இருக்கட்டும் எனக் கூறினார். அதை எதிர்த்து கொந்தளித்த மராட்டிய மக்களின் மீது இராணுவம் சுட்டது. இதன் விளைவாக பல நூற்றுக்கணக்கான மராட்டியர்கள் கொல்லப்பட்டனர். அப்போது மத்திய நிதியமைச்சராக இருந்த சி.டி. தேஷ்முக் அரசியல்வாதி அல்லர். ரிசர்வ் வங்கியின் கவர்னராக திறமையாகச் செயல்பட்டார் என்பதால்தான் நேரு அவரை நிதியமைச்சராக்கினார். ஆனால், அவர் ஒரு மராட்டியர். தனது மக்கள் நீதி கேட்டு போராடியதற்காகச் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டிக்கும் வகையில் தனது பதவி விலகல் கடிதத்தை நேருவுக்கு அனுப்பினார். நேரு தனது வாழ்க்கையில் என்றும் அடையாத அதிர்ச்சியை அடைந்தார். தான் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த ஒருவர் பதவி விலகியதே இதற்குக் காரணமாகும். உடனடியாக தனது முடிவை மாற்றிக்கொண்டு பம்பாய் நகரம் மராட்டியர்களுக்கே சொந்தமானது என அறிவித்தார். ஒரு தேஷ்முக் தனது பதவியைத் தியாகம் செய்ததின் மூலம் பம்பாய் நகரம் மராட்டியர்களுக்குக் கிடைத்தது. அதைப்போன்ற தியாக உணர்வு தி.மு.க. தலைவர் கருணாநிதி அவர்களுக்கு இருந்திருந்தால் நிச்சயமாக ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்ட பேரழிவைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும்.

நன்றி : "புதிய தலைமுறை'

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.