தன்னுடைய பேச்சாலும், எழுத்தாலும் தமிழக மக்களின் மனம் கவர்ந்த கவிஞர் இன்குலாப் காலமான செய்தியறிய மிக வருந்துகிறோம்.
தமிழகத்தின் புகழ்பெற்ற கவிஞர்களில் ஒருவரான இன்குலாப் சென்னையில் உடல்நலக் குறைவால் டிசம்பர் முதல் தேதியன்று காலமானார். 73 வயது நிரம்பிய அவரின் இயற்பெயர் சாகுல் அமீது என்பதாகும். இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பிறந்த இவர் சென்னை புதுக்கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக பணியாற்றினார்.
கவிதை, கட்டுரை, நாடகம் ஆகிய துறைகளில் சிறந்த நூல்களைப் படைத்துள்ளார். தமிழ்த்தேசிய சிந்தனையும், முற்போக்கு எண்ணமும் நிறைந்தவர். பழகுவதற்கு இனிய பண்பாளர். ஈழத் தமிழர் பிரச்சினையில் முழுமையான ஈடுபாடு கொண்டவர். தமிழகமெங்கும் பல்வேறு மேடைகளில் பாடப்படும் அவரது புரட்சிப் பாடல்கள் மக்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தின.
கடந்த 30 ஆண்டு காலத்திற்கு மேலாக அவருடன் நெருங்கிப் பழகி வந்திருக்கிறேன். அவர் உடல்நலன் குன்றியிருக்கும் செய்தியறிந்து சில மாதங்களுக்கு முன்னால் அவர் இல்லம் சென்று அவரைச் சந்தித்து உரையாடிய நிகழ்ச்சி இன்னமும் என் நெஞ்சைவிட்டு அகலாமல் இருக்கிறது. தமிழர் வரலாற்றினை ஒரு காவியமாகப் படைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார். அதை விரைந்து முடிக்கும்படி வேண்டிக்கொண்டேன். முள்ளிவாய்க்கால் முற்றத்திலேயே அதனுடைய அரங்கேற்றத்தை வைத்துக்கொள்ளலாம் என்று நான் கூறியபோது. அவரும் மகிழ்ச்சியோடு இசைவு தந்தார்.
ஆனால், இவ்வளவு விரைவில் அவர் மறைந்துவிடுவார் என நான் கருதவில்லை. அவரின் மறைவு தமிழ்த்தேசிய அரசியலில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது. விளம்பரம் எதுவும் விரும்பாமல் தன்னடக்கத்துடனும், தகைசால் பண்புடனும் அவர் தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்கூறும் நல்லுகிற்கும் தொண்டாற்றி மறைந்திருக்கிறார்.
அவரது பிரிவினால் வருந்தும் அவரது துணைவியார் கமருன்னிசா, புதல்வர்கள் செல்வம், இன்குலாப், புதல்வி ஆமீனா பர்வீன் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். |