தமிழக முதல்வர் செல்வி செயலலிதா அவர்களின் மறைவு தமிழக மக்களை துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்குப் பின்னர் அவரால் உருவாக்கப்பட்ட அ.இ.அ.தி.மு.க.வை கட்டுப்பாடு குலையாமல் கட்டிக் காத்து ஐந்து முறை ஆட்சியில் அமர்த்தியதற்கு அவரது தலைமையே காரணமாகும். கட்சியையும், ஆட்சியையும் தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இரும்புப் பெண்ணாக இறுதிவரை திகழ்ந்தார்.
காவிரி, முல்லைப் பெரியாறு போன்ற தமிழகத்தின் உயிர்நாடியான சிக்கல்களில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து சட்டரீதியான போராட்டம் நடத்தி தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டிய பெருமை அவருக்கு உண்டு.
ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தனித்தமிழீழம் அமைவதே தீர்வு என தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றிய பெருமை அவருக்கு மட்டுமே உரியது. இதன் மூலம் உலகத் தமிழர்கள் அனைவரின் பாராட்டிற்கும் உரியவராகத் திகழ்ந்தார்.
இராசீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற எழுவரின் விடுதலைக்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள் முழுமையாக வெற்றிபெறுவதற்கு முன் அவர் மறைந்தது வருந்தத்தக்க ஒன்றாகும்.
தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாமல் இடைவிடாமல் தொடர்ந்து போராடி வெற்றிகளைக் குவித்தவர். ஆணாதிக்கம் மிகுந்த அரசியலில் துணிவும், தீரமும் நிறைந்த, தனி ஒரு பெண்ணாக நிமிர்ந்து நின்று போராடி வரலாறு படைத்த புதுமைப் பெண் என அவர் என்றென்றும் நினைவு கூரப்படுவார்.
அவருக்கு நமது வீரவணக்கத்தையும், அ.இ.அ.தி.மு.க. தலைவர்கள் மற்றும் தோழர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம். |