நூல் மதிப்புரை PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 01 ஜனவரி 2017 00:00

இனமுழக்கம் -(பாவலர் நா. மகிழ்நன்)
மரபுப்பாக்கள் அருகி வரும் இக்காலத்தில், மிகச் சிறப்பான மரபுக் கவிதைகளை 104 தலைப்புகளில் தொகுத்து அதற்கு "இனமுழக்கம்' என்று தலைப்புக் கொடுத்த பாவலர் நா. மகிழ்நன் அவர்களுக்கு முதலில் பாராட்டுக்கள்!!

பெங்களூர் வாழ் தமிழரான இவர் தாய் மொழியாம் தமிழ் மொழியின் மேலும், தன் இனத்தின் மேலும் எவ்வளவு பற்றும், பாசமும் கொண்டுள்ளார் என்பது இவரின் ஒவ்வொரு வரிகளிலும் தெரிகிறது. ஈழத்தில் நடந்த கொடுமைகளும் அதை எதிர்த்துப் பேசக்கூட நாதியற்ற நிலையில் நாம் இருந்ததைப் பற்றியும் மனம் நொந்து கவிதை வடித்திருப்பது சோகத்தை வரவழைக்கிறது. "ஒன்றிணைவோம் வா'' என்ற தலைப்பில்,

"அரசியல் காழ்ப்புணர்வுவிட்டு - அழுக்கு
உரமாம் அகப்பகைபோக்கி - நரம்பின்
துடிப்பெலாம் தன்மானம் ஏற்ற தமிழா
குடிகாக்க ஒன்றிணைவோம் வா!
நம்மையும், மண்ணையும் சீரழித்து - நம்மினச்
செம்மையைச் சூழ்ச்சியால் வீழ்த்திய - பின்வந்தான்
புன்செயலை வீழ்த்த உலகத் தமிழரே
ஒன்றிணைவோம் பேரவையில் வா!

என்று நமக்கு வீரத்தையும், நம்பிக்கையையும் ஊட்டி தனது பாக்களால் இளைய சமுதாயத்தினரையும் விழிப்படையச் செய்துள்ளார். இதுபோல பல கவிதைகள் நெஞ்சில் நிற்கின்றது. அதேபோல் பல அருந்தமிழ்ச் சொற்களை இக் கவிதைகளில் பாவலர் புகுத்தியிருப்பது நிச்சயமாக வாசகர்களின் வரவேற்பைப் பெறும். வாழ்த்துக்கள்!

- தமித்தலட்சுமி

வாசித்ததில் யோசித்தது
தொகுப்பாசிரியர் - டாக்டர் வே.த. யோகநாதன்

"அனைத்துலக தமிழ் மாமன்றத்தின் சார்பாக இந்த ஆண்டின் பதிவாக வெளிவந்திருக்கும் நூல் "வாசித்ததில் யோசித்தது' என்ற இந்த தொகுப்பு நூல். ஆற்றல்மிகு கவிஞர்களின் அழகுமிகு கவிதைகள் பக்கத்திற்கு பக்கம் நம்மை ஈர்க்கின்றன. தமிழ் மொழியின் பால் உள்ள ஈடுபாட்டால், இளம் வயது பருவத்தினர் முதல் முதியவர்கள் வரை அள்ளி அள்ளி கொடுத்திருக்கும் அத்தனை கவிதைகளும் ஆழத்துடனும், அர்த்தத்துடனும் வெளிவந்துள்ளன. வேறு வேறு தலைப்புகளில், வித்தியாச பார்வைகளில் கவிஞர்களில் பலர் களமிறங்கியிருப்பது இந்த புத்தகத்தில் தெரிகிறது. மற்றும் இப்புத்தகத்தின் பின் பகுதியில் சிந்திக்க வைக்கும் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள், வாழ்வியலை ஒட்டிய கட்டுரைகள் என பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகளைத் தொகுத்துக் கொடுத்திருக்கும் ஆசிரியருக்குப் பாராட்டுக்கள்! வாசிக்கவும், யோசிக்கவும் செய்தது மட்டுமல்லாமல் வாசகர்களின் வரவேற்பையும், வாழ்த்துக்களையும் இத்தொகுப்பு பெற்றிருக்கிறது என்றும் சொல்லலாம்.

- தமித்தலட்சுமி

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.