தமிழனுக்குப் பெருமை சேர்த்திருக்கும் தமிழன் புலிட்சர் விருதுபெற்ற பழனிக்குமணன் பாராட்டு விழாவில் தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் புகழாரம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 01 ஜனவரி 2017 00:00

அமெரிக்காவின் மிக உயரிய விருதான புலிட்சர் விருதை பெற்றதால் நெ. பழனிக்குமணன், தமிழனுக்குப் பெருமை சேர்த்த தமிழனாகிறார் என்றார் தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன்.

புலிட்சர் விருதுபெற்ற மதுரை மென்பொறியாளரும் உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனின் மகனுமான நெ. பழனிக்குமணனுக்கு மதுரையில் 16-12-2016 வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற பாராட்டு விழாவில் தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் தலைமையுரையாற்றிப் பேசியது.

"மதுரை சேதுபதி பள்ளியில் படித்தபோது, பழ.நெடுமாறனின் தந்தை பழனியப்பனார் தலைமையில் அருள்மிகு மீனாட்சியம்மன் கோயில் வடக்கு ஆடி வீதியில் செயல்பட்ட திருவள்ளுவர் கழகத்தில் திருக்குறள் கற்றவன் நான். கல்லூரி நாள்களில் நாங்கள் எல்லாம் மதிக்கக்கூடிய அரசியல் தலைவராக இருந்தவர் பழ.நெடுமாறன்.
இன்று தமிழகத்தில் ஒரு எழுச்சியை அரசியல் தலைவரால் ஏற்படுத்த முடியும் என்றால் அதற்கு பழ.நெடுமாறன் மட்டுமே தகுதி உடையவராக இருப்பார். அவரை தமிழகத்தின் ஜெயப்பிரகாசு நாராயணன் என்று அழைத்தால் அது மிகையாகாது.

குறள்வழி வாழும் குடும்பம் என்பதற்குச் சான்றாக இருப்பது நெடுமாறன் குடும்பம்தான். தந்தை மகனுக்கு ஆற்றும் கடமை, மகன் தந்தைககு ஆற்றும் உதவி என்பதற்கு நெடுமாறனும் அவரது மகன் பழனிக்குமணனும் பொருத்தமாக இருக்கின்றனர். அமெரிக்காவின் உயரிய விருதைப் பெற்றதன் மூலம் தமிழனின் பெருமையை பழனிக்குமணன் உலகறியச் செய்திருக்கிறார்.

ஊடகத் துறையில் தொழில்நுட்பத்துக்கு விருது அளித்திருப்பது சாதாரண விடயம் அல்ல. ஊடகத்துறைக்கான தரவுகளைச் சேகரிப்பது என்பது, நமது நாட்டில் விசாரணை ஆணையங்களின் அளிக்கைகளைவிட துல்லியமானது. அத்தகைய அப்பழுக்கு இல்லாத பெரும் முயற்சிக்காக புலிட்சர் விருது வழங்கப்பட்டிருப்பது நாம் பெருமைப்படக்கூடிய விஷயம்.

ஆகவே இந்த விருதை தமிழகமும், தமிழனும் தமக்கு கிடைத்த விருதாகக் கொண்டாட வேண்டும். அதுமட்டுமல்ல இதுபோன்ற சர்வதேச விருதுகளையும், நோபல் பரிசுகளையும் பெற தமிழன் தயாராகிக் கொண்டிருக்கிறான் என்பதற்கு பழனிக்குமணன் முன்னோடியாயிருக்கிறார்.

அதே நேரம், இந்தியாவில் இத்தகைய உயரிய விருது வழங்கப்படுகிறதா என்று எண்ணிப் பார்த்தால் வேதனைதான் மிஞ்சுகிறது.

தகுதியுள்ளவர்களைத் தேர்வு செய்து விருது வழங்குவது மட்டுமே விருதுக்கும், விருது பெறுபவருக்கும் பெருமையைச் சேர்க்கும்' என்றார் தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன்.

புதிய பார்வை ஆசிரியர் ம. நடராசன் பாராட்டு

விழாவில் நெ. பழனிக்குமணனைப் பாராட்டி ம. நடராசன் பேசியது.

தமிழகமே சோகத்தில் இருக்கும்போது தமிழருக்கு அமெரிக்க நாட்டின் உயரிய விருது கிடைத்திருப்பது சோகத்திலும் ஆறுதலை தருகிறது. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்ற பழமொழிக்கேற்ப பழ.நெடுமாறனின் மகன் பழனிக்குமணன் தனது திறமையை நிரூபித்துள்ளார். பழ.நெடுமாறன் எத்தனையோ செய்திகளை தனது இதயத்தில் பூட்டி வைத்துள்ளார். அவற்றை அவர் வெளியே கூறினால் ஒரு வரலாறே வெளிவரும். அவர் அவற்றை வெளியிட வேண்டும். ஆனால் அமெரிக்காவில் எந்தத் தகவலையும் தங்களுக்குள் பூட்டி வைத்துக் கொள்ள மாட்டார்கள். உண்மையை உடனடியாக வெளிக்கொண்டு வந்து விடுவார்கள். இதே முறையில் பழனிக்குமணன் அமெரிக்காவில் காப்பீட்டுத் துறையில் நடந்த ஊழல் தொடர்பாக லட்சக்கணக்கான ஆவணங்களை சலித்து தொகுத்து அந்த நாட்டையே அதிர்ச்சியடைய செய்யும் வகையில் ஊழலை வெளிக்கொணர்ந்துள்ளார்.

நம் நாட்டிலும் ஊடகங்கள் உண்டு. இந்தியாவின் நான்காவது தூண் என்று பத்திரிகைகள் அழைக்கப்படுகின்றன. ஆனால் அந்தப் பெருமையை பாதுகாக்கும் வகையில் ஊடகங்கள் செயல்படுகிறதா என்பதை நாம் உணர வேண்டும். புலனாய்வு என்ற பெயரில் மற்றவர்களை மிரட்டும் வேலையைத் தான் ஊடகங்கள் செய்கின்றன. விற்பனை அதிகரிக்க, பரபரப்பை ஏற்படுத்த மக்களை திசைதிருப்பும் செய்திகளைத்தான் ஊடகங்கள் வெளியிடுகின்றன.

அமெரிக்காவில் ஊடகங்களுக்கு உள்ள துணிச்சல் இங்கு இல்லை. வெளிநாட்டில் உள்ள கறுப்புப் பணத்தை கொண்டு வருவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களின் பட்டியலைக்கூட வெளியிடவில்லை. அதை தட்டிக் கேட்கும் துணிச்சல் இங்குள்ள ஊடகங்களுக்கு இல்லை.

ஆனால் அமெரிக்க அரசையே அதிரச் செய்யும் ஒரு ஊழலை தமிழர் ஒருவர் வெளிக்கொணர்ந்துள்ளார் என்பது தமிழர்களுக்கெல்லாம் பெருமை.

ஒரு உயரிய விருதை பெறுவதற்கான உரிமை, உண்மை, அதற்கான உழைப்பு அனைத்தும் பழனிக்குமணனுக்கு உண்டு. இந்தியாவில் விருதுகள் அனைத்தும் விலைகொடுத்து வாங்கப்படுகின்றன. விளம்பரத்துக்காக மலிவான செய்திகளை வெளியிடாமல் ஊழலை வெளிக்கொணரும் துணிச்சலோடும் சமூகத்துக்கு சேவையாற்றும் உன்னத நோக்கத்தோடும் ஊடகங்கள் செயல்பட வேண்டும் - என்றார்.

சி. மகேந்திரன் பாராட்டு

பழ.நெடுமாறனின் மகன் பழனிக்குமணனுக்கு அமெரிக்காவின் மிக உயரிய விருதான புலிட்சர் விருது வழங்கப்பட்டுள்ளது. பலர் அந்த விருதை பெற்றிருந்தாலும் விருதின் பெருமை தெரியவில்லை. ஆனால் தமிழர் ஒருவருக்கு வழங்கப்பட்ட பிறகே விருதின் பெருமை அனைவருக்கும் தெரிகிறது. இந்த விருதை தகுதியானவர் மட்டுமே பெற வேண்டும் என்பதற்காக 120 நீதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. விருதாளரை தேர்ந்தெடுக்க 120 நடுவர்கள், மக்களால் தேர்வு செய்யப்படும் இரு நடுவர்கள் கூடி பட்டியலைத் தேர்வு செய்து அதில் இருந்து வாக்கெடுப்பு நடத்தி ஒருவரைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

தமிழகத்தில் பிறந்து வளர்ந்த ஒருவர் அமெரிக்கா போன்ற நாட்டில் ஒரு பத்திரிகையில் பணிபுரிந்து தலைமைப் பொறுப்புக்கு வருவது சாதாரணமல்ல. இன்றையச் சூழலில் கார்பரேட் ஊடகங்கள் மக்களின் உணர்வுகளை, சிந்தனைகளை வெளியிடாமல் தாங்களாகவே மக்கள் கருத்துக்களை உருவாக்கி வெளியிடுகின்றன. மக்களின் சிந்தனைகளை ஊடகங்கள் புறக்கணிக்கின்றன. ஆனால், வால்ஸ்டீரீட் போன்ற ஒரு சில பத்திரிகைகளே ஊழலை வெளிக்கொணரும் முயற்சியில் ஈடுபடுகின்றன. இந்தியாவிலும் போஃபர்ஸ் போன்ற சில ஊழல்கள் வெளிவந்தன. ஆனால் பழனிக்குமணன் ஊழலை வெளிக்கொணர்ந்ததோடு மட்டுமின்றி ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கமாகவும் அதை மாற்றியுள்ளார். உலகத்துக்கே தலைமை வகிக்கும் தலைமைப்பண்பு தமிழர்களுக்கு உண்டு என்பதை நிரூபித்துள்ளார்- என்றார்.

முன்னதாக விழாவில், மதுரை தமிழ்ச்சங்கச் செயலர் ச. மாரியப்ப முரளி, பேராசிரியர் கு. வேலன், மதுரைத் திருவள்ளுவர் கழகத் தலைவர் கமலை விசயராசன், பத்திரிகையாளர்கள் மு. குணசேகரன், மு. பாண்டியராசன், மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி திபேன், கா. பரந்தாமன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். எம்.ஆர். மாணிக்கம் அனைவரையும் வரவேற்றார்.

பி. வரதராசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். வெ.ந.கணேசன் நன்றியுரையாற்றினார்.

இதைத் தொடர்ந்து விழா ஏற்புரையில் நெ. பழனிக்குமணன் பேசும் போது, எனக்கு கிடைத்துள்ள விருது, தமிழ்ச் சமூகத்துக்கு கிடைத்துள்ள அங்கீகாரமாகவே கருதுகிறேன். பத்திரிகைத் துறை எங்கள் குடும்பத்துக்கு புதிதல்ல. எனது தந்தை உள்பட குடும்பத்தினர் பலர் எழுத்தாளர்களாகவும், பத்திரிகையாளர்களாகவும் உள்ளனர். முன்னோர் விட்டுச் சென்றுள்ள பணிகளைத் தொடரப்பாடுபடுவேன் என்றார்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.