தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட இளைஞர்கள் முன்வர வேண்டும் மயிலாடுதுறையில் பழ. நெடுமாறன் உரை PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 01 பெப்ரவரி 2017 16:05

"வஞ்சிக்கப்படும் தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க இளைஞர்கள் ஒருங்கிணைந்து போராட முன்வரவேண்டும்'' என்றார் தமிழர்தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன். நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் தமிழர் தேசிய முன்னணி சார்பில் 25-11-16 வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற, தமிழக திருநாள் 60 பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:

"ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு இருந்த இந்தியாவை மீட்டெடுத்த சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிராகப் போராடிய தில்லையாடி வள்ளியம்மையின் தியாகப் போராட்டம்தான், காந்தியை சுதந்திரப் போராட்டத்துக்கு வித்திடச் செய்தது என்ற வகையில், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை மகாத்மா காந்தியாக்கிய பெருமை தமிழகத்தையே சார்ந்தது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் வீரம், தியாகம் போற்றுதலுக்குரியது. நேதாஜி சுபாசு சந்திர போசு அமைத்திருந்த இந்திய தேசிய இராணுவத்தில் இடம் பெற்றிருந்த 80 ஆயிரம் வீரர்களில், 75 சதவீதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே இதற்கு ஓர் சான்று.

வீரத்தாலும், தியாகத்தாலும் அனைவரையும் திகைக்கச் செய்திருந்தவர்கள் தமிழர்கள். ஆனால், தற்போது தமிழகத்தின் அனைத்து உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு என அனைத்து நதி நீர் உரிமைகளையும் அண்டை மாநிலங்கள் மறுத்து, தமிழகத்தை வஞ்சித்து வருகின்றன.

தமிழகத்தின் நதிநீர் உரிமைகளை நிலைநாட்ட மத்திய அரசு தவறிவிட்டது. வஞ்சிக்கப்படும் அனைத்து உரிமைகளையும் தமிழகம் மீளப் பெறச்செய்யும் சக்தி இளைஞர்களிடம் மட்டுமே உள்ளது. தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க இளைஞர்கள் ஒருங்கிணைந்து போராடினால் மட்டுமே தமிழகத்தின் உரிமைகளை உறுதி செய்ய முடியும்'' என்றார் பழ. நெடுமாறன்.

தமிழர் தேசிய முன்னணியின் நாகை மாவட்டத் தலைவர் பேரா. இரா. முரளிதரன் தலைமை வகித்தார். தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர்கள் அயனாபுரம் சி. முருகேசன், சதா. முத்துக்கிருட்டிணன், திருவாரூர் மாவட்டத் தலைவர் மருத்துவர் பாரதிச்செல்வன் ஆகியோர் பேசினர்.

மாவட்டத் துணைத் தலைவர்கள் க. இராசேந்திரன், சோ. இராசராசன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தோழர் க. இராசவேல், நகரச் செயலாளர் அரங்க. பாசுகரன், நகரப் பொருளாளர் இரா. புசுபராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டப் பொருளாளர் அன்னை ப. சுகுமாறன் வேற்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளர்கள் வழக்கறிஞர் வேலு. குபேந்திரன் அய்யா, சுரேசு, முனைவர் சு. தமிழ்வேலு, தமிழ்த் தேசியப் பேரியக்கம் கு. பெரியசாமி, குயில்தோப்பு அறிவியக்கம், ஆ.பா. தமிழன்பன் ஆகியோர் பேசினர். நிறைவாக தமிழர் தேசிய முன்னணியின் நகரத் தலைவர் கவிஞர். வே. இரா. பூபதி நன்றி கூறினார். இப்பொதுக்கூட்டத்தில் மாவட்டத் துணைச் செயலாளர், தங்க. இரமேசு, தோழர்கள் மு. குமரேசன், கோ. மாதவன், கோ. பாலமணி, பால்ராசு, டி.ஆர். விசயகுமார், எஸ். மணியரசன், ஆர். கணேசன், எஸ். கார்த்திகேயன், தோழர். மாரி. பன்னீர்செல்வம், சு. சுசீந்திரன் மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செகவீரபாண்டியன் சீர்காழி தோழர் கோ. நடராசன், முனைவர். ச. அருள், த.தே.மு. திருவாரூர் மாவட்டச் செயலாளர் இரா. கலைச்செல்வன், அய்யா செகநாதன்,தேரழுந்தூர் தோழர் ரபீக். அருண், சசிக்குமார், தோழர் விக்னேசு, சீனிவாசன், பரணி, தங்க செல்வராசு, வேனில். இரவிச்சந்திரன், சிவவடிவேல், திருக்குறள் பேரவை இராமச்சந்திரன், தோழர் மருதுசாமி மற்றும் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இப்பொதுக்கூட்டத்தில் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு வளர்ச்சி நிதியாக ரூ.5,000/- வழங்கப்பட்டது.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.