இதே போன்று ஒரு உறைந்த மனோநிலையையோ, உணர்வு நிலையையோ இதற்குமுன்பு என் மனம் அடைந்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பனிகொட்டும் அதிகாலையில் அதுவும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஒரு பெரும் அரங்கில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அசைவற்று நின்றுகொண்டிருக்க, "தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே...'' பாடல் ஒலிக்கத் தொடங்கியதும் சிறுகச் சிறுக நெஞ்சம் விம்மி பாடல் வரிகளுக்கான காட்சிகள் விரிந்து போர்க்களமும், வீர மரணங்களும், நடுகல் (மாவீரர் கல்லறை) வழிபாடும் வந்து வந்து போய் இசை முடியும் நேரம் தளம் கட்டி நின்ற கண்ணீர் உடைந்து கொண்டு ஒவ்வொருவர் கன்னங்களிலும் உருண்டோடிக் கொண்டிருந்தது. நானும் எனது கண்களை துடைத்தபடியே மாவீரர்களின் படவரிசையினைப் பார்க்க அவர்கள் அத்தனைபேரும் அலங்கரிக்கப்பட்ட பூக்களுக்கிடையே என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் என்னைப்பார்த்து மட்டுமல்ல உலகத்திலுள்ள அத்தனைத் தமிழர்களையும் பார்த்து சிரிப்பதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். "இரண்டாயிரத்து ஒன்பது "மே' மாதம் வரை உறுதியோடு நாங்கள் போராடி உயிரை விட்டோமே அதற்குப் பின்பு எட்டு ஆண்டுகள் நீங்கள் தேசியத்திற்காக என்ன செய்தீர்கள்?'' என்று நாம் வெட்கப்பட்டு கூனிக்குறுக அவர்கள் கேள்வி கேட்பதாகத்தான் உணர்ந்தேன்.
பாடல் முடிந்து அடுத்த நிகழ்வாக ஒரு புறம் கலை நிகழ்ச்சிகளும், மறுபுறம் மாவீரர்களுக்கு "கார்த்திகைப்பூ'' வைத்து அகவணக்க மரியாதை செய்யும் நிகழ்வும் ஆரம்பமாயின. ஏற்கனவே இடைவெளியில்லாத அளவிற்கு அரங்கிற்குள் மக்கள். நேரம் கடக்கக் கடக்க மக்கள் திரள் கூடிக்கொண்டேயிருக்கிறது. கூட்டம் கட்டுக்கடங்காத அளவிற்கு இருந்தாலும், நம் ஈழ உறவுகளிடமிருந்த கட்டுக்கோப்பு, ஒழுங்கு, சுயமான அமைதித்தன்மை, யார் ஒருவரையும் முண்டியடிக்காமல் எவ்வளவு நேரம் கடந்தாலும் அவர்கள் பால்மாறாமல் வரிசையில் நின்று கடந்து சென்று மரியாதை செய்த விதம் என்னை ஆச்சரியப்பட வைத்தது. குழந்தைகளாக இருந்தாலும், பெரியவர்களாக இருந்தாலும் மிக நீண்ட வரிசையும் அதுவும் அரங்கையும் தாண்டி அந்த பெரு மைதானத்தின் வாசல்வரை - குளிரைக்கூட பொருட்படுத்தாமல் கையில் நெருப்புப் பூவோடு அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். அந்த வாசலில் இருந்து மேலேறும் இடத்தில் தார்ச்சாலை. அங்கிருந்து வட்ட வடிவில் வலதுபக்கமாக கிட்டத்தட்ட இரண்டு கிலோ மீட்டருக்கு வாகன நெருக்கடி (டிராபிக்). உடனிருந்த ஏற்பாட்டாளர் எனக்கு சொல்கிறார்: "அவைகள் அனைத்தும் நம்மட சனங்கள் வருகிற வாகனங்கள்.''
மாவீரர்களின் படங்களைப் பார்த்து கண் கலங்கும் சிலர், அந்த இடம் கடக்கும் போது தடுமாறும் சிலர், கதறி அழும் பெண்கள், பெருமூச்சுவிடும் பலர்... விதவிதமான துக்கங்களை வெளிப்படுத்தும் எனது உறவுகளை பார்க்க அவ்வப்போது எனக்கும் நெஞ்சுக்கும் தொண்டைக்கும் ஏதோ ஒன்று உருண்டு அடைப்பதுபோல் சொல்ல முடியாத வலியாக இருந்தது. படத்தில் இருப்பவரோடு ஏதோ ஒரு விதத்தில் அவர்கள் பழகியிருக்கலாம். களத்தில் ஒன்றாக நின்றிருக்கலாம், அல்லது உடன் பிறந்திருக்கலாம், அல்லது பெற்றவராக இருக்கலாம். அனைவரும் ஒரு மொழியைப் பேசுகிற உறவாக இருக்கிற எனக்கே இவ்வளவு துக்கம் என்றால் ஒரு மடியில் வளர்ந்தவர்கள் எப்படி ஆறுதல் அடைய முடியும்?
குழந்தைகள், மாணவ - மாணவியர்கள், பெரியவர்கள் என கலை நேர்த்தி மிகுந்த நாடகம், நாட்டியம், விளையாட்டு, இசைக்கச்சேரி என மிக அற்புதமான நிகழ்வுகள் நடந்தவண்ணமிருக்க வந்த மக்கள் உட்கார்ந்தும், நின்ற நிலையிலும் பார்த்துக்கொண்டிருக்க மிகப்பணிவோடு கனடா காவல்துறையை சார்ந்தவர்கள் நமது ஏற்பாட்டாளர்களை சந்தித்து ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய வாகன நெருக்கடியை விளக்கி அரங்கத்திலிருப்பவர்களை வெளியேற்றி வெளியிலிருப்பவர்களை உள் அழைத்துக்கொள்ளுமாறு வேண்டிக்கொண்டு, தவறினால் வேறு வழியில்லாமல் வாகனத்திலிருப்பவர்களை தாங்கள் திரும்ப அனுப்ப வேண்டியிருக்கும் என்று சுட்டிக்காட்ட - செய்தியினை அறிவிப்பாளர் வெளியிடுகிறார். போதுமான அளவிற்கு கூட்டம் அடுத்த பத்து நிமிடத்திற்குள் அரங்கை விட்டு மட்டுமல்ல மைதானத்தை விட்டே எந்தவித சலசலப்புமில்லாமல் வெளியேறி தங்களின் உறவுகளுக்கு வழிவிட்டது மெய்சிலிர்ப்பதாகயிருந்தது.
இந்த இடைவெளி நேரத்தில் அமெரிக்காவின் வாசிங்டனில் நடந்து கொண்டிருக்கும் மாவீரர் நிகழ்வில் அலைபேசி வழியாக மாவீரர் உரை நிகழ்த்த அரங்கினை விட்டு நான் வெளியே வந்திருந்தேன். காலையிலிருந்தே ஒரு குழு அரங்கிற்குள் எட்டிக்கூட பார்க்காமல் வருகின்ற வாகனங்களை ஒழுங்குப்படுத்திக்கொண்டிருந்தது. அதில் பரபரப்பாக இருந்த ஒருவரை விசாரித்தபொழுது கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு மேலாக தான் ஒருமுறை கூட மாவீரர் அரங்கிற்குள் வராமல் இப்படி வாகன ஒழுங்கு படுத்தும் வேலையில் இருப்பதாகவும், இதுவும் மிக முக்கியமான வேலைதானென்றும் அவர் பெருமைபொங்கப் பேசியது எனக்கு வியப்பாக இருந்தது.
அதே நேரத்தில் ஐம்பத்தைந்து வயதைக் கடந்த ஒருவர் எனது கையினை இறுகப்பற்றி அய்யா பழ.நெடுமாறன் அவர்களைப் பற்றிய விசாரிப்போடு தங்களுக்கு உயிர் கொடுத்து உதவியது எம்.ஜி.ஆர். என்றும், தமிழ்நாடு இல்லையென்றால் தாங்கள் இந்தளவுக்கான கட்டத்தை எட்டியிருக்க முடியாதென்றும் தலைவர் சொன்னதுபோல் என்றைக்கு இருந்தாலும் தமிழீழ விடுதலைக்கான திறவுகோல் தமிழ்நாட்டுத் தமிழர்களிடம்தான் இருக்கிறதென்றும் கூறி "உங்களைப்போன்ற இளைஞர்கள் எங்களுக்காக தமிழ்நாட்டில் போராடுவது பெருநம்பிக்கையளிக்கிறது'' என்று எதார்த்தமாகப் பேச, அவர் நெஞ்சிலிருந்து எழும் ஏதோ ஒரு உணர்வலைகள் அவரின் கைவழியே கடந்து என்னுள் இறங்கியபோது இதுவரை நான் செய்த ஆவணப் படங்களையும்விட, கல்லூரி மாணவர்களோடு நின்று போராடிய களப்போராட்டங்களையும் விட, நாம் இன்னும் இன்னும் உறுதியான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென்ற உரம் ஏறியது.
அதனைத் தொடர்ந்து அவர் பேசியதிலிருந்து அவர் வீட்டிலும், அவரின் உறவினர்களிலும் பலர் மாவீரர்கள் என்றும் அவரும் ஒரு போராளி என்றும் தெரியவந்தது. இறுதியாக, உங்களுக்கு எத்தனை குழந்தைகள் என்று நான் கேட்டபொழுது ஒரு புன்சிரிப்பு. அது சோகமா பெருமிதமா என்று என்னால் பிரித்துப் பார்க்க முடியவில்லை. சிறிய இடைவெளிவிட்டு "கல்யாணம் பண்ணிக்கலை, பண்ணிக்க விருப்பமில்லை'' என்றவர்,"தேசம் அடிமையாயிருக்கும் போது நான் கல்யாணம் கட்டி என்ன பண்ணப்போறேன். விடுதலை கெடைச்சதும் பண்ணலாமின்னிருந்தேன். வயசாயிடுச்சு. உங்களமாதிரி இளைஞர்கள் எல்லாம் இருக்கும் போது எங்களுக்கு என்ன கவலை? நம்பிக்கையிருக்கு தம்பி. நாடு விடுதலை அடையும்'' - விடாமல் பிடித்திருந்த என் கைகளை இன்னும் இறுக்கி கைகுலுக்கியபோது இருவரது கண்களிலும் கண்ணீர் துளிர்த்தது. அது பெருநம்பிக்கைக்கான கண்ணீர்த் துளிகள்!
மாவீரர் பாடல் இசைத்து காலையிலும், மதியமும் மாலையுமாக மூன்று நிகழ்வுகள். ஒவ்வொரு நிகழ்வும், உணர்வுபூர்வமாகவும் உக்கிரமாகவும் நடந்தேறியது. வெற்று மைதானமாக இருந்த இந்த இடத்தில் மிக பிரமாண்டமான அரங்கினை வடிவமைத்துக் கொண்டிருந்த நிகழ்வினை. இதற்கு முந்தைய நாள் இரவே நான் நேரில் சென்று பார்த்தேன். நடு இரவினைத் தொடும் அந்த நேரத்திலும் அலங்காரங்களும், தோரணங்களும், மேடை அமைப்புகளும், பள்ளி கல்லூரிகளில் படித்துக்கொண்டிருக்கும் நம் தமிழீழப் பிள்ளைகள் ஒழுங்குப்படுத்திக்கொண்டிருக்க-செயல்பாட்டாளர் கள் அவர்களை வழிநடத்திக் கொண்டிருந்தார்கள். உணவு அங்கேயே வரவழைக்கப்பட்டு இடையிடையே ஒவ்வொருவராக வந்து சாப்பிட்டபடி உற்சாகமும், பகடியும் (கிண்டலும்) பொறுப்புமாக அவர்கள் வேலை செய்த விதம் எனக்குள் பெருமிதத்தை உருவாக்கியது. கிட்டத்தட்ட ஒருமாத காலமாக பலநூறு பேர்கள் இதற்கான ஏற்பாட்டினை செய்ததாக அறிந்தேன்.
லட்சக்கணக்கான மக்கள் வந்து போனாலும் யாரும் பெருமைப்பட்டோ, தனக்கான மரியாதையை காட்டிக்கொண்டோ ஒருவர்கூட திரியவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தமிழீழத்திற்குப் பிறகு கனடாவில்தான் கிட்டத்தட்ட ஆறுலட்சம் பேருக்கு மேல் இருப்பதாக நாம் அறிகிறோம். உலகின் பல நாடுகளில் ஏதோ ஒரு சூழலின் காரணமாக "புகைச்சல்'' இருந்தாலும் ஏறக்குறைய எனக்குத் தெரிந்து தொண்ணூற்று ஐந்து சதவிகிதம் ஒற்றுமையைக் காணமுடிந்ததை பெரும் நெகிழ்வோடு எனது உறவுகளிடம் நான் தெரியப்படுத்தினேன்.
தொடர்ந்த கலை நிகழ்ச்சிகளூடாக இரவு நிகழ்வுகள் தொடர, உணர்வுரை ஆற்றுவதற்காக மேடைக்கு என்னை அழைக்கவே - காலையிலிருந்து விதவிதமான மன நிலைகளை அடைந்த நான் மேடையேறினேன். "மண்ணுக்காகவும், மானத்திற்காகவும் உயிரிழந்த அறுபத்தெட்டாயிரம் மாவீரர்களுக்கு வீர வணக்கம். எங்கள் மீதான யுத்தத்தை நடத்தியதும் பல வல்லரசுகள், எங்களுக்கான நீதியைத் தராமல் இழுத்தடிப்பதும் அதே வல்லரசுகள். நாங்கள் இந்த பூமிப்பந்தின் ஆதி இனம். இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் அவரவர் தாய்மொழியில் பேசுகிறார்கள். அவர்கள் பேசுகிற மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியான தமிழ் மொழியில் பேசுகிறவர்கள் நாங்கள். எங்களுக்கு துரோகம் செய்வது அறமாகாது. கரிகாலனும், இராசராச சோழனும், மேதகு பிரபாகரனும் தமிழினத்தின் வரலாற்றுக் குறியீடுகள். நாங்கள் மண்ணை இழந்திருக் கிறோம், உரிமையை இழந்திருக்கிறோம். உயிரை இழந்திருக்கிறோம். ஒரு காலமும் நம்பிக்கையை இழக்கமாட்டோம். அது இருக்கும்வரை இந்த உலகத்தில் எவராலும் எங்களை நிரந்தரமாக அழிக்க முடியாது. உலகத் தமிழினம் ஒரு ஆய்த எழுத்தைப்போல தாய்த் தமிழகமும், தமிழீழமும், புலம்பெயர் தமிழ் சமூகமும் இனி ஒன்றிணைந்து திட்டம் தீட்டி போராட வேண்டும். இளையோர்கள் செயல்பட பெரியோர்கள் வழிநடத்த வேண்டும்.
உலகம் ஒரு சுழற்சியில் இயங்குகிறது. நாங்கள் அய்யா தந்தை செல்வா வழியில் அறப்போராட்டத்திலும் அண்ணன் மேதகு பிரபாகரன் வழியில் ஆயுதப்போராட்டத்திலும் இரண்டாயிரத்து ஒன்பதுக்குப் பிறகு மீண்டும் அறப்போராட்டத்திலும் இயங்கிக் கொண்டிருக்கிறோம். உலகம் எங்களை மதித்து எங்களுக்கான நீதியினை தரவேண்டும். இல்லையென்றால் அறவழி, ஆயுதவழி, அறவழி என இப்போதைக்குத் தொடரும் போராட்டம் எதிர்காலத்தில் அதற்கடுத்து என்ன போராட்டம் என்பதை இந்த உலகம் பார்க்க வேண்டிய நிலை வரும். தொடர்ந்து நீதி மறுக்கப்பட்டால் அது உறுதியான போராட்டம் மட்டுமல்ல உக்கிரமான போராட்டமாக இருக்கும். ஏனென்றால் உலகம் ஒரு சுழற்சியில் இயங்கிக்கொண்டிருக்கிறது. தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்'' என முடித்தேன்.
ஆறுகள் ஓடிக்கொண்டிருப்பது அனைவருக்கும் தெரியும். அதில் பல ஆறுகளில் தண்ணீர் இல்லை. ஆனால் மண்ணுக்கடியில் பல்லாயிரக்கணக்கான ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அது அத்தனையும் நீர் நிறைந்து ஓடுகின்றன. அதன் பெயர்தான் இயக்கம். அதன் பெயர் மட்டும்தான் இயக்கம்.
எதிர்க்கத் துணிந்தால் தமிழ் மீளும் எதற்கும் துணிந்தால் தமிழ் ஆளும். |